Contact us at: sooddram@gmail.com

 

உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது

(கருணாகரன்)

உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது. இந்த வார்த்தைகளின் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஆற்றாமை சாதாரணமானதல்ல. இது ஆழ் அனுபவத்திற்குரிய – ஆழ் புரிதலுக்குரிய ஒன்று. இன்னுமே தணியாத இலட்சியதாகத்தோடிருக்கும் ஒரு ஈழ விடுதலைப்பேராளியின் அனுபவமொழி இப்படித்தான் கூர் வாளாக இதயத்தில் பாயும். எத்தனையோ முயற்சிகளுக்குப் பிறகும், எவ்வளவோ தியாகச்செல்களுக்குப் பின்னரும் இன்னுமே முடியாத இந்த அவலப்பரப்பு இதயத்தில் தீயைத்தான் மூட்டும். இலட்சியப் பிடிப்போடு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு முன்னோடியின்  முதுமைக்கால அனுபவங்களும் நிலையும் உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது என்று உணர்வதைத் தவிர வேறு எப்படி இருக்கமுடியும்?

இந்த நிலை, போராட்டம் சிதையத் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து தொடர்ந்திருக்கிறது. ஈழப்போராட்டம் எப்பொழுது சிதையத்தொடங்கியதோ அப்போதிருந்து இந்தத் துக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று துக்கப்பெருங்காடாகியுள்ளது. ஆனால், இந்த அடிப்படையான உண்மையைப் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை. அல்லது உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளின் வீழ்ச்சியும் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சியுமே தோல்வியாகவும் துக்கமாகவும் தெரிகிறது.

என்னை விட மூத்தவர்கள், முதல் தலைமுறையினர், என் சமகாலத்தவர்கள், எங்களுக்குப் பிந்தியவர்கள் என ஈழப்போராட்டத்தில் பங்கேற்று, சனங்களுக்காகவே தங்களைக் கரைத்த அத்தனை பேரின் இதயங்களிலும் கடந்து செல்ல முடியாத துக்கங்களும் அவற்றின் நிழலான நினைவுகளும் அலைமோதிக்கொண்டேயிருக்கின்றன. இந்தத் துக்கமென்பது சீர்ப்படுத்தவே முடியாத அளவுக்குச் சிதைந்து கொண்டிருந்த ஈழப்போராட்டத்தைப் பற்றியது. கூடவே, இன்று முழுச் சிதைவுக்குள்ளான போராட்டத்தையும் சனங்களைப் பற்றியதும்.

இங்கே எங்களின் முதல் தலைமுறையினரில் ஒருத்தி, எங்களுக்கு முன்னோடியாக இருந்த ஒருத்தி, போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் காயங்களையும் வலியையும் ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஒருத்தி, ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற தன்னுடைய அந்தக் கடந்த காலத்தின் துக்கப் பரப்பைக் கடக்க முடியாமற் திணறிக்கொண்டிருக்கிறாள். தன்னுடைய இனம் அனுபவித்து வரும் அதனுடைய துயரங்களையும் பாடுகளையும் கடந்து விடவேண்டும் என்பதற்காக அவள் தாங்கவே முடியாத அத்தனை சிரமங்களையும் பாடுகளையும் ஏற்றுக்கொண்டு தன்னாலியன்றவரை விடுதலைக்காக உழைத்தவள். ஆனால் அவளால் வெற்றியைப் பெற முடியவில்லை. மகிழ்ச்சியை எட்ட முடியவில்லை. ஆறுதலையும் நிம்மதியையும் அடையமுடியவில்லை. பதிலாக எல்லா நிலைமைகளும் மேலும் மோசமாகியே விட்டன. எதிர்நிலைகள் பெருகி எல்லா வாசல்களையும் அடைத்துள்ளன.

இதனால் அவளுடைய துயரநினைவுகள் அவளை அலைக்கழித்துக்கொண்டேயிருக்கின்றன. இந்த வரலாற்றைக்குறித்தும் சனங்களைக்குறித்தும், அவர்களுடைய எதிர்காலத்தைக்குறித்தும் அவள் இன்னமும் துக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறாள். இந்தத் துக்கமானது தனியே கடந்த காலத்தின் துக்கம் மட்டுமல்ல. நிகழ்காலத்தினதும் துக்கந்தான். ஏன் எதிர்காலத்தின் துக்கமும் கூட என்றே சொல்லவேண்டும்.

ஈழத்தமிழர்களின் கடந்த காலம் என்பது தவறுகளினாலும் குற்றங்களினாலும் அவற்றின் விளைவுகளால் ஏற்பட்ட பின்னடைவுகளாலும் தோல்விகளினாலும் ஆகியிருப்பதால், அது - கடந்த காலத்தின், நிகழ்காலத்தின், எதிர்காலத்தின்  என முக்காலத்தின் தோல்வியாகவும் அவற்றின் துக்கமாகவும் மாறியுள்ளது. இந்த நிலையில் இந்தப் பெண்ணின் - இந்தச் சகோதரியின், இந்தத் தோழியின், இந்தச் சகபயணியின், இந்த முன்னோடியின், இந்தப் புகழுக்குரிய போராளியின் துக்கம் பொதுத் துக்கமாக ஆகிறது. இவளின் அனுபவங்கள் எல்லோருக்குமான பொது அனுபவங்களாகின்றன.

எனவேதான் புஸ்பராணி (அக்கா) தன்னுடைய இந்த வரலாற்று ஆவணத்தை எழுத ஆரம்பிக்கும்போது,

மிகுந்த நம்பிக்கையுடனும் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளுடனும் தொடக்கப்பட்ட ஒரு நியாயமான போராட்டத்தை நாங்கள் தோற்றுவிட்டு நிற்கின்றோம். தமிழீழத்தை நோக்கிய போராட்டப் பாதையில் நெடிய நாற்பது வருடங்கள் கழிந்துவிட்டன.....  எங்களது நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இன்று ஆயுதம் தரித்த இராணுவத்தினர் உலாவிக்கொண்டிருக்கிறார்கள்..... தமிழர்களின் நிலப் பகுதியெங்கும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே சிவில் நிர்வாகம் நடந்துகொண்டிருக்கிறது. நாம் நேற்றிருந்த வீட்டில் இன்று புதிதாக ஒரு புத்தர் சிலையை யுத்தத்தில் வென்றவர்கள் நாட்டி வைத்திருக்கிறார்கள். போராளிகளின் கல்லறைகள் உடைத்து நொருக்கப்பட்டு அடையாளங்களற்ற கற்குவியல்களாக்கப்படும் காட்டுமிராண்டித்தனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பசியும் பிணியும் வேலையின்மையும் பெருகிக் குழந்தைகள் அகதி முகாம்களிலே பாலுக்குக் கையேந்தி நிற்பதாக வரும் செய்திகளைப் படிக்கையில் ஒரு தாயாக நான் உடைந்து போய்விடுகிறேன்.....

எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி இப்போதும சாம்பல் மேடாயிருக்கிறது...

என்று குறிப்பிட வேண்டியேற்பட்டுள்ளது.

இது யதார்த்தத்தின் வெளிப்பாடு. உண்மையின் உரைப்பு. ஈழப்  போராட்டப்பாதையைக்குறித்த விமர்சனம். போராட்ட வரலாற்றின் இறுதி விளைவைப் பற்றிய சித்திரம். மேலும் இது இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவரின் துக்கம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் மதிப்பீடு@ மேலும் தாங்கிக் கொள்ளவே முடியாத உள்ளக் குமுறல். ஆனால், இது பொதுத் துக்கமாகவும் பொது மதிப்பீடாகவும் பொதுநிலைப்பட்ட குமுறலாகவும் உள்ளது.

ஆகவே, ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகிய புஸ்பராணி (அக்கா) அவர்களின் ‘அகாலம் - ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகள் என்ற இந்த வரலாற்றுப் பதிவு, பல நிலைகளில் முக்கியம் பெறுகிறது. இது ஒரு வரலாற்றுப்  பதிவாக மட்டுமல்லாமல், கடந்த நாற்பது ஆண்டுகால ஈழ அரசியற் போக்குகளின் மீதான விமர்சனமாகவும் இந்தப் போராட்ட காலத்திற் செயற்பட்ட முன்னோடிகளைப் பற்றிய சித்திரங்களாகவும் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்தப் போராட்டத்தின்போது தன்னுடன் இணைந்து சகபயணிகளாகச் செயற்பட்டவர்களின் வாழ்வையும் வரலாற்றையும் பதிவாக்கியுள்ளார் புஸ்பராணி. இவ்வாறு பதியப்பெறும்பொழுது, இந்தக் காலகட்டத்தின் அரசியல் இயக்கங்களைப் பற்றியும் அவற்றின் தலைமைப்பொறுப்புகளிலிருந்தோரைப்பற்றியும் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள், அணுகுமுறைகள், அவர்களுடைய ஆளுமை, தனிப்பட்ட குணவியல்புகள் போன்ற முக்கியமான அம்சங்களைப் பற்றியும் கவனப்படுத்துகிறார். அதேவேளை அன்றைய சமூக அதிகார அடுக்குமுறை, இயக்கங்கள் மற்றும் கட்சிகளில் நிலவிய அசமத்தும், சிங்கள மேலாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இலங்கை அரசினதும் அதனுடைய பொலிஸ், சிறைச்சாலை போன்ற அதிகார அடுக்குகள் செயற்பட்ட விதங்களைப் பற்றியும் இந்தப்பதிவில் வெளிப்படுத்துகிறார்.

