Contact us at: sooddram@gmail.com

 

செய்தக்க அல்ல செயற்கெடும்!

(இ.ஜெயராஜ் )

மலரும்' இணையத்தில் சர்ச்சைக் களத்தில் சமராடலை ஆரம்பித்து வைத்தார் கம்பவாதிரி இ.ஜெயராஜ்.
வடக்கு மாகாண முதலமைச்சராக ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேண்டும் என வலியுறுத்தி நின்ற அவர், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் எட்டு மாத பணிக்காலத்தை எப்படிக் கணிப்பீடு செய்கிறார் என்பதைப் பார்ப்போமா? கௌரவ சி.வி. விக்னேஸ்வரன் அவர்கட்கு, முதலமைச்சர். வடமாகாண சபை. 27.05.2014. பேரன்புடையீர்! வணக்கம். நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன். மிகுந்த மனச்சோர்வுடன் இக்கடிதத்தை வரைகிறேன். தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு, வடமாகாண சபை முதலமைச்சராய் தாங்களாகி எட்டு மாதங்கள் முடிந்து விட்ட நிலையிலும், எதுவித சாதனைகளும் இன்றி, அச்சாதனையின்மைக்கு எதிராளிகளை மட்டும் குற்றம் சாட்டிக்கொண்டு, காலம் கடத்தும் தங்களின் மெத்தனப்போக்கு மிகுந்த மனவருத்தம் தருதலால், இப் பதவிக்குத் தாங்கள் வரவேண்டுமென வலியுறுத்தியவர்களில் ஒருவன் என்ற வகையில், வருத்தத்தோடு இக் கடிதத்தை தங்களுக்கு வரைய விழைகிறேன். * * * மற்ற இனத்தார்போல தமிழினமும் உரிமைபெற்று, இம்மண்ணில் சுதந்திரத்துடன் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என விரும்பும், பலருள் நானும் ஒருவன். விதி பிழைத்த காரணமோ என்னவோ, அரசியல் தலைமைகள் சரியாக அமையாதுபோக, பிழையான வழிநடத்தலால், இம்மண்ணில் தமிழர்பட்ட இன்னல்களுக்கு அளவேயில்லை. கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, 'சரிவரும், சரிவரும்' என நினைந்து, பிழைகளையே சந்திக்கும் அபாக்கியத்திற்கு, ஏனோ நம் இனம் தொடர்ந்து ஆளாகி வருகிறது. இடைக்காலத்தில் இவ்வின்னல்கள் உச்ச நிலையடைந்தன. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, ஆயுதப்போரின் உக்கிரத்தினைச் சந்தித்து, தமிழர்பட்ட துயரோ சொல்லில் அடங்காதது. யாழ் மண்ணில் வாழ்ந்து, அத்துயரங்களை நேரில் அனுபவித்தவன் என்ற முறையில், அவ்வதிர்வுகள் இன்றும் என் மனம்விட்டுப் போக மறுக்கின்றன. என்றுதான் நமக்கு நிம்மதி? என்று ஏங்கியிருந்த நிலையில், திடீரென ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிர், உறவு, உடைமை என அனைத்தையும் இழந்து, கேட்பாரற்ற ஏதிலிகளாய் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீருக்கோர் அளவில்லை. இனி எம் வாழ்வு என்னாகப்போகிறதோ? என அனைத்துத் தமிழர்களும் அதிர்ந்து நின்றனர்.

* * * இந்நிலையில், கட்சிகளாய்த் தமது அமைப்பைப் பதிவு செய்துகொண்டு இயங்கத் தொடங்கியிருந்த, ஜனநாயக வழிக்குத் திரும்பிய ஆயுதக்குழுக்கள் சிலவும், முன்னரே ஜனநாயக வழியை ஏற்று இயங்கி, ஆயுதப் போராட்டக் காலத்தில் ஒடுங்கியிருந்த, தமிழர் கூட்டணி, தமிழரசு கட்சி போன்ற மிதவாதக் குழுக்கள் சிலவும் ஒன்றிணைந்து, 'தமிழர் கூட்டமைப்பு' எனும் அணியை உருவாக்கின. தமது அணியே, தமிழர்களது ஏகத் தலைமை என அறிவித்து, மீண்டும் ஜனநாயக வழியில் தமிழர்தம் சுதந்திரத்திற்காய், போராடப் போவதாய் முழங்கி அவை முன்வந்தன. அடிப்படையில் இவர்கள் அனைவரும் புலி எதிர்ப்பாளர்களாகவே இருந்தும், புலிகளுக்குத் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த பேராதரவை மனதில் கொண்டு, புலியைப் பார்த்து பூனை குறி வைத்தது போல, இவர்கள் தம்மை புலி ஆதரவாளர்களாகவும், அவர்தம் வழி நடப்பவர்களாகவும், வெளிப்படக் காட்டிக்கொண்டனர். இவர் வகுத்த இராஜதந்திர வியூகம் தமிழ் மக்கள் மத்தியில் ஓரளவு வெற்றி பெற்றது உண்மையே. முன்பு சில காலம் புலிகளுடன் இவர்தமக்கிருந்த உடன்பாட்டுப் போக்கைக் கருதி, புலிகளின் தோல்வியின்பின் தமிழினத் தலைமையேற்க முன்வந்த இவர்தம்மை, ஈழத்தமிழர்களும், ஈழத்தமிழ் ஆதரவு சக்திகளும், நடுநிலைகொண்ட உலக நாடுகள் சிலவும் ஏற்க முன்வந்தன. தமிழரின் அழிவுக்குக் காரணமான பேரின அரசின் சார்புகொண்ட சில கட்சிகள், தமிழர்க்குத் துணைசெய்ய எவ்வளவோ முயன்றும், உரிமை வேட்கையால் அவர்தம்மை நிராகரித்து, தமிழினம், கூட்டமைப்புக்கு முழு மனதோடு ஆதரவு தந்து, தொடர்ந்த பாராளுமன்றத் தேர்தலில், ஏகத் தலைமையெனும் கூட்டமைப்பின் கோரிக்கையை அங்கீகரித்தது.

 * * * தம் தலைமைக்குக் கிடைத்த அங்கீகாரத்தாலும், பதவிகள் தந்த ஆனந்தத்தாலும், முன், ஒடுங்கியிருந்த கூட்டமைப்புத் தலைவர்கள் சற்றுத் தடுமாறி, தம் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினர். இனத்தின் வெற்றி! என்ற அவர்களின் கோஷம், தமது கட்சியின் வெற்றி! என்று மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. தத்தம் வலிமைநோக்கி, கூட்டமைப்பைக் கட்சியாய்ப் பதிவுசெய்ய வேண்டுமென்று ஒரு சாராரும், முடியாது என்று மற்றொரு சாராருமாக அறிக்கைகள் விட, அதனால் வெடித்த முரண்பாடுகள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கின. ஆனாலும், இன விடுதலை நோக்கிய ஏகத் தலைமையாய் இவர்கள் இயங்குவார்கள் என, அப்பாவித் தமிழர்கள் அப்போதும் நம்பினர்.

 * * * இந்நிலையில்தான், வராது, வராது என நம்பியிருந்த வட மாகாண சபைத் தேர்தலை, உலக சமுதாயம் தந்த நெருக்கடியின் காரணமாய், திடீரென ஜனாதிபதி அறிவித்தார். இவ் அறிவிப்பால் கூட்டமைப்பின் தடுமாற்றம் மேலும் வெளிப்படத் தொடங்கியது. முதலமைச்சர் பதவியில் கண்வைத்து, அப்பதவிக்குப் பொருத்தமானவர் தாமே என நிரூபிக்க, கூட்டமைப்புக்குள் இணைந்திருந்த ஒவ்வொருவரும், தனித்தனி வியூகம் அமைக்கத் தொடங்கினர். அவர்களுட் சிலர் தம் தியாகங்களுக்கான பரிசாய் அப்பதவி தரப்பட வேண்டுமென, சிறிதும் நாணமின்றிப் பகிரங்கக் கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களின் பதவி நோக்கிய, திட்டமிட்ட தியாகங்களின் உண்மைத்தன்மையை, அப்போதுதானும் தமிழினம் சரிவர இனம் காணவில்லை. அதுதான் தமிழினத்தின் தலைவிதி. வலியரெனின் வழி மொழிவதும், மெலியரெனின் மிஞ்சுவதும், அன்று தொட்டு இன்றுவரை தமிழரின் அடிப்படைப் பண்பாகிவிட்டது. வென்றவரை விமர்சனமின்றி ஏற்றுக் கொள்வதும், விழுந்த மாட்டுக்குக் குறி சுடுவதுமான இயல்புகள், என்று எம்மை விட்டுத் தொலைகிறதோ, அன்றுதான் எம் இனம் உருப்படும்!  