அச்சமற்ற வாழ்வை, விடுதலையை, சுமைகளற்ற நாட்களை, மகிழ்ச்சியை, இவற்றுக்கான வெற்றியைத் தருமென நம்பப்பட்ட ஈழப்போராட்டம் அழிவை நோக்கிச் சிதைந்ததன் விளைவு, ‘வாக்களிக்கப்பட்ட பூமி இப்போது சாம்பல் மேடாகியிருக்கிறது இதைக் குறித்து நாம் அதிகம் இங்கே பேசத்தேவையில்லை. ஏனெனில் இந்த விசயம் இன்று மிகப் பகிரங்கமானது. எல்லோருக்குமே தெரிந்தது. இதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கலாம். அல்லது இதற்கான பழிகளை ஒவ்வொருவரும் மற்றவர்களின் மீதும் பிற தரப்புகளின் மீதும் சுமத்தலாம். சிலர் தங்களையும் இதற்கான பொறுப்புக்குள்ளாக்கிப்; பேசலாம். ஆனால், வாக்களிக்கப்பட்ட பூமி சாம்பல் மேடாகியதற்கு.... மிதவாதப் போக்கில் வெறுப்புற்ற தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தரித்த விடுதலை இயக்கங்களாகத் திரண்டபோது இயக்கங்களை ஆதரித்து தமிழ் மக்கள் அவர்களுடன் நின்றார்கள். விடுதலை இயக்கங்கள்  வெகு விரைவிலேயே அதிகார மையங்களாக மாறுவார்கள் என்றும் சொந்த மக்களையே கொன்று குவிப்பார்களென்றும் அப்போது யாரும் கருதியிருக்கவில்லை. இயக்கங்களைத் தொடங்கிய போராளிகள் கூட அவ்வாறு கருதியிருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். என மிக எளிய வார்த்தைகளில் மிகச் சுருக்கமாக உண்மை நிலைமையை, யதார்த்த நிலையை, தன்னுடைய பார்வையை விளக்குகிறார் புஸ்பராணி.

வரலாற்றையும் நிகழ்ச்சிகளையும் கூர்மையாக அவதானித்து மதிப்பிடும் ஒருவருக்குத் தடுமாற்றங்கள் ஏற்படாது. இயக்கங்களைத் தொடங்கிய போராளிகள் கூட அவ்வாறு கருதியிருக்க மாட்டார்கள் என்று சொல்வது மிகச் சரியான உண்மையான கூற்று. இதை நான் என்வாழ்விலேயே நேரிற் கண்டிருக்கிறேன். எந்தப் போராளியும் அடுத்த இயக்கத்தை அழிப்பதற்காகவோ பொதுமக்களின் மீது துப்பாக்கியை நீட்டுவதற்காகவோ போராட்டத்தில் இணையவில்லை. ஆனால் விடுதலை இயக்கங்கள் அதிகார மையங்களாக மாறியமையே பின்வந்த விளைவுகளுக்கும் சீரழிவுகளுக்கும் துக்கத்துக்கும் காரணமாகின. இதற்கான காரணங்களை இயக்கத்தலைமைகளே பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு மிகத் தெளிவான பார்வையுடனும் வரலாற்றறிவுடனும் தன்னுடைய மதிப்பீடுகளை முன்வைக்கும் புஸ்பராணியின் இந்த அகாலம் – ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகள் நூல் இன்று மீளாய்வுகளும் அனுபவப் பதிவுகளும் அதிகமாக நடைபெறும் சூழலில் மிக முக்கியத்துவத்தைப் பெற்று வெளியாகின்றது.

இது மீள்பார்வைகளின் காலம், போராட்ட அனுபவங்களை எழுதும் காலம்... ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற போராளிகள் தங்களுடைய அனுபவங்களை, மீளாய்வு நோக்கில் எழுதுகின்றனர். பல்வேறு இயக்கங்களினதும் வெளியீடுகள் என்பதற்கப்பால், கோவிந்தனின் புதியதோர் உலகம் என்ற புதினத்தைத் தொடர்ந்து புனைவிலக்கியப் பதிவுகள் ஏராளமாக வந்துள்ளன. ஆனால், இந்த அகாலம் - ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகள் போன்று மெய்வரலாற்றுப் பதிவுகள் மிகக் குறைவானவையே. ஆனால், இப்போது இந்தப் பதிவுகள் அதிகமாக எழுதப்படத்தொடங்கியுள்ளமை கவனத்திற்குரியது.

தோற்றுப்போன போராட்டம் ஏற்படுத்தும் துக்கநிலையில் நின்று பெரும்பாலான அனுபவங்கள் எழுதப்படுகின்றன. ஆனால், இவை கழிவிரக்கத்தின் பாற்பட்டவையல்ல. மேலும் இந்தத் துயரநிலை தொடரக்கூடாது என்ற விருப்பத்தினடிப்படையில் இந்த வரலாற்றைப் பலரும் எழுதுகின்றனர். செழியன், ஐயர், நேசன், சி.புஸ்பராஜா, மணியம், குருபரன் என்று பலருடைய அனுபவங்கள் இந்தவகையில் வாசிப்புக்குரியனவாகியுள்ளன. சிலர் தம்மை மையப்படுத்தி ஒளிவட்டங்களை உருவாக்க முயற்சிப்பதும் நாமறியாததல்ல.

வரலாற்றைப் பதிவு செய்வதொன்றும் எளிமையான காரியமல்ல. அதிலும் தான் வாழ்ந்த காலத்தை, தான் பங்காற்றிய அரசியல் இயக்கங்களின் வரலாற்றை, தான் பங்களித்த முறைமையின் வரலாற்றைப் பதிவு செய்வது என்பது மிகக் கடினமான காரியம். தன்னை அல்லது தம்மையே முதன்மைப்படுத்தி அல்லது தாம் சார்ந்தியங்கிய போக்கினை மையப்படுத்திச் சிந்திக்கும் ஒரு தடித்த மரபுடைய நமது சூழலில் அதிலிருந்து விலகி நேர்மைத்தன்மையுடன் - தன்னைப் பொது நிலையில் வைத்து, தன்னையும் வரலாற்றுச் சூழலையும் மதிப்பிடுவதும் பதிவு செய்வதும் முக்கியமானது. புஸ்பராணி இங்கே தன்னை, தன்னுடைய செயற்பாடுகளை, தான் சார்ந்தியங்கிய அமைப்புகளின் தன்மைகளை, தன்னுடைய தவறுகளை, தன்னுடைய பலங்களை, பலவீனங்களை, சேர்ந்தியங்கியவர்களின் மாண்பை, அவர்களிற் சிலரின் குழிபறிப்புகளை, விட்டோடல்களை எல்லாம் பகிரங்கமாகவே பேசுகிறார். ஒளிவு மறைவற்ற வெளிப்படுத்தலில் இவை பேசப்படுகின்றன. முக்கியமாக இயல்பாகவே அவரிடம் கூடியுள்ள ஓர்மத்தை அவர் வெளிக்காட்டிப் பேசுகிறார். இத்தகைய ஓர்மம் அவருடைய குடும்பத்திலிருந்து உருவாகியது என்றே கருதுகிறேன். தான் சார்ந்த சாதிப்பிரிவிலிருந்து, தன்னுடைய குடும்ப நிலைமை, தன்னுடைய திருமண வாழ்க்கை எனச் சகலதைப் பற்றியும் அவர் வெளிவெளியாகவே பேசுகிறார். எதற்கும் அவர் கூச்சப்படவில்லை. எதையிட்டும் அவர் தயக்கங்களைக் காட்ட விரும்பவில்லை. எதையும் மறைக்க வேண்டும் என்று அவர் உணரவில்லை. திறக்கப்பட்ட புத்தகமாகவே தன்னுடைய அனுபவங்களை அவர் விரித்து வைக்கிறார். இவ்வாறு அவர் பகிரங்கமாக அந்தக் காலத்தை விரித்து வைக்கும்போது பல பிம்பங்கள் சிதைகின்றன. (காசி ஆனந்தன், மங்கையற்கரசி, மாவை சேனாதிராஜா போன்றோர்). சில இருட்பரப்புகள் ஒளிபெறுகின்றன. (பத்மநாபா..... போன்றோர்).

ஆனால் இதைக்குறித்து புஸ்பராணி தெளிவாகச் சொல்வதையும் நாம் கவனிக்க வேணும்.

இங்கே நான் பல்வேறு தரப்புகளின் தவறுகளை மனம் வெந்து சுட்டிக்காட்டுவது அவர்களைப் பழிக்கும் நடவடிக்கையோ அல்லது அவர்களை அவதூறுகள் செய்யும் முயற்சியோ அல்ல. தவறுகளைச் சுட்டிக்காட்டுவது வெறுமனே குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கும் வேலையுமல்ல. இந்தத் தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தத் தவறுகளை நாங்கள் எங்களிடமிருந்து வேரோடு களைய வேண்டியிருக்கிறது. இனி ஒரு துப்பாக்கிக் குண்டு துப்பாக்கியின் குழலிலிருந்தல்ல நமது எண்ணங்களிலிருந்து கூடப் புறப்படக் கூடாது. ஆயுதப் போராட்டத்திற்கான எண்ணக் கருவை எமது சமூகத்தில் விதைத்த முன்னோடிகளில் ஒருத்தி என்ற வகையில் நான் உங்கள் முன் வெட்கித்து நிற்கின்றேன். ஆயுதப் போராட்டத்தில் நல்ல போராட்டம்இ மோசமான போராட்டம் என்று எதுவுமே கிடையாது. ஆயுதம் மோசமானது மட்டுமே. அது எவர் கையிலிருந்தாலும் அழிவைத் தவிர வேறான்றிற்கும் அது பயன்படாது.