* * * விடயத்திற்கு வருவோம். இவர்தம் முதலமைச்சர் இருக்கைக்கான பதவிப்போட்டி, இனத்தலைமைக்கு குழிபறித்துவிடும் என அஞ்சி, இனப்பற்றுள்ள பலரும் ஒன்றிணைந்து, இக்கட்சிகளுக்கு அப்பால், சமுதாய மதிப்புமிக்க, தலைமையைப் பெருமை செய்யக்கூடிய, நடுநிலைமையும் அறிவாற்றலும் ஆளுமையும் உள்ள, பதவிப் பற்றற்ற ஒருவரை, இப்பதவியில் அமர்த்த வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தனர். அலசி ஆராய்ந்ததில் நம் ஈழத் தமிழினத்தில்,மேற் தகுதிகள் அனைத்தும் பொருந்திய ஒருவராய், அனைவராலும் தாங்கள் ஒருவரே கருதப்பட்டீர்கள்! அதனால், மேற்பதவியைத் தாங்கள் ஏற்க வேண்டும் எனும் கோரிக்கை, மெல்ல மெல்ல எழுந்து பின் வலுப்பெறத் தொடங்கியது.  

* * * அக்கருத்து வெளிப்படுவதற்கான முற்காரணமும் இருக்கவே செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதியாய் பதவியேற்கையில், தமிழில் சத்தியப்பிரமாணம் செய்த தங்களின் துணிவும், ஓய்வு பெறுகையில் தங்கள் உரையில் காட்டிய நிமிர்வும், எங்கள் கம்பன் கழகத்தின், கம்பன் விழா மேடைகளிலும், வேறு சில அரங்குகளிலும், சூழ் நிலைக்கேற்ப அவ்வப் போது குறிப்பாகவும், நேரிடையாகவும், தாங்கள் முன்வைத்த வித்தக அரசியற் கருத்துக்களும், அக்கருத்துக்களுக்கு தமிழ்ப் பத்திரிகைகள் கொடுத்த முக்கியத்துவமும் சேர்ந்து, இதற்கு முன் எந்த அரசியல் களத்திலும் நின்று நீங்கள் இயங்காத போதும், அதுவரை அரசியல் போராட்டம் எதிலும் தாங்கள் ஈடுபடாத போதும், தங்களை ஓர் துணிவு மிக்க அரசியல் சார்ந்த தலைமைத்தன்மை கொண்டவராய், தமிழ் மக்களை நினைக்க வைத்தது. ஏன்? நான் கூட அக்கருத்தில் உடன்பாடுடையவனாகவே இருந்தேன். அதனால் தான் வடமாகாண சபை முதலமைச்சராக, தங்களைக் கொணரவேண்டும எனும் விருப்பு ஒருமித்து பலரிடமும் எழுந்தது.

 * * * ஆரம்பத்தில் அரசியலுள் நுழைய மாட்டேன் என்றும், இப்பதவியை ஏற்க மாட்டேன் என்றும், பிடிவாதமாய்க் கூறி வந்த நீங்கள், வேறு சிலரை இப்பதவிக்காக வழிமொழியவும் செய்தீர்கள். பதவி விருப்பின்றிய தங்களின் மேற்செயற்பாடு பிடித்துப்போக, நீங்களே அப்பதவியை ஏற்க வேண்டும் எனும் கோரிக்கை, மேலும் வலுப்பெறத் தொடங்கியது.  

* * * தங்களுடன் இருந்த உறவால், நானும் தங்கள் நல்லியல்புகளையும் ஆற்றலையும், ஆளுமையையும் நினைந்து, இப்பதவிக்குத் தாங்களே பொருத்தமானவர் எனக் கருதி, இப்பதவிக்கு தாங்கள் வரவேண்டும் என்னும் கருத்து கூர்மை பெறுவதற்கு முன்னரேயே, சமுதாயத்துள் அக்கருத்தை விதைக்க என்னாலானவற்றைச் செய்யத்தொடங்கினேன். கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில், இந்து மாமன்றத்தினரால் நடாத்தப்பெற்ற, தங்களின் நூல் வெளியீட்டு விழாவில், 'பதவியேற்றுத் தமிழினத்துக்குக் கைகொடுங்கள்' என, பகிரங்க அழைப்பு விடுத்தேன். பின்னர், வீரகேசரி பத்திரிகை கேட்டபோது, வெளிப்படையாய், 'நீங்களே இப்பதவிக்குப் பொருத்தமானவர்' என உரைத்தேன். அது மட்டுமல்லாமல், தடுமாற்றம் விட்டு நீங்கள் இப்பதவியை ஏற்க வேண்டுமென வலியுறுத்தி, தினக்குரலில் புனைபெயரில் ஒரு நீண்ட கடிதமும் வரைந்தேன். தொடர்ந்து தொலைபேசியில், 'பதவிக்கு வாருங்கள்' என உங்களை நான் கோரியபோது, அதை மறுத்துத் தாங்கள் காட்டிய உறுதிகண்டு, தங்கள் தகுதிக்கு அது பொருத்தமற்றது எனக் கருதித்தான், அங்ஙனமாய் நீங்கள் உரைப்பதாய் நினைந்து, அதன் பின் தொடர்ந்து தங்களை வலியுறுத்தாது விட்டேன்.  

* * * இதற்கிடையில், தங்களை இப்பதவிக்கு நியமிக்கும் கோரிக்கை மேலும் வலுப்பெற, கூட்டமைப்புக்குள் தத்தம் அணிக்காய்த் தலைமை கோரியவர்கள், வெளியிலிருந்து வேற்றொருவர் வந்தால், வருங்காலத்திலேனும் தலைமை தமக்கு வாய்க்காதெனக் கருதி, தமக்குள் திடீரென விசித்திர ஒற்றுமை காட்டி, மாவை.சேனாதிராஜா அவர்களே பதவிக்கு உரியவர் என, வலியுறுத்தி வாதாடத் தொடங்கினர். 

 * * * அணியின் ஒற்றுமையை நிலைநிறுத்த முடியாது திணறிய, மூத்த தலைவர் சம்பந்தன் அவர்களும், இப்பதவிக்குத் தங்களை அழைத்து வந்துவிட்டால், தன் தலையிடி குறைந்து, அணி ஒற்றுமை காப்பாற்றப்படும் எனும் நம்பிக்கையில், இப்பதவிக்காகத் தங்களின் வருகையை விரும்பத் தொடங்கினார். அவர் தங்களைச் சந்தித்தபின், 'போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டால் பதவி ஏற்பது பற்றி சிந்திக்கலாம்' என, தாங்கள் பிடிவாதம் விட்டு மெல்லப் படியிறங்கத் தொடங்கினீர்கள். 

 * * * அங்ஙனமாய், திடீரென வெளிவந்த, முற்கொள்கைக்கு முரணான, தங்களின் அறிக்கை கண்டு சற்று மனங்குழம்பினேன். உங்கள் கௌரவத்திற்குப் பாதிப்பு இல்லாது, பதவி தங்களைத் தேடி வரவேண்டும் என நீங்கள் நினைந்தது புரிந்தது. அக்கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. பதவிக்கு யாரை நியமிப்பது எனும் குழப்பம் உச்ச நிலையடைந்தபோது, தங்களை அப்பதவியில் அமர்த்திவிட வேண்டுமென, மனோகணேசன் அவர்களால் திட்டமிடப்பட்டு, கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் நான் பேசினேன். சமுதாய நலன்நோக்கி உழைக்க முன்வருவோர், தன்னலத்தைவிட சமூக நலத்தையே முதன்மைப்படுத்த வேண்டும் என, நினைப்பவன் நான். அன்று தாங்கள் அவையில் முன்னிருக்கத் தக்கதாக, எனது அக்கருத்தை வலியுறுத்தினேன். வெற்றிலை வைத்து அழைக்க இது விருந்தல்லவே! இனத்தின் இக்கட்டான நிலையில் ஏற்றம் செய்ய, கூப்பிடாமல் ஓடி வருபவனல்லவா தலைவன். கூட்டமைப்பினர் அனைவரும், இப்பதவிக்காக மாவை. சேனாதிராஜாவை, ஒருமித்து முன்னிருத்தி இருந்த தருணத்தில், கடைசி நேரத்தில் வந்த தங்கள் சம்மத அறிக்கையால், கூட்டமைப்புக்குள் மேலும் பல குழப்பங்கள் விளைந்தன. முன்னரே இப்பதவியை ஏற்கத் தாங்கள் முன்வந்திருந்தால், இக்குழப்பங்களைக் குறைத்திருக்கலாம். எப்படியோ, பல சர்ச்சைகளின்பின் ஏக மனதாக (உள்ளுக்குள் வெறுத்தாலும்) கூட்டமைப்பு, தங்களை முதலமைச்சர் வேட்பாளராய் அறிவித்தது.  

* * * வேட்பாளராய் தாங்கள் அறிவிக்கப்பட்டதன் பின் நிகழ்ந்த, தங்கள் செயற்பாடுகளில் எனக்குப் பெரிய திருப்தி ஏற்படவில்லை. பதவியை மாவை விட்டுத் தந்ததற்கான நன்றியை வெளிப்படுத்த, சுயம் விட்டு நீங்கள் அதிகம் படியிறங்கியதாய் எனக்குப்பட்டது. அவர்களுடனான முன் கசப்பை நீக்க, சற்று அதிகமாகவே அவர்களோடு நீங்கள் உடன்பட்டு இயங்கினீர்கள். அந் நடவடிக்கையில் தங்களின் தனித்தன்மை பாதிக்கப்படுவதாயும் நான் உணர்ந்தேன். தங்களிடம் நான் எதிர்பார்த்தது, ஒரு நீதிபதியின் ஆளுமையையும் கட்டுப்பாட்டையும் நிமிர்வையுமே! ஆனால், கிட்டத்தட்ட ஓர் அரசியல்வாதியாகவே நீங்கள் இயங்கினீர்கள். அளவுக்கதிகமான உணர்ச்சித் தூண்டுதல்களோடு நீங்கள் ஆற்றிய உரைகளும், பத்திரிகைகளில் வெளிவந்த தங்களின் சில அறிக்கைகளும், வாக்கு வேண்டி சந்தை முதலிய இடங்களில் தாங்கள் உலாவந்த செய்திகளும், சற்று நெருடலாக இருந்தது உண்மை.  

* * * இப்பதவிக்கு வருவதாய்த் தாங்கள் முடிவு செய்ததும், தீர்க்கதரிசனமாய்ச் சில முடிவுகளை எடுத்திருப்பீர்கள் என நினைந்தேன். 'எண்ணித்துணிக' எனும் வள்ளுவன் வாக்கை, நான் உங்களுக்குச் சொல்லித்தரவேண்டிய அவசியமில்லை. இதுவரை நடந்த போராட்ட வரலாறுகளை அலசி ஆராய்ந்து, புதிய பாதை அமைத்து இனத்தை வழிநடத்துவீர்கள் எனப் பெரிதும் எதிர்பார்த்தேன். தமிழர்கள் கொண்ட இலட்சியம், அந்த இலட்சியத்தில் இருந்த தவறுகள், இதுவரையான போராட்டப்பாதையில் நிகழ்ந்த பிழைகள், அப்பிழைகளைச் சரிசெய்து போராட்டத்தைப் புதுப்பிக்கும் வழி முறைகள், முடிந்த பாதிப்புக்களிலிருந்து மக்களை வெளிக்கொணர்ந்து, உரிமைப் போராட்டம் நோக்கி சமயோசிதமாய் நகர்த்தும் முறைகள் என்பவற்றோடு, வினைவலி, தன்வலி, மாற்றான்வலி, துணைவலி என்பவற்றையும் சீர்தூக்கி, நன் முடிவுகளால் வெற்றிப்பாதையில் இனத்தை விரைந்து நடைபோட வைப்பதற்காய், பலவற்றையும் சிந்தித்தே இப்பாரிய முடிவினை எடுத்திருப்பீர்கள் என, எண்ணி இறுமாந்தேன். 

 * * * ஆனால் என் எண்ணங்கள் மண்ணாகின. நீங்களும் சாதாரண அரசியல்வாதிகள் போல, யதார்த்தம் உணராது மக்கள் உணர்வுகளைத் தேவையின்றித் தூண்டி, வாக்குச் சேகரிக்க முயன்றீர்கள். தங்களின் பேச்சுக்களும் அறிக்கைகளும், தமிழர்களின் உரிமைப் போராட்டம் என்பது, சிங்கள மக்களுக்கு எதிரானது என்பதுபோன்ற தேவையற்ற விம்பத்தை உருவாக்கி, நடுநிலைகொண்ட சில சிங்களத் தலைவர்களையும் சிங்களப் பொதுமக்களையும் கூட, தமிழர்மேலும் தங்கள்மேலும் வெறுப்புக்கொள்ள வைத்தன. 'வெளிநாடுகளின் ஆதரவைக் கோருவேன்' என்றும், 'இது மூன்றாவது ஈழப்போர்;' என்றும் தங்களால் வெளியிடப்பட்ட தேர்தல் கோஷங்கள், தமிழர்களையும் சிங்களவர்களையும் வேறு வேறு விதங்களில் தூண்டின. 

 * * * தங்களின் அறிக்கைகளால், போராளிகளைப்போல இவரும் அரசுடன் மோதி நிற்கப் போகிறார் என நினைந்து, தமிழர்கள் ஊக்கப்பட்டார்கள். நம் தேசத்தை பிறநாடுகளின் உதவிகொண்டு சிதைக்கப் பார்க்கிறார் இவர் என, சிங்களவர்கள் கோபப்பட்டார்கள். இரண்டு கட்டப் போர்கள் தோல்வியில் முடிந்துவிட்டதால், மூன்றாம் கட்டப்போரைத் தொடங்குகிறோம் எனத் தாங்கள் வெளியிட்ட அறிக்கை, அரசியலில் நீங்கள் புதிய பாதை அமைப்பீர்கள் என எதிர்பார்த்த அறிஞர்க்கு சோர்வைத் தந்தது. நிகழ்ந்து முடிந்த போர்ப்பாதிப்புக்களில் இருந்து எந்தவித அனுபவங்களையும் பெற்றுக்கொள்ளாமல், எடுத்தாற்போல் தேவையின்றி உணர்ச்சிகளைத் தூண்டி உங்களிடம் இருந்து வந்த அறிக்கைகள், இனங்களுக்கிடையில் இருந்த பகையை மேலும் வளர்க்குமாற்போல் அமைந்துபோயின.  

* * * உங்கள் அறிக்கைகளால், பின்னர் நீங்களே சங்கடப்பட்டீர்கள். தமிழ்மக்களின் பேராதரவுடன் முதலமைச்சராயானதும், தாங்கள் யார் முன் சத்தியப்பிரமாணம் எடுப்பது எனும் கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. ஆரம்பத்தில் ஜனாதிபதியின் முன் சத்தியப்பிரமாணம் எடுக்கமாட்டேன் என்பதாய் வந்த தங்களின் அறிக்கையால், உணர்ச்சிகளின் உச்சத்தில் அரசியல் பழகிய தமிழர்கள், ஏதோ இவர் அரசுக்கெதிராக போர்க்கொடி தூக்கப்போகிறார் என எதிர்பார்த்து, பின்னர் ஜனாதிபதியின் முன்னிலையில், நீங்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கப் புறப்பட்டபோது சோர்ந்து போயினர். மக்களின் உணர்வுகளைப் புரிந்த கூட்டமைப்பின் மற்றைத் தலைவர்கள் சிலர், ஜனாதிபதியின் முன் செல்லாமலும், தங்களின் முன் வாராமலும் ஆங்காங்கு தமது சத்தியப்பிரமாணத்தை முடித்து, மக்களின் ஆதரவைப் பெற்றும் தங்களை இக்கட்டிற்கு ஆளாக்கியும் நற்பெயர் தேடிக்கொண்டனர்.  

* * * ஆரம்பத்தில் வாய்வீரம் காட்டிய தாங்கள், சத்தியப்பிரமாணப் பிரச்சனையில், எதிர்த்தவர்களுக்கு தக்கபடி எந்த சமாதானமும் உரைக்காமல், அரசுடன் இணைந்து செயற்பட்டே உரிமை பெறவேண்டியிருக்கிறது என்றாற்போல், முன்னுக்குப் பின் முரணாய் அறிக்கை வெளியிட, அவ் அறிக்கைகளால் மக்கள் மிகவும் சோர்ந்து போயினர். உங்கள் அறிக்கை கண்டு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என, இதைத்தானே நாங்கள் முன்னர் உரைத்தோம் என, தங்களைக் கிண்டல் செய்யும் அளவுக்கு, தங்களின் செயற்பாடுகள் முன்னுக்குப் பின் முரணான அமைந்தது துரதிஷ்டமே

 * * * எப்படியோ, தமிழர்கள் தமது சுதந்திர வேட்கையினாலும், உங்கள்மேல் கொண்ட நம்பிக்கையினாலும், உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும், வரலாறு காணாத வெற்றியைத் தந்து, தமது உணர்வின் தூய்மையை ஒற்றுமையாய் வெளிப்படுத்தினர். தாங்கள் வீரியமாய் வெற்றி கொண்டீர்கள். உலகமும் அவ்வெற்றி கண்டு ஆச்சரியப்பட்டது.  