என்று அவர் கூறுவதும்

எனது இயக்க வாழ்க்கையில் ஏமாற்றத்தையும் வதைகளையும் நான் அனுபவித்தது ஒருபுறமிருக்க எனது இயக்க வாழ்வு எனது மனதுக்கு நெருக்கமான பல தோழர்களை எனக்கு ஏற்படுத்தியும் தந்திருக்கிறது. இவர்களில் சிலர் இப்போது உயிரோடு இல்லை. சிலர் அரசியலில் இல்லை. சிலர் இன்னும் அரசியலில் ஈடுபாட்டோடு செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிலருடன் எனக்கு இப்போது ஆழமான முரண்களும் மனக் கசப்புகளுமுள்ளன. சிலர் எங்கே இருக்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. எனினும் அந்தத் தோழர்கள் ஒரு காலத்தில் ஈழவிடுதலைக்காக அர்ப்பணிப்போடும் வீரத்தோடும் இயங்கியவர்கள். என்னோடு கரம் கோர்த்துக் கிராமம் கிராமமாகவும் சிறைச்சாலைகளிலும் பயணித்தவர்கள். முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும் அவர்களது நினைவுகளை என்னில் அழியாது பொத்திப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

என்றும் உரைக்கும் புஸ்பராணியின் வாக்குமூலம் முக்கியமானது.

தம்மைப் பற்றிய பிம்ப உருவாக்கங்களுக்காகப் புனிதங்களை உற்பத்தி செய்கின்ற சமூகத்தில் இது மாறுதலான நிகழ்ச்சி. தவறுகளையும் தோல்விகளையும் திரைகளுக்குப் பின்னே இழுத்து மறைக்கின்றவர்களிடையே புஸ்பராணி விலகித் தனித்துத் தெரிகிறார்.

இதேவேளை வரலாற்றைப் படிப்பதிலும் வேறுபாடுகள் உண்டு. எழுதப்படும் வரலாறானது வாசிப்பவரின் வாழ்வையும் அவர்களுடைய காலத்தையும் மையப்படுத்தியிருக்குமானால் அதன் கவர்ச்சியும் முக்கியத்துவமும் வேறு. இரத்தமும் தசையும் நிரம்பிய உயிருள்ள ஜீவனாக இந்த வரலாறு அமையும். அதை வாசிக்கும் உணர்வும் வேறானது. அதற்கப்பால் வாசிக்கப்படும் வரலாறு வெறும் தகவல்களாகவும் நிகழ்ச்சிகளின் பதிவாகவும் விவரிப்பாகவும் சுருங்கிவிடுகிறது. புஸ்பராணியின் வரலாற்றுக் காலத்திற் பயணித்தவர்களுக்கு இது பொக்கிஸமே.

யாரும் தங்களுடைய நிகழ்காலத்தை எளிதாகக் கடந்து விடலாம். அல்லது அதைச் சற்றுக் கடினமான நிலையில் எதிர்கொண்டு கடந்து விடலாம். ஆனால், இத்தகைய வரலாற்றுப் பதிவொன்றில் இருந்து அவர்கள் தங்களை, தங்களுடைய கடந்த காலத்தை அவ்வாறு கடந்து விட முடியாது. அது மிகக் கடினமானது. இந்த நிலைமையானது இரண்டு நிலையில் இரண்டு தரப்பினரைச் சுற்றிய ஒரு பாம்பாக உள்ளது. ஒன்று, கடினமான கடந்த கால நினைவுகளைக் கடந்து செல்ல முடியாமற் தத்தளிக்கும் புஸ்பராணியைப் போன்றவர்களின் நிலை. மற்றது, அதிகாரங்களாலும் குற்றங்களாலும் நிரப்பப்பட்ட நிகழ்காலத்தைக் உருவாக்கியவர்களும் அதிகார அமைப்புகளும் இத்தகைய வரலாற்றுப் பதிவொன்றிலிருந்து தம்மை மறைத்து விட முடியாது. அதை எளிதிற் கடந்து விடவும் முடியாது. புஸ்பராணியின் ‘அகாலம்’ என்ற இந்தப் பதிவில் நாம் இந்த இரண்டையும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

புஸ்பராணியின் இந்தப் பதிவில் கடந்த நாற்பது ஆண்டுகால நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தரப்புகள் வெளிக்காட்டப்படுகின்றன. அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்களிடையே செல்வாக்கைப் பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மகளிர் பேரவை போன்றவற்றின் செயற்பாடுகளையும் அவற்றோடு புஸ்பராணிக்கிருந்த உறவும் முரணும் இங்கே கூறப்படுகின்றன. தவிர, இந்த ஈழ விடுதலை வரலாற்றுப் போக்கில் யார் எல்லாம் மனித விதிக்கு மாறான குற்றச் செயல்களுக்குக் காரணமானார்கள், எவரெவர் சட்டத்துக்கும் மனச்சாட்சிக்கும் பொது ஒழுங்குக்கும் மாறாக எவ்வாறெல்லாம் செயற்பட்டனர் என்பதையும் புஸ்பராணி பதிவு செய்கிறார். இப்படி எல்லாம் பதியும்போது அவர்களால் இந்தக் கடந்த காலத்தைக் கடந்து விட முடியவில்லை. அதேவேளை மனித நேசிப்பைத் தமது ஆதர சக்தியாகவும் வழிமுறையாகவும் கொண்டியங்கிய வரலாற்றின் நாயகர்கள் மேலும் இங்கே ஒளியூட்டப்படுகின்றனர். இதுதான் வரலாற்றை நோக்கும் நோக்குநிலையில் நம் கவனத்தைக் கோருவது. எத்தகைய நோக்குநிலையிலும் இந்த அடிப்படையைத் தவிர்க்க முடியாது.

இந்த வரலாற்றுப் பதிவு நூலில் விவரிக்கப்படும் கால நிகழ்ச்சிகளை இங்கே படிக்கும்பொழுது மீளவும் அந்தக் காலம் மனதில் விரிகிறது. சில நிகழ்ச்சிகளை அந்தக் காலகட்டத்திலேயே அறிந்தவனாகவும், சிலவற்றில் பங்கேற்றவனாக நானும் இருந்திருப்பதால், இந்த அனுவங்களிற் பலவும் என்னுடைய அனுபவங்களையும் ஒத்திருக்கின்றன. எனக்கும் புஸ்பராணி (அக்கா) க்கும் இடையில் ஏறக்குறைய பன்னிரண்டு வயது வித்தியாசங்கள். என்றாலும் 1975க்குப் பிந்திய நிகழ்ச்சிகள் மெல்லமெல்ல ஒளிகூடியவையாக என்மனதில் இன்னும் இருக்கின்றன. உலகத் தமிழாராய்சி மாநாடு, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் மாணவர் பேரவை என்று நீளும் பதிவுகள்... அதேவேளை இந்த நூலில் குறிப்பிடப்படும் சிலருடன் பின்னாட்களில் நெருக்கமாகவும் சிலருடன் ஒரு குறிப்பிட்ட அளவிலான உறவுடனும் இருந்திருக்கிறேன். இன்றுகூட சிலருடன் நெருக்கமான உறவுண்டு. இவர்களுடன் வாழ்ந்து, பழகியபோது இவர்கள் ஒவ்வொருவரின் துக்கத்தையும் அருகிருந்தே பார்த்திருக்கிறேன். தாங்களும் மரணத்துடன் விளையாடி, சனங்களையும் மரணத்துடன் விளையாட விட்டிருக்கிறோம் என்ற துக்க உணர்வு சிலரிடம் மேலோங்கியிருந்தது.

அதனால், இந்தப் பதிவை வாசிக்கும்போது இந்தக் காலகட்டத்து நிகழ்ச்சிகளின் போக்கை மிகத் தெளிவாகவே அடையாளம் காண முடிகிறது. கூடவே இந்த நிகழ்ச்சிகளின் பாற்பட்ட ஆளுமைகளையும், அவர்களின் குணவியல்புகளையும் அவர்களாற்றிய பங்களிப்புகளையும் அவற்றின் விளைவுகளையும். வரதராஜப்பெருமாள், அன்னலிங்கம் ஐயா, வே.பாலகுமாரன், கி.பிரான்ஸிஸ், கே. பத்மநாதன்...

முக்கியமாக வே. பாலகுமாரனைப் பற்றிய கூறல்...

பாலகுமாரன் அதீத சுகாதார உணர்வுள்ளவர். அவர் எப்போதும் துடைப்பமும் தண்ணீருமாகக் கழிவறையைச் சுத்தம் செய்தவாறேயிருந்தார். எனினும் அது அவரது சக்திக்கு மீறிய காரியமாகவேயிருந்தது
இறுதி வரை அவர் இப்படித் தான் இருந்தார்.
எல்லாவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன். ஆனால்?