* * * கிடைத்தற்கரிய அவ்வெற்றிக் களிப்பு நீங்குமுன், அமைச்சுப் பதவிகள் வேண்டி, உங்கள் அணிக்குள் ஏற்பட்ட அருவருக்கத்தக்க முரண்பாடுகள், தமிழர்களை வெறுப்பின் உச்சத்துக்கும், எதிரிகளை மகிழ்வின் உச்சத்துக்கும் கொண்டு சென்றன. 

 * * * கூட்டு இயக்கத்தில் முரண்பாடுகள் வருவது இயற்கையே. அம்முரண்பாடுகளை உலகு அறியுமுன், பகையின்றி சரிசெய்து தீர்க்கும் பொறுப்பு அவ்வணியின் தலைவர்க்கே உரியது. தாங்கள் அக்காரியத்தை இயற்றுவீர்கள் எனப் பலரும் எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை. மாறாக, அப்பகையை மேலும் வளர்க்கும் வண்ணம், ஓர் அணி சார்ந்து, குறித்த குழுவினரின் கைவயப்பட்டு, தாங்கள் இயங்குவதாய்த் தோன்றியபோது, நாம் அதிர்ந்து போனோம். 

 * * * நீங்கள் நினைத்திருந்தால் அப்போதே, பதவிநோக்கிய குழு மோதல்களைத் தவிர்த்திருக்கலாம். 'உரிமைநோக்கிய போராட்டத்தில் ஒன்றுபட்டு அனைவரும் உழைக்க முன்வந்தால் மட்டுமே, தொடர்ந்து பதவியில் இருப்பேன், அன்றேல் பதவியைத் துறந்து வெளியேறுவேன்' என, அந்நேரத்தில் தாங்கள் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தாலே போதும். இவரின் வெளியேற்றத்தால் தமிழ் மக்கள் எங்களை, சுயநலமிகளாய்க் கருதி விடுவர் என நினைந்தேனும் அனைவரும் மௌனித்திருப்பர். கொள்கை முரண்பாடுகள் ஏற்படும்போது, பதவிகளைத் தூக்கி எறியும் தெம்பு தங்களுக்கு இருப்பதாகவே நான் கருதியிருந்தேன். முதலமைச்சர் பதவியின் விரிந்த அதிகாரமும் புகழும், தங்களை அங்ஙனம் செய்யத் தூண்டாமல் தடுத்து விட்டமை கண்டு மனவருத்தப்பட்டேன்.  

* * * வெற்றியின் பின்னதான தங்களது நடவடிக்கைகளில் தொடர்ந்தும் பல சறுக்கல்கள். தங்களிடம் பாரிய ஆளுமைத் தலைமையை எதிர்பார்த்த எமக்கு, இச்சறுக்கல்கள் பெரும் சோர்வைத் தருகின்றன. 'முதற்கோணல்' எனும் பழமொழியின் முழுமை தாங்கள் அறிந்ததே. எடுத்தாற்போல் நிகழும் இச்சறுக்கல்களால், தங்கள் நிர்வாகத்தில் மேற் பழமொழி முற்றுப்பெற்று விடுமோ என, இன்று பலரும் அஞ்சத் தொடங்கியுள்ளனர். செவி கைக்கும் எனத் தெரிந்தும், தங்கள் கவிகைக்கீழ் உலகு வரவேணும் எனும் விருப்பத்தால், அச்சறுக்கல்களை சுட்டிக்காட்ட வேண்டியது கடமையாகிறது. சொற்பொறுத்துச் சிந்திப்பீர்கள் எனக் கருதி அவற்றைக் கீழே வரிசைப்படுத்துகிறேன். 

 சறுக்கல் 1: தேர்தலின் முன் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றியும், எம் மீதான தமிழ் நாட்டாரின் ஈடுபாடு பற்றியும் தாங்கள் அளித்த பேட்டிகள் தேர்தலின் முன்பாக புலம்பெயர் தமிழர்களின் போராட்ட ஈடுபாடு பற்றி தாங்கள் வெளியிட்ட கருத்து பலரதும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. இணைய ஏடுகளில் தாங்கள் கடுமையாய் விமர்சிக்கப்பட்டீர்கள். அப்போது கூட இது உங்கள் சுயத்தின் வெளிப்பாடு என நினைந்து நான் மகிழ்ந்தது உண்மை. ஆனால், எழுந்த எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சியும் மூத்த அரசியலாளர்களின் ஆலோசனையை ஏற்றும், சுயமிழந்து தாங்கள் வெளியிட்ட மறுப்பு ரசிக்கும்படியாக இருக்கவில்லை. ஊடகங்கள் வெளியிட்ட அக்கருத்தை இது எனது கருத்தன்று என மறுத்ததோடு, அப்பிழைக்காக ஊடகங்களின் மேல் பழி போட்டீர்கள். அரசியலில் தங்களின் சுய ஆளுமை பலியானதற்கான முதற்சான்றாய் இச்சம்பவம் அமைந்து போயிற்று. புலம்பெயர் தமிழர்கள் பற்றிய தங்கள் பேட்டிக்கு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, அவசர அவசரமாக சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் வெளிநாடு சென்று வந்தமையையும் காண முடிந்தது. அது போலவே ஈழப் பிரச்சினையில் தமிழ்நாட்டாரின் அக்கறை பற்றி தாங்கள் ஓர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பெரும்பான்மையினத்தாருடனான தமிழ் மக்களின் முரண்பாட்டை கணவன் - மனைவி சண்டையாகவும், அதில் தலையிடும் தமிழ் நாட்டாரின் செயலை அயல்வீட்டாரின் செயலாகவும் உவமித்து தமிழ் நாட்டாரை ஒதுக்கித் தாங்கள் வெளியிட்ட கருத்துக்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அப்போதும் முன்பு செய்தது போலவே 'பல்டி' அடித்து அதனையும் பேட்டியாளரின் பிழையாய்க் காட்டித் தப்ப முயன்றீர்கள். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எடுத்தாற்போல் முதன் முதலில் தாங்கள் வெளியிட்ட 'தமிழக முதல்வரைச் சந்திக்கப்போகிறேன்' எனும் தேவையற்ற அவசர அறிக்கையில், முன்னர் தாங்கள் அளித்த பேட்டியின் பாதிப்பைத் தவிர்க்கும் அவசரம் தெரிந்தது. பதவியேற்று எட்டு மாதங்கள் முடிந்து விட்ட இன்றைய நிலையிலும் தமிழ் நாடு செல்லும் தங்களின் முதல் அறிக்கை விடயம் சாத்தியமாகாமல் இருப்பது தங்களின் ஆளுமைக் குறைபாடின் வெளிப்பாடென்றே எண்ணத்தோன்றுகிறது. ஆரம்பத்திலேயே நிகழ்ந்த இத்தவறுகள் தங்களிடம் முன்னர் காணப்படாத அவசர வெளிப்பாடுகளை உணர்த்தின. இன்று அறிக்கைகளை விடுவதும் பின் மறுப்பதுமான செயற்பாடு தங்களின் வாடிக்கையாகி விட்டது. ஆசிரியர்களை 'தறுதலைகள்' என்று சொன்னதும், புலிகளை விமர்சித்ததுமான தங்களின் பல அறிக்கைகள் பின்னர் தங்களாலேயே வாபஸ் பெறப்பட்டன. இன்றும் பெறப்பட்டு வருகின்றன.  

சறுக்கல் 2: வெற்றியின் பின்னர் பதவிப்பிரமாணம் எடுப்பதுபற்றி எழுந்த சர்ச்சையில் தாங்கள் காட்டிய குழப்பம் முன்சொன்னதுபோல், தேர்தல் கால உரைகளில் தாங்கள் காட்டிய ஆவேசம் கண்டு, உணர்ச்சி வசப்பட்ட பலரும் ஜனாதிபதியின் முன் தாங்கள் பதவியேற்பது பற்றிய சர்ச்சையை எழுப்பியபோது, தாங்கள் அங்ஙனம் செய்யமாட்டீர்கள் என்றே கருதினார்கள். தங்கள் அணியின் உள்ளிருந்த மற்றைத் தலைவர்களில் சிலரும் கூட தாங்கள் அங்ஙனம் செய்யக்கூடாதென்று போர்க்கொடி தூக்கினார்கள். தாங்கள் கூட ஆரம்பத்தில் அங்ஙனமே கருத்து வெளியிட்டு விட்டு பின்னர், திடீரென மனம் மாறி அவ்வெதிர்ப்புகளுக்குத் தக்கபடி தீர்வு காணாமலும், நியாயபூர்வமான பதில் அளிக்காமலும் எதேச்சாதிகாரமாய் உங்கள்பாட்டுக்கு ஜனாதிபதியின்முன் பதவியேற்றீர்கள். அச்செயலில் தவறிருப்பதாய் எனக்குப்படவில்லை. ஆனால், அச்செயலை ஆற்றிய வழிமுறையில், தங்களின் ஆளுமைத் தலைமையின் அடையாளங்களைக் காணமுடியவில்லை என்பது உண்மை.  