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் தமிம் பேசும் மக்களின் நிலை மிக மோசமானது. இலங்கை அரசு சிங்கள அரசாக, இனவாத அரசாக வெளிப்படையாகவே செயற்படத்தொடங்கியதை அடுத்துச் சிறுபான்மை இனங்கள் மிக நெருக்கடிக்குள்ளாகின. பின்னாட்களில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் இதில் மேலும் உச்ச நெருக்கடிகளையும் அவலத்தையும் சந்தித்தனர். இந்த நிலையில், 1950 இல் இலங்கையில் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணத்துக் கிராமமொன்றில் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவொன்றிற் பிறந்த பெண்ஒருவர் எத்தகைய நெருக்கடிகளுக்கும் அவலத்திற்கும் உள்ளாகியிருப்பார்? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறான ஒருவர் சாதாரணமாகவே, இனரீதியாகவும், சாதி ரீதியாகவும் பெண்ணென்ற நிலையிலும் பலமுனைகளில் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டும். அதிலும் ஒடுக்குமுறைக்கெதிரான - ஆதிக்க சக்திகளுக்கு எதிரான அரசியல் ஈடுபாட்டைக்கொண்ட பெண் என்றால் இந்த நெருக்கடிகளைச் சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு அவை எல்லை மீறியவை. இத்தகைய நெருக்கடிகளையும் அவலத்தையும் சந்தித்தவரே புஸ்பராணி. புஸ்பராணியின் இளமைக்காலச் சூழலைப் பற்றி இந்தப் பதிவில் அவர் சொல்கிறார்.

யாழ்ப்பாணத்தின் கடற்கரைக் கிராமமான மயிலிட்டியில் சிதம்பரி - சின்னம்மா இணையருக்கு நான்காவது குழந்தையாகவும் மூத்த பெண்பிள்ளையாகவும் பிறந்தேன். .....

எனது கிராமத்தில் கரையார் சாதியினரே ஆதிக்க சாதியினராகயிருந்தார்கள். யாழ்ப்பாணச் சாதியமைப்பில் வெள்ளாளர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள ஆதிக்க சாதியினர் கரையார்களே. நான் வளர்ந்துவந்த காலத்தில் கரையார்கள் முற்றாகத் தீண்டாமையைக் கடைப்பிடித்தார்கள். கடலோரப் பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் இவர்களுக்கு மத்தியில் எங்களது கிராமத்தில் நாங்கள் ஒரேயொரு நளவர் சாதிக் குடும்பமேயிருந்தோம்.

என் இளமைப் பருவத்தில் எல்லாவிதமான தீண்டாமைகளும் எங்கள் கிராமத்தில் நிலவின. தேநீர்க் கடைகள், ஆலயங்கள் போன்றவற்றுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆதிக்க சாதியினரின் தேநீர்க் கடைகளுக்குப் போய் சிரட்டையிலோ போத்தலிலோ தேநீர் குடிக்கவும் கோயிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிடவும் நாங்களும் தயாரில்லை. குடும்பத்தில் எல்லாப் பிள்ளைகளும் மிகுந்த ஒற்றுமையாக இருப்போம். அரசியல் குறித்தோ புத்தகங்கள் குறித்தோ உரையாட வேண்டியிருந்தாலும் எங்களுக்குள்ளேயே உரையாடுவோம். வழி தெருவில், பாடசாலையில் ஆதிக்க சாதியினரின் கிண்டல்களுக்கோ பழிப்புகளுக்கோ நாங்கள் ஆளாகும்போது வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்.

இதை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். புஸ்பராணியின் போர்க்குணம், அவருடைய போராட்டக் குணம் எல்லாம் அவருடைய குடும்பத்திற்குள்ளிருந்தே கிளம்புகிறது. அவருடைய தந்தை திரு. சிதம்பரி ஒரு முக்கியமான ஆளுமையாக இருந்திருக்கிறார். தாய் சின்னம்மா இதற்கு உறுதுணையாக நின்றவர். இந்தப் புத்தகத்தில் அவர்களைப் பற்றிய விவரங்களுக்குத் தனியாக அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லையாயினும் புஸ்பராணி மற்றும் அவருடைய சகோதரர் திரு.சி.புஸ்பராஜா ஆகியோரின் ஆளுமை உருவாக்கத்திலும் அரசியல் ஈடுபாட்டிலும் குடும்பத்தின் பங்களிப்பு முக்கியமான பாத்திரத்தை வகித்துள்ளது. அதனால், அந்தக் குடும்பம் அக்காலத்தில் பெரும் இன்னலுக்கும் துயரத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. ஆனாலும் அவர்கள் இறுதிவரையில் பின்னகர்ந்து விடவில்லை. இதோ, இப்போதும் வரலாற்றில் முன்னிலைச் செய்பாட்டுக்குரிய அடித்தளத்துடனேயே இருக்கின்றனர்.

புஸ்பராணியின் ‘அகாலம்’ என்ற இந்தப் பதிவு, மற்றும் திரு.சி.புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற பதிவு இரண்டும் இந்த ஓர்மமான அடித்தளத்திற்கு நல்ல ஆதாரம்.

புஸ்பராணி (அக்கா) அவர்களின் அரசியல் ஈடுபாட்டுக்கும் போராட்ட வாழ்க்கைக்கும் காரணமாக இருந்தவர் முக்கியமாக திரு. சி. புஸ்பராஜாதான். அதிக வசதியும் குடும்பப் பெருமையும் இல்லாத ஒரு அடிநிலைப் பெண்ணாக அரசியற் பொதுவெளியிற் பிரவேசித்த புஸ்பராணி, மற்றும் திரு.சி.புஸ்பராஜா ஆகியோர் அந்தக் காலத்திலேயே பொதுத் தளத்தில் தவிர்க்கப்பட முடியாத பாத்திரங்களைக் கொண்டிருந்தனர். இதற்குக் காரணம், இவர்கள் பின்பற்றிய அரசியல் மட்டுமல்ல, அந்த அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் அவர்கள் ஆற்றிய முன்னிலைச் செயற்பாடும் அதற்கான உழைப்பையும் துணிச்சலையும் ஓர்மத்தையும் கொண்டிருந்தமையே. இந்த ஓர்மந்தான் இவர்களுடைய அடையாளம். இதுதான் இவர்களை இன்னும் நின்றியக்கி வருகிறது.

இந்த ஓர்மத்தில் நின்றே புஸ்பராணி இன்றைய அரசியற் சூழலையும் மதிப்பிடுகிறார். அதிலிருந்தே தன்னுடைய விமர்சனத்தை முன்வைக்கிறார். ஆயுதங்களால் அல்லாமல் அரசியற் பிரச்சாரத்தால் மக்களைத் தங்களின் பின்னே திரட்டிக்காட்டும் வல்லமை தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு இருந்தது. அந்த வல்லமையை அவர்கள் சரியாகப் பயன்படுத்தாமல் இரட்டை அரசியல் நிலைப்பாடுகளை எடுத்து ஆயுத இயக்கங்களின் சிபாரிசுக்காரர்களாக அவர்கள் மாறிப்போனது வரலாற்றின் துரதிர்ஷ்டம். ஆயுதப் போராட்ட அரசியலின் முன்னே தாங்கள் இழந்துகொண்டிருந்த செல்வாக்கைக் குறுக்குவழிகளில் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் முயன்றிருக்கக் கூடாது.

இது ஓர்மத்தின் பாற்பட்ட கடுமையான விமர்சனமாகும். இன்றைய தமிழ் மிதவாதிகளின் நிலைமையைப் பகிரங்கமாகத் துணிச்சலுடன் புஸ்பராணி முன்வைப்பது இன்றைய தலைமைகளின் ஆளுமைக்குறைவையும் நோக்கச் சிதைவையும் மனதில் நிறுத்தியே. ஆகவே, அவர் கடந்த காலத்தின் மீது மட்டும் ஒளியை வீசி விமர்சனங்களை முன்வைக்கவில்லை. சமகாலத்தின் மீதும் தன்னுடைய பார்வைகளைக் கொண்டிருக்கிறார்.

இதற்கு இன்னொரு ஆதாரம்:

தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசிய தமிழ் இளைஞர் பேரவை இளைஞர்கள் தமிழர் கூட்டணியினரின் மிதவாதப் போக்கைக் கண்டித்தும் பேசினர். இதனால் கோபம் கொண்ட மங்கையற்கரசி  "எங்களது மேடையில் எங்களையே திட்டுகிறீர்களே" என்று சினந்தார். ஆத்திரங்கொண்ட கிளிநொச்சி திருஞானம் "உழைப்பது நாங்கள் பிழைப்பது நீங்கள்" என்ற தொனியில் மங்கையற்கரசியோடு வாக்குவாதப்பட்டதும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது. இது ஆரம்பச் சுழியே. இப்படியான கருத்து மோதல்கள் பின்னர் பலதளங்களிலும் தொடர்ந்து சென்றன.

கூட்டமைப்பின் மீது தற்போது முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் கவனிப்போருக்கு இது எளிதிற் புரியும்.

எப்போதும் இயங்கும் மனதுடைய ஒருவருக்கு இத்தகைய தொடர்பார்வை இருந்தே தீரும். களத்திலிருந்து இவர்கள் இறுதிவரையில் விலகுவதேயில்லை.

பொதுவாகவே, போராட்டத்திலும் யுத்தத்திலும் முதலிற் பாதிக்கப்படுவது பெண்களே. மிக உச்சபாதிப்பைச் சந்திப்பதும் பெண்களே. இந்த உலகம் பெண்களுக்கே துக்கத்தையும் காயங்களையும் வலிகளையும் அதிகமாகக் கொடுத்துள்ளது. உலகம் முழுதுமுள்ள பொது நிலை இது. இந்த நிலைக்கு எந்தச் சமூகமும் எந்தக் காலமும்  விலக்கில்லை. எப்போதும் வன்முறையில்  இலக்கு வைக்கப்படும், வன்முறைக்குப் பலியாகும் முதல் மனித உயிர் பெண்ணே.

அதிலும் அரசியல் ஈடுபாட்டின் காரணமாக பொதுவெளியில் எழுச்சியடையும் பெண் - இயங்கும் பெண், ஆதிக்கத்தரப்பினால் மிக மோசமான முறையில் ஒடுக்கப்படுவாள். தெலுங்கானாப் போராட்டத்தில், எரித்திரியாவில், எல்சல்வடோரில், சிலியில், காஸ்மீரில் என எல்லாத்திசைகளிலும் பெண் அவலத்திற்குள் வீழ்த்தப்பட்டுள்ளாள். இரண்டாம் உலகப்போரின்போது மிகமோசமான முறையில் ஜேர்மனியில் சிதைக்கப்பட்டது பெண்களே. ஹிட்லர் இருந்தபோது யூதப்பெண்களும் ஹிட்லர் இறந்தபின்னர் நாஜிப்பெண்களும் சிதைக்கப்பட்டனர். மேலும் மலேசியாவில், கேரளாவில், தென்னாபிரிக்காவில் என்று இந்தப் பட்டியல் நீளும்.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் அத்தகைய நிலையைச் சந்திக்கிறார் புஸ்பராணி. (இன்று ஏராளம் பெண்போராளிகள் இத்தகைய நிலைக்குள்ளாகியுள்ளனர்). ஒரு கட்டத்தில் பொலிஸ் தரப்பினரால் கைது செய்யப்படும் புஸ்பராணியும் சகதோழியான கல்யாணியும் படுகின்ற வதைகள், மிகப் பயங்கரமானவை. மிகக் கொடுமையானவை. மாதவிலக்கின்போது பயன்படுத்தப்படுவதற்குச் சாதாரண துணியொன்றைக்கூடப் பெறமுடியாத நிலை. இந்த நிலையைப் புஸ்பராணி இங்கே விவரிக்கும்போது எம்மால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாதிருக்கிறது. துக்கத்தின் பெரும்பரப்பொன்றில் நகர்ந்து கொண்டிருக்கும் வரலாற்றுப் பதிவாக இது இருந்தாலும் இந்த மாதிரியான மனிதனின் முழு நாகரீகத்திற்கும் இழுக்கான மனித நிலையைக் குறித்து சொல்லும்போது அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், இந்தக் கொடுமை இன்னும் நீங்கிவிடவில்லை என்பதை, இந்த ஒடுக்குமுறை நிலை மாறவேயில்லை என்பதை ‘நான்பட்ட சித்திரவதைகளால் பத்து நாட்களிற்குப் பிறகு வரவேண்டிய மாதவிலக்கு முன்கூட்டியே வந்துவிட்டது. வழக்கத்தைவிட உதிரப் பெருக்கு அதிகமாயிருந்தது. டம்பா என........... கடுமையான அழுக்காயிருந்த, ஒரு கந்தலான சாரத் துணியைக் கொண்டுவந்து கொடுத்தான். உதிரப் பெருக்கை நிறுத்துவதற்காக நான் அந்தத் துணியை இடையில் கட்டிக்கொள்வதற்கு கல்யாணி உதவினார். அப்போது கல்யாணி "அக்கா இந்தத் துணியை வீசிவிடாதீர்கள். எனது முறை வரும்போது எனக்குக் கட்டுவதற்கு ஏதுமில்லை, இதை துவைத்து வைத்துக்கொள்வோம்"என்றார்.

நான் கட்டிக் கழுவி வைத்திருந்த துணியையே கல்யாணியும் பின்பு உபயோகிக்க வேண்டியிருந்தது. இப்போது இராணுவத்தின் சிறைகளிலிருக்கும் புலிப் போராளிப் பெண்களின் நிலை இதை விடக் கேவலமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். எதிர்காலத்தில் அவர்களில் ஒருவருக்குத் தனது சிறைக் குறிப்புகளை எழுதி வெளியிடும் நாள் வாய்க்கும்போது இந்த நாகரிக உலகம் வெட்கித் தலைகுனியத்தான் போகின்றது.

என்று புஸ்பராணி சொல்வதினூடாக அவரும் அவரைப் போன்ற பிற பெண்களும் சந்திக்க வேண்டிய கொடுமைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்தக் காலகட்டத்தில் புஸ்பராணி, அவருடைய தோழி கல்யாணி, புஸ்பராணியின் தங்கை போன்றோர் தங்கியிருந்த வெலிக்கடச் சிறைச்சாலையில் தென்னிலங்கையில் நடைபெற்ற ஜே.வி.பி கிளர்ச்சி முறியடிக்கப்பட்ட பின்னர்,  அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என்று சிங்களப் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒடுக்குமுறை செய்யும் அதிகாரத் தரப்பிற்கு இனமதமொழிபிரதேச வேறுபாடுகள் இல்லை. அது தன்னுடைய அதிகாரத்துக்கு எதிரான யாரையும் கைது செய்யும். தண்டனையை வழங்கும். இங்கே ஜே.வி.பி பெண்களும் புஸ்பராணி, கல்யாணி போன்றோரை ஒத்த நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

ஜே.வி.பியினரின் போராட்ட அணுகுமுறை, அரசியற்பார்வை போன்றவை வேறாகவும் புஸ்பராணி, கல்யாணி போன்றோருடைய அரசியற் பார்வை, போராட்ட அணுகுமுறை போன்றவை வேறாக இருந்தாலும் ஒடுக்குமுறையை எதிர்கொள்வது என்பதிலும் ஒடுக்குமுறைக்குள்ளாவது என்பதிலும் இருக்கின்ற பொதுத் தன்மைகளை புஸ்பராணி இனங்கண்டுள்ளார். மட்டுமல்ல, கேரள நக்ஸலைட் போராளியாக இருந்த அஜிதா என்ற பெண்ணின் அனுபவங்களுக்கூடாக உலகு தழுவிய பெண்ணின் பாத்திரத்தையும் உணர்கிறார்.

எனதும் அஜிதாவினதும் போராட்டக் களமும் போராட்ட இலக்கும் போராட்ட வழிமுறைகளும் முற்றிலும் வேறாயிருந்தபோதிலும் வேறு சில விடயங்களில் எனக்கும் அஜிதாவுக்கும் சில ஒற்றுமைகளிருந்தன. இருவருமே ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்தோம். இருவருமே இளம் வயதிலேயே காவற்துறையின் சித்திரவதைகளை எதிர்கொண்டு சிறைகளில் அடைபட்டுக்கிடந்தோம். இருவரது குடும்பங்களுமே போராட்டத்தில் தங்களை முழுவதுமாக இணைத்துக்கொண்டிருந்தார்கள். அஜிதா தனது பெற்றோர்களோடு சிறையிலடைக்கப்பட்டார். நான் எனது தம்பி தங்கைகளுடன் சிறையில் அடைக்கப்பட்டேன். சமூகத்தில் இருவருக்குமே கொள்ளைக்காரிகள் என்ற பெயருமிருந்தது.

என அஜிதாவைப் பற்றி விவரிப்பதினுடாக பெண்களுக்கெதிரான இந்தப் பொதுமைத் தன்மையை உணர்த்துகிறார் புஸ்பராணி. இந்த மாதிரியான நிலைமையில், உடல் ரீதியான வதைகள் ஒருபுறமென்றால், உளரீதியான வதைகள் இன்னொரு புறமாக இரட்டை வதையைச் சந்திக்க வேண்டியிருக்கிறாள் பெண்.

சிறையை விட்டு, அந்தத் தண்டனைக் களத்தை விட்டு வெளியே வந்தாலும் சமூகம் இந்தப் பெண்களை வரவேற்கும் விதம்? அது அதைவிடக் கொடுமையானது. ‘வாய்க்கு வந்தபடி கதைப்பது’ என்பார்களே அதை இந்தப் பெண்கள் விசயத்தில் மிக உச்சமாகச் செய்கிறது சமூகம். கொள்ளைக்காரி, கெடுக்கப்பட்டவள், ஒத்தோடியவள் என்றமாதிரியான வசைகளை எந்தக் கூச்சமுமில்லாமல் இந்தப் பெண்களின் மீது பொழிகிறது சமூகம்.