சறுக்கல் 3: உறவு விழாவாய்ப் பதவியேற்பு விழாவைக் காட்டிக்கொண்டமை பதவியேற்பு விழாவில் உங்கள் உறவுகளுக்கு நீங்கள் வழங்கிய முக்கியத்துவம் பலரையும் முகஞ்சுளிக்க வைத்தது. பதவியேற்பின் பின் மகன்கள், மருமகள்கள் சூழ நீங்கள் எடுத்துக்கொண்ட குடும்பப் புகைப்படம் பத்திரிகைகளில் வெளிவந்தபோது (தேர்தல் காலத்தில் தங்களைத் தாக்குவதற்காய் சிலர் அவர்களின் தனி வாழ்வு பற்றி விமர்சித்திருந்தனர்.) சற்றுக் குழப்பமாக இருந்தது. தொடர்ந்து வெளிவந்த தங்களின் சம்பந்தியுடனான அணைப்புப் படங்களையம் இரசிக்க முடியவில்லை. அச்செயல்களை தாங்கள் தவிர்த்திருக்கலாம். ஜனாதிபதியின் முன்னான பதவிப்பிரமாணத்தை ஒரு குடும்பக் கொண்டாட்டமாக, உறவுகளை ஒன்று கூட்டி தாங்கள் நடாத்தியதின் மர்மம் இன்று வரை புரியவில்லை. பாதிக்கப்பட்ட ஓர் இனத்தின் பிரதிநிதியாய் அன்றைய நிகழ்வில் தாங்கள் கலந்து கொள்ளாதது பெரும் வருத்தம் தந்தது. இத்தேர்தலில், தங்களின் வெற்றியின் பின்னணியில் தங்கள் குடும்பத்தாரின் பங்களிப்பு ஏதும் இருக்கவில்லை. பங்களிப்புச் செய்த முக்கியமான எவரும் அந்நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்படவில்லை. இப்பதவியேற்பில், மும்மதத் தமிழ்த் தலைவர்களையும் தங்களை இப்பதவிக்கு நகர்த்தப் பாடுபட்ட பிரமுகர்களுள் ஒரு சிலரையும், போரால் பாதிக்கப்பட்டவரில் ஒரு சிலரையும் கலந்துகொள்ள வைத்திருப்பின் அது பொருத்தமானதாக இருந்திருக்கும். பிள்ளைப்பாசம் உங்கள் கண்களை மறைத்து விட்டது. மகன்களோடும், மருமகள்களோடும் சம்பந்தியோடும் உறவு கொண்டாடி தாங்கள் கலந்த கொண்ட பதவியேற்பு வைபவத்தில் ஓர் இனத்தலைவராய் உங்களைக் காணமுடியவில்லை. ஒரு குடும்பத்தலைவராகவே உங்களைக் காண முடிந்தது. அண்மையில் இந்தியப் பிரதமராக பதவியேற்ற திரு.மோடி அவர்கள் பதவியேற்பு விழாவிற்கு தனது குடும்பத்தார் எவரையும் அழைக்கவில்லை எனும் செய்தியைப் படித்தபோது, தங்களின் பதவியேற்பு வைபவத்தைத்தான் நினைக்கவேண்டியிருந்தது.  

சறுக்கல் 4: அமைச்சுப் பொறுப்புக்களை வழங்குவதில் வெளிப்பட்ட குழப்பங்கள் முதலமைச்சராய் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அமைச்சுப் பதவிகளுக்கான போட்டி தொடங்கியது. யாருக்கு என்ன பதவி வழங்குவது என்பதில் தாங்கள் சரிவர செயற்படவில்லை என்பது பலரதும் கருத்து. கூட்டமைப்பில் இருக்கும் மற்றைத் தலைவர்கள் இப்பதவி வழங்கலில் அதிருப்தியுற்று உங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். நிர்வாக முதல் முயற்சியிலேயே தங்கள் அணிக்குள் பாரிய பகை விதைக்கப்பட்டது. அப்போது தகுதிநோக்கித்தான் பதவிகள் வழங்கியதாய் தாங்கள் உரைத்திருந்தீர்கள். ஆனால், உங்கள் அணியில் இருந்த மற்றைய கட்சித் தலைவர்கள் அக்கருத்தை ஏற்கவில்லை. அவர்கள் ஒன்றிணைந்து நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கட்சிக்கொரு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதாய், முன்னர் தங்களால் வாக்களிக்கப்பட்டமையை வெளிப்பட எடுத்துச் சொல்லியிருந்தனர். அதற்கான மறுப்பு தங்களிடமிருந்து வெளிவரவில்லை. ஆகவே, அவர்கள் சொல்லியது உண்மைதான் எனக் கொள்ளவேண்டியிருந்தது. அங்ஙனமாயின் பதவி வழங்கலில் அநீதி நடந்திருப்பதாகவே கருத வேண்டியிருந்தது. அதுமட்டுமன்றி, குறித்த ஒரு கட்சிக்கு வழங்கப்படும் அமைச்சுப் பதவிக்கு உரியவர் யாரென்பதை, அக்கட்சியின் தலைமைப்பீடமே முடிவுசெய்ய வேண்டுமென அவர்கள் கருதியதிலும் தவறிருப்பதாய்ப் படவில்லை. தாங்கள் பதவி வழங்கியவர்க்கும் கட்சியின் சிபாரிசாளருக்கும் இடையிலான தகுதிப்பாட்டிலும் அதிக வேறுபாடில்லாது இருந்ததால் தங்களின் முடிவுக்கான நியாயத்தைக் காணவும் முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, தேர்தலில் அதிக விருப்பு வாக்குப் பெற்றோர் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த சித்தார்த்தனை நீங்கள் கண்டும் காணாமல் விட்டதற்கான காரணத்தைத் துளியும் புரிந்துகொள்ள முடியாதிருந்தது. அவரின் குடும்பம் இரண்டு தலைமுறையாக அரசியல் பணியாற்றி வருவதை அனைவரும் அறிவர். சரி பிழைகளுக்கு அப்பால், தமிழர் உரிமைக்காக இளமையிலேயே ஆயுதமேந்திப் போராடத் தலைப்பட்ட அவரது இனப்பற்றையும், ஓர் அணிக்குத் தலைமை தாங்கிய அவர்தம் நிர்வாக அனுபவத்தையும், முற்றாக நிராகரித்தமையும் சிறிதும் பொருத்தப்பாடில்லாத செயலாகவே பலராலும் விமர்சிக்கப்பட்டது. இச்செயலால் ஆயுதக் குழுக்களை தமிழரசுக்கட்சி மெல்ல விலத்த முயல்வதாக எழுந்த குற்றச்சாட்டையும் மறுக்க முடியாதிருந்தது. ஜனநாயக வழிக்குத் திரும்பிய அவர்களோடு ஒன்றிணைந்து இயங்க ஆரம்பித்தபின், பதவி வழங்கலில் இக்குற்றச்சாட்டை முன்வைப்பதன் பொருத்தப்பாடும் தவறானதே. அமைச்சுத் தேர்வில் கேட்பாரின்றிச் செயற்பட்டுவிட்டு பின்னர் மற்றவர்களையும் ஏதோ வகையில் அமைச்சுக்களில் இணைத்துக்கொள்வதாய் தாங்கள் வெளியிட்ட அறிக்கை, தங்களின் சுய ஆளுமைக்கு ஏற்பட்ட பெரிய இழுக்கென்றே கருதப்படுகிறது. 'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' எனும் குறளை இந்நேரத்தில் தாங்கள் கருத்தில் கொள்ளாதது ஏன் என்று புரியவில்லை.  