இவ்வளவுக்கும் இந்தப் பெண்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்வின் சுகங்களுக்கப்பால், எதிர்பார்ப்புகளுக்கு அப்பால், பொதுத்தளத்தில் அனைத்துத்தரப்பினருக்காகவும் போராடியவர்கள். ஆனால், இதையெல்லாம் மறந்தே சமூகம் வசைப் பரப்பை மிகக் கேவலமாக இவர்களை நோக்கி விரிக்கிறது. இங்கே புஸ்பராணியும் இதே வசைப்பரப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதேவேளை, பொலிஸின் சிறையில் விசாரணைக்குட்படுத்தப்படும்போது, பிறரை விட புஸ்பராணியைப்போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மேலதிகமாக இன்னொரு தண்டனையையும் பெறவேண்டியுள்ளது. அதிலும் தமிழ்ப் பொலிஸ்காரர்களிடம். ஏனெனில் தமிழ்ச் சமூகத்தின் அதிகாரச் சாதியினராக இவர்கள் இருப்பதால், அதே மனநிலையில் கைதிகளையும் விசாரணையையும் அணுகுகிறார்கள். இது சட்டத்துக்கும் நீதிக்கும் புறம்பானது. இதை மிக நுட்பமாக அதேவேளை தெளிவாகவே வெளிப்படுத்துகிறார் புஸ்பராணி.

"நளத்தியும் பள்ளியும் நாடகம் போடுகிறீர்களா? எல்லாவற்றுக்கும் வட்டியும் முதலுமாக வதைபடுவீர்கள்" 

அன்று புகழ்பெற்ற பொலிஸ் அதிகாரியாகக் கலக்கத்தை ஏற்படுத்தித் திரிந்த பத்மநாதன் கூறிய வார்த்தைகள் இவை. இவற்றை பொன்னெழுத்துகளால் பொறிப்பதா இன்று? தமிழ்ச் சூழலின் அவலம் பிற தரப்புகளை விட மிகக் கொடுமையானது.

இதனாற்தான்,

இரு பக்கங்களும் கூர்கொண்ட 'கருக்கு'ப் போன்று, தலித் பெண்களுக்கு சாதியாலும் ஆணாதிக்கத்தாலும் இரண்டு பக்கமும் ஆபத்திருக்கின்றது என்பாரே எழுத்தாளர் பாமா, எனக்கோ திரும்பிய பக்கமெல்லாம் கருக்காவேயிருந்தது.

என்று குமுறுகிறார் புஸ்பராணி. இந்த வலியும் வேதனையும் சாதாரணமானதல்ல. இதைப்போல குற்றம்சாட்டப்பட்ட – சேர்ந்தியங்கிய பிற போராளிகள் அல்லது கைதிகள் தங்களின் வசதியாலும் உயர்வர்க்க அடையாளத்தினாலும் மிக இலகுவாக தண்டனைப் பரப்பிலிருந்து வெளியேறிச் செல்கின்றனர்.

இதையும் புஸ்பராணி விவரிக்கிறார்.

வர்க்கபேதமும், சாதிபேதமும் எப்படியெல்லாம் எங்கெல்லாம் புகுந்து எளியோரை நசுக்கிவிடுகின்றன என்பதைக் கண்கூடாகக் கண்டேன்.

என்று.

மேலும் பெண்களைக் குறித்த புஸ்பராணியின் பார்வை விடுதலை நோக்கியது. மாற்றுப் பார்வையையுடையது. இத்தகைய புரிதல் அந்த நாட்களிலேயே அவருக்கு ஏற்பட்டுள்ளது என்பது கவனத்திற்குரியது.

வெலிக்கடைச் சிறையில் நான் சந்தித்த ஒவ்வொரு பெண்களும் முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின்பும் கூட என் ஞாபக அடுக்குகளில் அழியாச் சித்திரங்களாக இருக்கிறார்கள். அங்கு மோசமான அனுபவம் என்று எதுவுமே அவர்களால் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இனிய அனுபவங்களையும் அன்பையும் தோழமையையும் ஆறுதலையும் அந்தத் தோழிகள் எனக்கு அள்ளி அள்ளித் தந்திருக்கிறார்கள். பயங்கரவாதி, கொலைகாரி, கொள்ளைக்காரி, பாலியல் தொழிலாளி, திருடி, சாராயம் விற்பவள், ஏமாற்றுக்காரி என்ற பல்வேறு பெயர்களில் அரசாங்கத்தாலும் நீதியாலும் நாங்கள் வகைப்படுத்தப்பட்டாலும் நாங்கள் கைதிகள் என்ற உணர்வு எங்களை இணைத்தே வைத்திருந்தது. அந்த இணைவிலிருந்து அன்பைத் தவிர வேறெதுவுமே சுரக்கவில்லை.

அன்றைய காலத்தில் கொலைவழக்கொன்றிற் குற்றம் சாட்டப்பட்டிருந்த கோகிலாம்பாளைப் பற்றியும் மலையகத்துப் பெண் லூர்துவைப் பற்றியும் புஸ்பராணி பார்க்கின்ற பார்வை....

கோகிலாம்பாளை துரோகத்தின் சின்னம் என்பதா அல்லது காதலின் பரிதாபத்துக்குரிய அடையாளம் எனச் சொல்லவா!
எனவும் கணவனின் கொடுமையைத் தாங்கமுடியாமல் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொன்ற லூர்துவைப் பற்றிச் சொல்லும்போது
அவளது கணக்கற்ற துன்பங்கள் ஆத்திரமாகத் திரண்ட கணத்தில் அது நிகழ்ந்திருக்கிறது. அது துயரம் செய்த கொலையல்லவா


எனவும் பொதுவான சமூகப் பார்வைக்கும் நீதி அணுகுமுறைக்கும் அப்பால் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில், பெண்சார்ந்த அனுபவ நோக்குநிலையில் இவர்களின் செயல்களை நோக்குகிறார்.

இத்தகைய புரிதல் வாழ்வின் ஆழத்தை அதன் பன்முகத்தன்மையை மனித மனத்தின் உணர்ச்சிச் சுழிப்புகளை உணர்ந்துள்ள ஒருவராற்தான் முடியும். சாதாரண குடும்பப் பெண்ணாக அவர் இருந்திருந்தால், நிச்சயமாக அவருக்கு இத்தகைய உலகு தழுவிய, வரலாறு தழுவிய, வாழ்க்கையின் அடியாழத்தத்தைத் தழுவிய புரிதல்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்காது. அவர் பொதுவெளிக்கு வந்ததால், பாடுகளைச் சுமந்த அளவுக்கு அவருடைய உலகு தழுவிய விரிந்த பார்வையும் அனுபவங்களும் ஆற்றல் மிகுதியும் ஏற்பட்டுள்ளன. அவர் ஒரு நகரும் பெண்ணாக, இலக்கியவாதியாக,போராளியாகத் தன்னை வடிவமைத்துள்ளார். இது அவர் தன்னுடைய செயற்பாடுகளினால் பெற்றுக்கொண்ட பேறு.

இல்லையென்றால், 1969 இலேயே யாழ்ப்பாணத்தின் ஒடுக்கப்பட்ட பெண்ணொருவர் லண்டன் முரசில் தன்னுடைய கருத்துகளை முன்வைக்கவும் உலகத்தின் பல திசைகளிலுள்ளவர்களோடும் தொடர்புகளைக் கொள்ளவும் வாய்த்திருக்குமா ? ஆகவே, புஸ்பராணியின் இத்தகைய புரிதல்களையும் உணர்தல்களையும் தமிழ்ச் சமூகம் தன் அகத்திலெடுக்க வேண்டியது அவசியமாகும். விடுதலை நோக்கிய தாகத்தோடிருக்கும் ஒரு சமூகம் தன்னுள்ளே ஒளியைப் பாய்ச்சவில்லை என்றால், தன்னுள்ளிருக்கும் கசப்பான பிராந்தியங்களை நீக்கவில்லை எனில் அதனால் ஒருபோதுமே முன்னோக்கி நகர முடியாது.

இன்று தமிழ் இணைய வெளியை ஆக்கிரமித்து அதை எச்சிற் பரப்பாக நிரப்பிக் கொண்டிருப்போர் - குறிப்பாக சில பெண்கள் புஸ்பராணியின் இந்த வரலாற்றுப் பதிவை வாசிக்க வேண்டும். புஸ்பராணியின் அரசியற் தெரிகை, அவர் தேர்ந்தெடுத்த பாதை, அவருடைய செயற்பாடுகள், அவருடைய நம்பிக்கைகளில் மாற்றுப்பார்வைகள் இருக்கலாம். ஆனால், தான் தேர்ந்தெடுத்த, தான் நம்பிக்கை கொண்ட அரசியற் கொள்கைக்காகத் தன்னை அர்;ப்பணித்த நேர்மை, அதற்காக பட்டுக்கொண்ட வாதைகள், அதற்காகத் தன்னுடைய இளைமைக்காலத்தை இழந்த ஓர்மத்தை அவர்கள் புரிந்து கொள்ளலாம். நியாயவெளியில் உரையாடலை நடத்துவதற்கான அடிப்படைத்தகுதியை ஒருவர் எப்படிப் பெறுவது என்பதையும் அவர்கள் அப்போது உணர்ந்து கொள்ளலாம்.

மட்டுமல்ல இதே காலப்பகுதியில் அரசியற் பணிகளில் ஈடுபட்ட மங்கையற்கரசி புஸ்பராணி போன்றவர்கள் செய்த பணியில் பாதியைக்கூடச் செய்ததில்லை. புஸ்பராணி போன்றவர்கள் பட்ட வதையிற் பத்திலொரு பங்கைக்கூடப் பட்டதில்லை. ஆனால், புகழிலும் பொதுப் பார்வை கொண்ட வரலாற்றிலும் புஸ்பராணியை விட மங்கையற்கரசியே தலைவியாகத் தெரிகிறார். அவரே வசதிகளையும் வாய்ப்புகளையும் அதிகமாகப் பெற்றவர்.  இது எப்படியிருக்கிறது?

சி.புஸ்பராஜா, புஸ்பராணி ஆகியோர் மற்றவர்களை விடவும் முதற்காலத்துக்குரியவர்கள் என்றவகையிலும் தொடர்ச்சியையுடையவர்கள் என்ற வகையிலும் பிறருடைய பதிவுகளை விடவும் இவர்கள் வேறுபட்ட பதிவுகளைத் தருகின்றனர். இங்கே புஸ்பராணியின் பதிவுகள் அவருடைய சகோதரரான புஸ்பராஜாவின் பதிவுகளைப் பல இடங்களிலும் ஒத்திருக்கிறது.

இருவரும் ஒரு குடும்பத்திலிருந்து, ஒத்த அரசியற் பார்வையுடன், ஒரே காலத்தில், ஒரே சூழலில் அரசியற்போராட்டத்திலீடுபட்டதன் விளைவாக இப்படியான ஒரு நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், புஸ்பராணியின் வெளிப்பாடு வேறானது. புஸ்பராணியின் எழுத்தில் மனிதநேயத்தின் ஊற்றுக்கண்கள் பொங்கிப் பிரவாகிக்கின்றன. செழிப்பான வாசிப்பும் வாழ்க்கை நோக்கும் அனுபவத்தைக் கலையாக்கும் திறனும் வரலாற்றுப் பிரக்ஞையும் இந்த எழுத்துகளை ஈர்ப்புக்குரியனவாக்குகின்றன. அதற்காகப் புஸ்பராஜாவின் எழுத்துகள் குறைவானவை என்று அர்த்தமல்ல.

புஸ்பராணி மிகச் சுருக்கி எழுதியிருக்கும் இந்த வரலாற்றுப் பதிவில், தலித் மக்களின் நிலை, 1960 களில் பெண்களின் அரசியல் ஈடுபாடும், பங்கேற்பும் பொது வாழ்வும், அதன்பால் ஏற்பட்ட வெளியுலகத் தொடர்பு... வாசிப்பு, பிற போராளிகளின் அறிமுகங்கள், கூடி விவாதித்தல், செயலாற்றுதல்சிறை, சிறைவாழ்க்கை, போன்ற விசயங்கள் மிக விரிவாகப் பேசப்படுகின்றன. கூடவே, ஜே.வி.பி, தமிழரசுக்கட்சி... கூட்டணி.... வதைகளையும் துயரத்தையும் சந்தித்த குடும்பங்களும் போராளிகளும் எனப் பலவும் கூட.

00

தீவிர இடதுசாரியப் பார்வையைக் கொண்டவர்கள் புஸ்பராணியின் இந்த வரலாற்று ஆவணத்தை நிராகரிக்கலாம்.
தமிழ்த்தேசிய அரசியற்பார்வையின் குறைபாடுகளே இத்தகைய அவலத்திற்கும் இன்றைய அவலத்திற்கும் பிரதான காரணம் என அவர்கள் வாதிடலாம். ஆகவே, இதிலே புதிதாக என்ன இருக்கப்போகிறது? என்ற தொனியில் அவர்கள் கேள்விகளை எழுப்பலாம். அத்தகைய பார்வைக்கும் கேள்விக்கும் இடமுண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதையும் விட முக்கியமானது, நான் முன்னரே குறிப்பிட்டவாறு, புஸ்பராணி தன்னை, தன்னுடைய பாதைகளை இங்கே வெளிப்படையாகவே பேசுகிறார். அதற்காகத் தன்னை, தன்னுடைய வாழ்க்கையை அவர் அர்ப்பணித்திருக்கிறார்.

என்னுடைய வாசிப்பு, தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடுகொண்டிருந்த எனது குடும்பச் சூழல் போன்றவை என்னை மெதுமெதுவாக அரசியலை நோக்கி நகர்த்தின. எனது அரசியல் ஆர்வத்திற்கு எனது தம்பி புஸ்பராஜா உற்ற துணையாக இருந்தார். தமிழரசுக் கட்சியினரது கூட்டங்களிலும் பேரணிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் நான் ஈடுபாட்டோடு கலந்துகொள்ளத் தொடங்கினேன்.

என.

ஆனால், பின்னாளில் இதிலிருந்து அவர் பாடங்களையும் கற்றுக்கொண்டுள்ளார்.

நாங்கள் அடையப் போகும் தமிழீழத்தில் சாதி வேற்றுமைகள் இருக்கக் கூடாது என்று விரும்பினோமே தவிரஇ சாதி தமிழீழத்தில் இருக்காது என்று நாங்கள் முழங்கினோமே தவிர சாதியின் தோற்றம்இ அதனது வரலாற்றுப் பாத்திரம்இ இந்து மத்திற்கும் அதற்குமுள்ள தொடர்பு குறித்தெல்லாம் நாங்கள் எந்தத் தெளிவுமற்றே இருந்தோம். அமையப் போகும் தமிழீழத்தில் இறுக்கமான சட்டங்களைப் போட்டுச் சாதியை ஒழித்துவிடலாம் என்றளவில்தான் எங்களது அரசியல் புரிதலிருந்தது.

விடிய விடியத் தூங்காதிருந்து பேசிக்கொண்டிருப்போம். எப்போதும் சுதந்திரம் என்பதே பேச்சு. அமையப் போகும் தமிழ் ஈழம் எவ்வாறு இருக்க வேண்டும். சாதி சமய பேதமற்றதாக சுதந்திரம் பெற்ற இனமாக எம்மினம் நிம்மதியாக வாழ்வதற்கு நாம் எப்படியெல்லாம் பாடுபட வேண்டும் என்றெல்லாம் பேசுவோம். எம்மால் எதையும் சாதிக்க முடியும், விரைவில் எமது கனவு நனவாகும் என்று எல்லையில்லாத நம்மிக்கைகளில் நாங்கள் திளைத்தோம். எமது பேச்சுகள் நுணுக்கமான அரசியல் விவாதங்களாக இல்லாமல் உணர்சிவசப்பட்ட இலட்சியவாதப் பேச்சுகளாகவே இருந்ததை என்னால் இப்போது நிதானிக்க முடிகிறது. காலமும் அந்தப் பாடத்தை நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

இந்தப் பாடங்கள் அவரை மட்டுமல்ல எம்மையும் வரலாற்றின் புதிய திசைகளை நோக்கி நகர்த்துகின்றன. வரலாறு என்பது பெயர்கள், இடங்கள், காலம் மற்றும் சம்பவங்களின் பதிவாக அமைவதில்லை. அது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. வாழ்க்கையைத் தீர்மானிப்பது. சமகால வாழ்க்கையையும் எதிர்கால வாழ்க்கையையும் நிர்மாணிப்பது அது. எனவேதான் ஒவ்வொரு வரலாற்றுத்துளியிலும் மனிதர்களின் இரத்தத்தையும் கண்ணீரையும் அதில் காணக்கூடியதாக இருக்கிறது. அதில் மகிழ்ச்சிக்கான விதைகளும் உள்ளன. துக்கத்துக்கான விதைகளும் உள்ளன. வரலாற்றில் சக்தி மிக்க பாத்திரத்தை வகிப்போர் ஆற்றுகின்ற பங்கும் அவர்கள் கொண்டிருக்கின்ற பொறுப்புணர்வும் அவர்களுடைய சிந்தனையும் ஆளுமையும் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.

இறுதியாக அவருடைய பதிவுகளிலிருந்தே மேலும் சில பகுதிகளை இங்கே எடுத்தாள்வதன்மூலமாக என்னுடைய இந்த முன்னீட்டை நிறைவு செய்யலாம் என எண்ணுகிறேன். புஸ்பராணி அக்காவின் இந்த இந்தப் பதிவு சொல்லும் சேதிகளின் முன்னே, உண்மைகளின் முன்னே, இது முன்வைக்கும் உணர்ச்சிகளின் முன்னே நாம் எடுத்துரைக்கும் வார்த்தைகள் போதாமைகளையே கொண்டுள்ளன. எனவேதான் அவருடைய பதிவிலிருந்தே சில முக்கியமான பகுதிகளை இந்த முன்னீட்டில் எடுத்தாள்வது பொருத்தமானது, முக்கியமானது எனக் கருதினேன். அந்த வகையில் இந்தப் பகுதிகளையும் நீங்கள் வாசிப்பது பொருத்தமாகும்.


எங்களில் சிலர் விடுதலைப் போராட்ட இயக்கங்களின் தலைவர்களானார்கள், சிலர் நாடாளுமன்ற அரசியல்வாதிகளானார்கள், சிலர் அர்ப்பணிப்புள்ள ஆயுதப் போராளிகளானார்கள், சிலர் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்தார்கள, சிலர் கல்விமான்கள் ஆனார்கள், சிலர் வறுமையில் சீரழிந்தார்கள், சிலர் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள், சிலர் புலிகளால் கொல்லப்பட்டார்கள், சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள், சிலர் உச்சக் கட்ட ஏமாற்றத்தோடு இயக்க அரசியல்களிலிருந்தே முற்றாக ஒதுங்கிக்கொண்டார்கள். இவற்றில் நானும் கல்யாணியும் கடைசி வகையைச் சேர்ந்தவர்கள். - என ஈழப்போராட்டத்தின் சூழலைப் பற்றியும் தன்னைப் பற்றியும் மிக எளிமையாக விளக்கமளிக்கிறார் புஸ்பராணி.