சறுக்கல் 5: செயலாளர்களின் தேர்வில் நடந்த தவறு தங்களுக்கான செயலாளர்களைத் தேர்ந்தெடுத்த தங்களது நடவடிக்கையும் பலராலும் கடுமையாய் விமர்சிக்கப்பட்டது. தங்களது உறவினர் ஒருவரை இப்பதவிக்கு தாங்கள் அமர்த்திக் கொண்டமை பலரையும் வெறுப்படையச் செய்தது. இவ்வொரு செயலில் மூன்று தவறுகள் ஒருமித்து நிகழ்ந்ததாய்ப் பலரும் சுட்டிக் காட்டினர். அத்தவறுகள் பின்வருமாறு:- கட்சிக்காகவும், இனத்திற்காகவும் பாடுபட்ட தகுதியுள்ள பலர் இருக்க உறவுக்குள் பதவி வழங்கியமை ஒன்று. முன்னைய நிர்வாகங்களில் பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்ட, அரசு சார்ந்து இயங்கிய, ஒருவர்க்கு பதவி வழங்கியமை இரண்டு. யாழ் மண்ணில் வாழும் ஒருவரையேனும் தேர்ந்தெடுக்காமை மூன்று. இக்குற்றச்சாட்டுக்களையும் முற்றாய் மறுக்க முடியவில்லை. யாழ் நிர்வாகத்தைக் கொழும்பிலிருந்து வருபவர்களால்தான் நடாத்த முடியுமா எனும் தேவையற்ற வாதம் தொடங்க இச்செயல் காரணமாகியிருந்தது. கூட்டமைப்புக்குள் இருந்த ஒரு கட்சித்தலைவர் அமைச்சுப்பதவியில் ஒன்றை, தனது தம்பிக்கு வழங்கவேண்டுமெனக் கேட்டு நின்றபோது 'குடும்ப உறவுகளுக்கு முக்கியம் கொடாதீர்கள்' என மற்றவர்களை நோக்கித் தாங்கள் வெளியிட்ட அறிக்கை கண்டு, பிள்ளைகள், உறவினர் என உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தங்களுக்கு, இவ்வறிக்கை விட என்ன தகுதி உண்டு என பலரும் சொன்னதை என் காதுபடக் கேட்டேன். தங்களின் உறவிறுக்க முன்னைச் செயல்களால் இவ் அறிக்கை நகைப்பிற்கிடமானதாயிற்று.  

சறுக்கல் 6: கிளிநொச்சி - யாழ்ப்பாண நீர் விநியோகத் திட்டம் பற்றிய நிலையற்ற கருத்து உலக வங்கி முதன் முதலாக வடமாகாணத்திற்கான பலகோடி ரூபா பெறுமதியான மேல் திட்டத்தை கொணர்ந்த போது அதுபற்றிய தங்களின் முதல் அறிக்கைகள் அத் திட்டத்திற்கு ஆதரவாகவே வெளிவந்தன. பின்னர் உங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலர் அத்திட்டத்தை கடுமையாய் எதிர்த்தனர். சாவகச்சேரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தாங்களும் இருக்கத்தக்கதாக கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் தங்கள் கருத்தை மறுத்து முகத்திற்கு நேரே தங்களைக் குற்றஞ்சாட்டியதாகச் செய்தி வந்தது. அப்போதும் ஆமென்றோ, இல்லையென்றோ தங்களிடமிருந்து, வலிமையும் உறுதியும் கொண்ட பதிலேதும் வரவில்லை. வழமைபோல மேடைப் பேச்சாய் அன்று ஏதோ சமாளித்தீர்களாம். முடிவில் அவ்வுலகத்திட்டத்தை நிராகரிப்பதாய் உங்கள் மாகாணசபை முடிவு செய்தது. பலருடன் ஆலோசித்தபின் ஒரு பெரிய திட்டம் பற்றிய தங்கள் கருத்தை நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டும். அங்ஙனம்தான் நான் செய்தேன் என்பீர்களேயானால் பின்னர் அக்கருத்திலிருந்து பின்வாங்கியிருக்கக் கூடாது. அவசரப்பட்டு ஒன்றைச் சொல்வதும் பின்னர் அக்கருத்தை நிராகரிப்பதுமான செயற்பாடுகள் நிச்சயம் தலைமைத்துவத்திற்குரியவை அல்ல.  

சறுக்கல் 7: மேல்மாகாணசபைத் தேர்தலில் தங்களின் நிலைப்பாடு தாங்கள் சார்ந்துள்ள கூட்டமைப்பினரின் செயற்பாடுகளில் எவ்வித தெளிவுமில்லை என்பது பலரதும் கருத்து. அதற்கான பல உதாரணங்களையும் சொல்லலாம். திடீர் திடீரென கூட்டமைப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார்கள். ஏன் சென்றோம் என்றோ, சாதித்தது என்ன என்றோ ஒரு காலும் மக்களுக்கு தெரிவிக்க அவர்கள் அறிக்கைகள் விடுவதில்லை. அந்தளவிற்கு மக்களைத் துச்சமாகக் கருதும் மனோநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். அண்மையில் கூட ஐ.நாவில் இலங்கை அரசுக்கு எதிரான விசாரணையை இவர்கள் வலியுறுத்தவில்லை எனும் கருத்து பரவலாக எழுந்தது. அங்கு அழைத்துச் சென்ற முன்னைப் புலி உறுப்பினரின் மனைவியும், இன்றைய மாகாணசபை உறுப்பினருமான அனந்தியை அங்கு பேசவே விடவில்லையென அவரே இங்கு வந்து பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிட்டார். மேற்படி குழப்பங்களின் காரணங்களை ஓரளவு ஊகிக்கமுடிகிறது. வல்லரசுகளின் மடியில் இருந்து முழுக்க முழுக்க இயங்க நினைக்கும் அவர்களது நிலைப்பாடே மேற் குற்றச்சாட்டுகளுக்கான காரணம். சுயமேதுமின்றி வல்லரசுகளின் 'பொக்கட்டு'க்குள் அமர்ந்தபடி உரிமை பெற்றுவிடலாம் என அவர்கள் கருதுவது தெளிவாகப் புரிகிறது. அதனாற்றான் இவர்களை துளியும் மதியாமல் இந்தியா ஐ.நாவில் இலங்கையைச் சார்ந்து நின்றது. 'பிச்சைக்காரன் தேர்ந்தெடுக்க முடியாது' என ஓர் ஆங்கிலப்பழமொழி உண்டு. இன்று உங்கள் கட்சியினது நிலைமையும் அதுதான். வல்லரசுகளைச் சாராமல் ஒரு சிறுபான்மையினம் இயங்க முடியாது என்பது உண்மையே. ஆனால் சுயம் ஏதுமின்றி முழுக்க முழுக்க மற்றவர்களுக்கு அடிமைகளாய் இயங்குவதுதான் நம் வழிமுறையெனின் அதனை அங்கு செய்வான் ஏன்? நம்மைத் தாழ்த்த நினைக்கும் பேரினத்தாரிடமே அந்நெறியைப் பின்பற்றலாமே? 'இது கட்சியின் பிழை அதற்கு நான் என்ன செய்ய?' என்பீர்கள். இன்று கட்சியில் தங்களது இடம் முக்கியமானதே. தாங்கள் சில வழிமுறைகளைக் கட்சியினருக்கு எடுத்துச் சொல்லலாம். ஆனால் அங்ஙனம் தாங்கள் இயங்குவதாய்த் தெரியவில்லை. தங்களை முதலமைச்சர் வேட்பாளராய் ஆக்கவென மனோகணேசன் அவர்கள், கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் ஒரு கூட்டத்தை நடாத்தினார். அக்கூட்டத்தில் சம்பந்தர் உள்ளிட்ட பல கூட்டமைப்புத் தலைவர்களும் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பேசும் போது, சம்பந்தர் 'மனோகணேசன் வெளியாள் என்பது பெயருக்குத்தான், அவர் எங்களுக்குள் ஒருவரே' என்று பகிரங்கமாய் அறிவித்தார். வடக்கில் நடந்த பலதேர்தல்களில் கூட்டமைப்பிற்கு ஆதரவாக, மனோகணேசனும் அவரது சகாக்களும் வெளிப்படையாகப் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டனர். அதுமட்டுமன்றி தமிழ் மக்களுக்கும், தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்குமாக மனோகணேசன் எவருக்கும் பயப்படாமல் பல தரம் ஊடகங்களினூடு அறிக்கைப் போர் நடாத்தி வந்தார்; வருகிறார். இந்நிலையில்தான் மேல்மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மனோகணேசனது கட்சி இம்முறையேனும் தமிழர் கூட்டமைப்பு தமக்கு பகிரங்க ஆதரவளிக்கும் என எதிர்பார்த்தது. இவர் எங்களில் ஒருவர் என்று பகிரங்கமாய்ப் பேசிய உங்கள் கட்சித் தலைவரோ, கட்சியோ மனோ கணேசனுக்கான உத்தியோகபூர்வ ஆதரவை கடைசி வரை தெரிவிக்கவேயில்லை. அதற்கும் உங்கள் கட்சியினரது உலக மேய்ப்பன்கள் தந்த அழுத்தமே காரணம் என உணர முடிந்தது. இந்திய அரசு சார்ந்து இயங்கும் ஆறுமுகம் தொண்டமானது கட்சி இம்முறை மேல் மாகாண சபைத் தேர்தலை எதிர் கொண்டதால் அவர்களுக்கு எதிராக மனோகணேசன் கட்சியினருக்கு வெளிப்பட ஆதரவளிக்க வேண்டாம் எனும் உத்தரவு வந்ததோ என்னவோ யாரறிவார்? கட்சியின் மேல் நிலைப்பாட்டிற்கு மாறாக கொழும்பில் மனோகணேசன் நடத்திய கூட்டம் ஒன்றில் தாங்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தமை பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தங்களது அச்செயற்பாடு அரசியல் உலகில் பல கேள்விகளையும் எழுப்பிற்று. கட்சியின் முடிவுக்கு மாறாக தாங்கள் செயல்படுகிறீர்களா என்பது எழுந்த முதல் கேள்வி. அல்லது கட்சி தன் கருத்தை வெளிப்படுத்த முடியாத நிலையில் உங்களைக் கொண்டு அக்கருத்தை வெளியிடுகிறதா என்பது அடுத்த கேள்வி. ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு முதலமைச்சர் வெளியிட்ட கருத்து அவரது தனிக்கருத்தா? அல்லது கட்சியின் கருத்தா? என்பது மூன்றாவது கேள்வி. அது உங்களது தனிக்கருத்தாயின் கட்சி தமது கொள்கைக்கு மாறான கருத்தை வெளியிட்ட உங்களின் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது நான்காவது கேள்வி. கட்சியின் ஏவலால் தான் தாங்கள் அக்கருத்தை வெளியிட்டீர்கள் எனின், கட்சி உங்களை ஒரு கருவியாய்த்தான் பயன்படுத்துகிறதா என்பது ஐந்தாவது கேள்வி. விடையெதுவானாலும் தங்களின் சுயத்திற்கு அது பொருத்தமானதாய் இல்லை என்பது தெளிந்த முடிவு. பல முக்கிய விடயங்களில் கட்சி சார்பாய் மௌனிக்கும் தாங்கள் இவ்விடயத்தில் மட்டும் தனித்து வாய் திறந்தததும், அதற்கு கட்சி மறுப்புத் தெரிவிக்காததும், உங்களது சுய ஆளுமை பற்றிய ஐயத்தை உருவாக்கவே செய்தன.  

சறுக்கல் 8: எட்டு மாதங்கள் கடந்தும் சாதனையற்ற சரித்திரம் தாங்கள் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் முடிந்த விட்டன. இதுவரை தாங்கள் சாதித்த ஏதேனும் ஒரு செயல் உண்டா? அரசு, கவர்னர், செயலாளர் எனப் பலரும் இடையூறு செய்வதாய் உடனே ஒப்பாரி வைப்பீர்கள். இவர்களைத்தாண்டி ஒரு செயலைக்கூட செய்ய முடியவில்லை என்றால், எதற்கு இந்தப் பதவி? இப்பதவியை ஏற்கும் போதே இந்நிர்வாகப்பாதை கடினமானதுதான் என்பது கூட தங்களுக்குத் தெரியவில்லையா? நிர்வாகம் என்பதும் ஒரு போர்தானே? அப்போரை எதிர்கொள்ளத் தங்களிடம் எந்த வியூகமும் இல்லையெனின், இப் போருக்கு ஏன் முகம் கொடுத்தீர்கள்? கைவீசி காலாற நடக்க எந்த நிர்வாகமும் இராஜபாட்டையாய் எவர்க்கும் இலகுவாய் இருப்பதில்லை என்பது யாவர்க்கும் தெரிந்த ஒன்று. 'தடை செய்கிறார்கள். அதனால் உட்கார்ந்திருக்கிறேன். தடை விலகியதும் நடப்பேன்' என்று சொல்லத்தான் தமிழர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தார்களா? அதனைச் சொல்ல நீங்கள் வந்திருக்கவேண்டிய தேவையில்லையே! சாதாரண ஒருவன் கூட அதனைச் சொல்லலாமே? வந்த தடைகளை தகர்க்க பத்திரிகைகளில் அறிக்கை விடுவதைத் தவிர, இதுவரை நீங்கள் செய்த முயற்சிகள் என்ன? விடைகளைத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  

சறுக்கல் 9: காட்சிக்கு அரியரான தங்களின் இருப்பு ஒரு தலைவனுக்குரிய தகுதிகளை வகுத்த வள்ளுவன். அவனது முதன்மைத்தகுதிகளில் ஒன்றாக அவன் காட்சிக்கு எளியனாய் இருத்தல் வேண்டும் என்கிறார். அந்தத் தகுதி இன்று தங்களிடம் மருந்துக்கும் இல்லை. தங்களை முதலமைச்சர் வேட்பாளராய் நிறுத்த முயன்ற பிரமுகர்கள் பலரும் கூட, இன்று தங்களை அவசரத்திற்கு தொலைபேசியில் கூட பிடிக்கமுடியவில்லை என்று முணுமுணுத்துத் திரிகின்றனர். பத்திரிகையாளர்களது நிலையும் அதுவே. உங்களைச் சுற்றி உங்களது ஆதரவு, உறவு, மனிதர் சிலரால் இரும்பு வேலி அமைக்கப்பட்டு விட்டது. அவர்களைக் கடந்து உங்களை அணுகுவது என்பது இன்று குதிரைக் கொம்பு காணும் வேலையாகிவிட்டது. உங்களை காவல் செய்யும் உறவான ஒருசில பத்திரிகையாளரைத் தவிர வேறெவரும் நினைத்த நேரத்தில் உங்களைக் காணவோ, உங்களிடம் கருத்துக் கேட்கவோ முடிவதில்லை. அண்மையில் ஒரு பத்திரிகையாளர், 'முன்பு பிரபாகரனைக் கூட காண முடிந்தது. இன்று முதலமைச்சரைக் காண்பதென்பது நினைக்க முடியாத காரியமாகிவிட்டது' என்று குறைபட்டுக்கொண்டார்.  

சறுக்கல் 10: விழாக்களும், வீரிய அறிக்கைகளும் முன்பு நீதியரசராய் இருந்த காலத்தில் இலக்கிய விழாக்களில் பதவி தந்த பாதுகாப்பில் மக்களை கிளர்ந்தெழச்செய்யும் அறிக்கைகளை விட்டு புகழ் கொண்டீர்கள். அது தவிர தமிழ் மக்கள் உரிமைக்கான தங்களது சாதனைகள் ஏதும் இருந்ததா தெரியவில்லை. அந்த வீரிய அறிக்கைகள் தங்களின் சுயத்தின் வெளிப்பாடுகள் எனக் கருதியே தமிழ் மக்கள் நீங்கள் ஏதேனும் சாதிப்பீர்கள் என நம்பி ஏகோபித்து உங்களை அரசியலுக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவையெல்லாம் வெறும் வாய்ச்சவடால்கள் தான் என இப்போது எண்ணவேண்டியிருக்கிறது. பதவிக்கு வந்த பிறகும் சாதனைகள் ஏதுமின்றி இன்னும் விழாக்களில் கலந்து வீரிய அறிக்கை விடுவதில் மட்டுமே உங்களின் பொழுது போய்க்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி, கவர்னர், செயலாளர் எனும் இம் மூவரும் இல்லாவிட்டால் உங்கள் பொழுது எப்படிப் போகும் என நினைக்கவேண்டியிருக்கிறது. பெரும் போரின் பெரும் பாதிப்பிலிருந்து விடுபடத்தவிக்கும் ஓரினத்தின் முதலமைச்சராய்த் தாங்கள் இயற்றவேண்டிய கடமைகள் காத்துக்கிடக்கின்றன. அவற்றை விடுத்து அறிக்கை அரசியல் நடத்தும் தங்களின் போக்கு கவலைக்கிடமானதாய் இருக்கிறது.  