மேலும் -

தமிழின விடுதலை மீதான நேசிப்பு என்னைப் போராட்டத்துக்கு அழைத்து வந்தது.
ஆனால் என்னைப் போராட்டத்தை விட்டு ஒதுங்க வைத்தது சிறைக் கொடுமைகளோ அல்லது இலங்கை அரசின் கொடுமைகளோ அல்ல. நமது சொந்தப் போராளிகளிற்குள் உருவாகிய சர்வாதிகாரப் போக்குகளும் அராஜகங்களுமே என்னைப் போராட்டத்திலிருந்து துரத்திவிட்டிருந்தன.


....நிலத்தில் பின்னாட்களில் நாளொன்றுக்கு நூறு கொலைகள் விழுந்தன, அவை சட்டபூர்வமான கொலைகள் அல்லது புரட்சிகரமான கொலைகள் என்று சொல்லப்பட்டு நியாயப்படுத்தப்பட்டனஇ அந்தக் கொலைகள் செய்தித்தாளின் ஒரு மூலையில் பிரசுரிக்கப்பட்டு அதேநாளில் மறக்கப்பட்டன. 

இப்படிப் பலவுண்டு. இதைவிட இந்த வரலாற்றுப் பதிவை புஸ்பராணி அக்கா வெறுமனே தகவற் திரட்டாக அல்லாமல், வாழ்வின் ருஸிமிக்க நிகழ்ச்சிகளின் உணர்வுக் கலவையாக - கலைத்துவம் மிக்க படைப்பாகத் தருகிறார். இதற்கு உதாரணமாக இன்னும் சில இடங்களை இங்கே சுட்டலாம். காலச்சூழலைச் சுட்டும்பொழுது, அப்போது லிபியாவின் இளம் அதிபர் கேணல் கடாபி ஒரு கதாநாயகனைப் போல இலங்கையின் செய்திப் பத்திரிகைகளில் சித்திரிக்கப்பட்டிருந்தார்என்கிறார்.

வரலாற்றில் எவ்வளவோ தூரம் நகர்ந்து வந்து விட்டோம். இன்று முதுமையான கடாபி அமெரிக்காவினால் சிறைப்பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால், அந்தக் காலத்தை விவரிக்கும்போது லிபியாவின் இளம் அதிபர் கேணல் கடாபி ஒரு கதாநாயகனைப் போல இலங்கையின் செய்திப் பத்திரிகைகளில் சித்திரிக்கப்பட்டிருந்தார் என எங்களை அந்தச் சூழலுக்கு அழைத்துச் செல்வது மட்டுமல்லாமல், வரலாற்றின் முரண்நகையை உணரவும் செய்கிறார்.

சிறையிலிருக்கும்போது, அறையொன்றில் ஒருவர் தங்கமுடியும் அல்லது மூவர் தங்குவதற்கே அங்கே அனுமதி என்ற விதிமுறையைப் பார்த்தவர்,சிறைச்சாலையில் ஒரு நூதனமான விதி இருந்தது. ஒரு சிறைக் கூண்டில் ஒருவரை அடைத்துவைப்பார்கள் அல்லது மூவரை அடைத்து வைப்பார்கள். இருவரை ஒரு சிறைக் கூண்டினிள் அடைத்து வைத்திருப்பதைச் சிறைச்சாலை விதிகள் அனுமதிப்பதில்லை. இருவருக்கு இடையில் எது நடந்தாலும் அதற்கொரு சாட்சியும் இருக்க வேண்டும் என்பது சட்டத்தின் பிடிவாதம்.

என எள்ளல் செய்கிறார். மேலும்,

ஒரு சிறிய அழகிய மலர் போல ரோஸ்மேரி எங்களது சிறையை அலங்கரித்துக்கொண்டிருந்தார்.

எனஅந்தத் துயர நிலையிலும் அவருடைய அழகுணர்ச்சி எப்படித் தொழிற்பட்டுள்ளது என்பதைக் காணமுடிகிறது. 

சிறையில் எதற்கு அழுகை வருகிறது, எதற்கு மகிழ்வு வருகிறது, எதற்கு சிலசமயங்களில் இரண்டும் சேர்ந்தே வருகின்றன என்பதற்கான காரணங்களையெல்லாம் வழமையான தருக்கங்களால் ஆராய்ந்து சொல்லிவிட முடியாது. அது வேறு உலகம், வெவ்வேறு தருக்கங்கள்.


அது சிறையாயிருந்த அதே நேரத்தில் இன்னொரு வகையில் சுதந்திர உலகாகவும் இருந்தது என்றே சொல்லத் தோன்றுகிறது.

என்று அந்த நிலையை ஆழ் அனுபவத்திற் கொள்கிறார்.

இதைப்போல, சாதியத்தின் பேராலான ஒதுக்கல்களை – புறக்கணிப்புகளை உணர்ந்த சிறுவயதிலேயே புஸ்பராணியின் மனதில் ஒரு சித்திரம் விழுகிறது.

கன்னியர் மடத்திலும் நான் சாதிக் கொடுமைகளை அனுபவித்தேன். அங்கிருந்த ஓரிரு கன்னியாஸ்திரிகளைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே சாதிய உணர்வுடனேயே நடந்துகொண்டார்கள். ஆனானப்பட்ட இயேசுநாதரே அங்கு படிக்க வந்திருந்தால் கூட தச்சனின் மகனென்று சாதிப் பாகுபாட்டிற்கு உள்ளாகியிருப்பார்.

இப்படி இந்தப் பதிவு நெடுகிலும் ஏராளம் சுவாரஷ்யமான, ஆனால் கடந்து செல்லக் கடினமான அனுபவங்கள் உள்ளன. அனுபவங்கள் என்பவை என்ன? உண்மைகள்தானே. அந்த உண்மைகள் உங்களை நோக்கிப் புன்னகைக்கின்றன. ஆனால், அவற்றை நீங்கள் கூர்ந்து நோக்கினால், அவற்றினுள்ளே ஆறாத காயங்கள் இன்னும் சிவந்தபடியே இருப்பதைக் காணலாம்.

00

இது ஈழவிடுதலைப் போராட்டத்தில் அவலங்களைச் சந்தித்த ஒரு பெண்ணின் வரலாறு.
ஒரு குடும்பத்தின் வரலாறு. ஒரு சமூகத்தின் வரலாறு. ஒரு இனத்தின் வரலாறு எனப் பலவிதமாக உணரப்படவேண்டியது.

ஆனால், இந்த வரலாற்றில் சிதம்பரியின் குடும்பம் பெற்ற நன்மைகள் என்ன? இந்த அரசியலால் அது பெற்ற அனுகூலங்கள் என்ன? இந்த மாதிரிக் குடும்பங்களின் அர்ப்பணிப்புகளைத் தமது அரசியல் அடித்தளங்களுக்குப் பயன்படுத்திய இயக்கங்களின், பாராளுமன்ற அரசியல்வாதிகளின் லாபங்கள்.... எப்படியிருந்தன? என்பதெல்லாம் இன்று கேட்கப்படவேண்டிய கேள்விகள்.

மயிலிட்டிக் கிராமத்தில் என்னுடைய இளமைப் பிராயமும் 1980 களில் இருந்திருக்கிறது. அந்த அழகிய கடற்கரையும் அந்தச் சூழலும் அங்கே வாழ்ந்த சனங்களும் இன்று சிதைந்த நிலையிலேயே இருப்பதைக் காணலாம். இன்னும் அந்தக் கிராமத்துக்குப் போகமுடியாத துக்கத்தோடு ஆயிரக்கணக்கான சனங்கள் முதுமையடைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய வயதினால் ஏற்படும் முதுமையையும் விட அவர்களுடைய துக்கத்தினால் ஏற்படுகின்ற முதுமையே கொடியது.

புஸ்பராஜாவின் நூலுக்கு ஏற்பட்ட வரவேற்பையும் விமர்சனத்தையும்போல இந்தப் புத்தகத்துக்கும் வரவேற்பும் விமர்சனமும் கிடைக்கும். வரலாறு எழுதப்படும்போது பல்வேறு பார்வைக் கோணங்கள் சாத்தியம். கோணங்களுக்கு ஏற்ப வரலாறும் வேறுபடும். அவைகளில் இதுவும் ஒன்று" என புஸ்பராஜாவின் நூலைக்குறித்து அ.மாக்ஸ் எழுதியதையே இங்கே நாமும் சுட்டலாம்.

இது கலைக்க முடியாத் துயரம். துரத்திட முடியா அவலம். ஆனால் என்ன செய்வது? - இதற்குள்தானே நாம் வாழவேண்டியுள்ளது. இதற்கெதிராக நாங்கள் இன்னும் போராட வேண்டியிருக்கிறது.

வணங்குகிறேன் உங்களின் முன்னும் உங்களின் குடும்பத்தின் முன்னும். அவர்களைப் போல இந்த மண்ணிலே வாழ்ந்த ஆயிரமாயிரம் மனிதர்களின் முன்னும். இந்த வரலாற்றின் முன்னும்.

கருணாகரன்
23.03.2012 கிளிநொச்சி

(நன்றி: தேனி இணையம்.) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com