சறுக்கல் 11: முள்ளிவாய்க்கால் நினைவு தின முரண்பாடு தாங்கள் கொழும்புக் கம்பன் கழகத்தின் பெருந்தலைவராய் இருந்த காலத்தில் முள்ளி வாய்க்கால் நினைவு நாட்களில் நடைபெற்ற கம்பன் விழா ஒன்றின் போது இறந்தவர்களுக்காக அவ்விழாவில் அஞ்சலி நிகழ்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தினீர்கள். அரசியல் சூழ்நிலை கருதி கழகத்தார் அதற்கு உடன்பட மறுத்ததால், தலைமைப் பதவியை உதறிவிட்டு தாங்கள் அக்கழகத்திலிருந்து வெளியே வந்தீர்கள். தேர்தல் காலத்தில் தங்களைச் சார்ந்த சில ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டிருந்தன. இச்செய்தியை எங்கள் கழகத்தைச் சார்ந்தவர்கள் வெளியிட்டிருக்க நியாயமில்லை. தங்களின் மூலமே இச்செய்தி வெளிவந்திருக்கிறது. இச்செயலை ஒரு தியாகச் செயலாக முக்கியப்படுத்தவே இச்செய்தி தேர்தல் காலத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது. இதனால் தங்களைப் பற்றிய மதிப்பு உயர்ந்தது உண்மையே. ஆனால் அந்த மதிப்பும் அண்மையில் வந்த செய்தி ஒன்றினால் குன்றிப்போனது. அண்மையில் நடந்த முள்ளி வாய்க்கால் நினைவு தினத்தை ஒட்டி, வடமாகாண சபையில் உறுப்பினர் சிலரின் வேண்டுகோளால் நிறைவேற்றப்பட்ட அஞ்சலி நிகழ்வில் தாங்கள் கலந்து கொள்ளவில்லை என்பதே அச்செய்தி. உங்களைச் சார்ந்த சில பத்திரிகைகள் கூட்டத்திற்கு தாங்கள் தாமதமாய் வந்ததாய் பின்னர் சப்புக்கட்டுக் கட்டின. பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்ற அன்றைய கூட்டத்திற்குக் கூட தற்செயலாய்த் தாமதமாய் வந்ததாய் சொல்லப்பட்ட சமாதானத்தை எவர்தான் ஏற்பார்கள். 'ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லை தம்பி' என்ற தங்கள் செயல்பாடு பலரையும் வெறுப்படையச் செய்தது உண்மை.  

சறுக்கல் 12: ஆள் பாதி ஆடை பாதி மற்றொன்று சொல்லவேண்டும். விடயத்தைச் சொல்லிவிட்டு பின் விபரத்திற்கு வருகிறேன். அண்மைக்காலமாக முதலமைச்சர் என்ற வகையில், தங்களை பல உலகத்தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் சந்திக்கிறார்கள். அப்போதெல்லாம் நீங்கள் 'கோர்ட்டும் ஸூட்டுமாய்' ஆங்கில உடையில் காட்சி தருகிறீர்கள். தமிழர்கள் தமது கலை, கலாசாரப் பண்பாட்டு உரிமைக்காக குரல் கொடுத்து நிற்கும் இவ்வேளையில், அவர்களின் முதல் பிரதிநிதியாய், உலகப் பிரமுகரைச் சந்திக்கும் நீங்கள் நம் கலாசார அடையாள உடையோடு அவர்களைச் சந்திப்பது தான் பொருத்தமாய் இருக்கும் எனக் கருதுகிறேன். முன் வகித்த பதவி தந்த பாதிப்பும் கொழும்புப் பிரமுக வாழ்க்கை தந்த பாதிப்பும் ஆங்கில உடையில்தான் உங்கள் கௌரவம் தங்கியிருப்பதாய் உங்களை எண்ண வைக்கின்றன போலும். பிரித்தானியப் பிரதமர் தங்களை சந்திக்க வந்திருந்த போது அந்தக் காட்சியை உலகத்தொலைக்காட்சிகள் அத்தனையும் ஒளிபரப்பின. அன்று தாங்கள் தமிழ் உடையில் இருந்திருந்தால் தமிழ் இனத்தாரைத் தெரியாதவர்கள் கூட இதுதான் தமிழர் வடிவம் என நம் தோற்றத்தை இனம் கண்டிருப்பார்கள். எங்கள் பண்பாட்டுடை பாருக்கெல்லாம் தெரிய வந்திருக்கும். இந்த விடயத்தில் நாம் சிங்களத் தலைவர்களிடம் பாடம் படிக்கவேண்டியிருக்கிறது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா, பிரேமதாச, சந்திரிக்கா போன்றவர்கள் எந்த மாநாடுகளில் கலந்து கொள்ளும் போதும் தங்களது பாரம்பரிய உடையுடனேயே கலந்து கொண்டனர். ஏன் தற்போதைய நமது ஜனாதிபதி கூட அந்நெறியை உறுதியாய்க் கடைப்பிடித்து வருகிறார். மாநாட்டுக்கு வந்த ஒரு தலைவரைச் சந்திக்கவே நீங்கள் மாற்றுடை தரித்துக்கொண்டீர்கள். அத்தனை தலைவர்கள் மத்தியிலும் தலைவராயப் பதவியேற்ற போதும் ஜனாதிபதி மகிந்த அவர்கள் தமது பாரம்பரிய உடையை மாற்றவேயில்லை. அதுதான் அவர்களது சுயம். என்று அது வருகிறதோ அன்று நாமும் உயர்வோம். இது கூட சறுக்கலா என்பீர்கள். இது கூட சறுக்கல்தான் என்பது என் கருத்து. 'ஆள் பாதி ஆடை பாதி' என நம் பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்? தங்களின் கடந்த ஆறு மாதகால அரசியல் வாழ்வில் நிகழ்ந்த சறுக்கல்களை, இப்படியே அடுக்கிக்கொண்டு போகலாம். உங்களைக் குற்றம் சாட்டி மகிழ்வது என்நோக்கம் அல்ல! நீங்கள் வந்தால் நன்மை நடக்கும் என, உலகுக்குச் சொன்னவர்களில் நானும் ஒருவன். அதனால் தங்களை நெறிப்படுத்தும் கடமை, எனக்கும் இருப்பதாகவே கருதுகிறேன்.

 *** இன்று உங்களைச் சூழ்ந்திருப்பவர்கள், உங்கள் கருத்தை உலகுக்குக் கொண்டு போகிறார்கள். உலகின் கருத்தை உங்களிடம் வரவிடுவதில்லை. இதைத்தான் முன்பு கூட்டணி ஆதரவாளர்களும் செய்தார்கள். பின்னர் புலி ஆதரவாளர்களும் செய்தார்கள். அதனால்தான் மக்களுக்கும் அவர்களுக்குமிடையிலான இடைவெளி நீண்டு விரிந்தது.அதனூடு உட்புகுந்தே எதிரிகள் அவர்களை அணுகினார்கள். அணுகி வீழ்த்தினார்கள். 

 *** மக்கள் ஆதரவைக் கவசமாய்க் கொண்டு, 'எங்களைக் கேட்க எவரும் இல்லை' எனும் மமதையோடு இயங்குவது, தலைமைக்குப் பெருங்கேடு விளைவிக்கும். அதைத்தான் இன்று உங்கள் கட்சியும் செய்கிறது. நீங்களும் செய்கிறீர்கள். யாரேனும் உங்களை விமர்சித்தால் அவர்களை, காட்டிக் கொடுப்போர் பட்டியலில் இலகுவாகச் சேர்த்து, துரோகி முத்திரை குத்தி தூரத்தள்ளி விடுகிறீர்கள்.  

*** உங்களின் இந்த இறுமாப்பிற்கு தமிழ் மக்களும் ஒருவகையில் காரணர்களாகின்றார்கள். வென்றபோது பிழையையும் அங்கீகரிப்பது. தோற்றுவிட்டால் சரியையும் மறைத்துவிடுவது. இவ்விரண்டும் தான் தமிழ் மக்களின் பலவீனப் பண்புகள். அமிர்தலிங்கத்தை காரணமின்றி ஆதரித்தோம். பின் காரணமின்றி விமர்சித்தோம். இங்ஙனமே புலிகளையும் வெற்றிக்காலத்தில் காரணமின்றி ஆதரித்தோம். பின் தோற்றதும் காரணமின்றி விமர்சித்தோம். கண்மூடித்தனமான மக்களாதரவு வெற்றிக்காலத்தில் உங்களுக்கு விருப்புத்தரலாம். தோல்விக்காலத்தில் அதுவே உங்களைத் துடிதுடிக்க வைக்கும். அதனால் வெற்றிக்காலத்திலேயே விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். வீழ்த்தும் நோக்கத்தோடு வைக்கப்படும் விமர்சனங்களைப் புறந்தள்ளுங்கள். உண்மை விமர்சனங்களை உட்கொள்ளுங்கள்.  

*** எதிரிகளின் பலவீனத்தை வைத்தே, உங்கள் பலத்தை என்றும் நிரூபித்து விடலாம் என்று நினைக்காதீர்கள். உங்கள் பலம் உங்களதாய் இருக்க வேண்டும். 'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும், தத்தம் கருமமே கட்டளைக்கல்' என்றான் வள்ளுவன். எத்தனையோ உயிர் இழப்புக்கள், எத்தனையோ உறுப்பிழப்புக்கள், எத்தனையோ உரிமையிழப்புக்கள், எத்தனையோ உடமையிழப்புக்கள். இந்த நான்கு தூண்களில் தான் உங்கள் வெற்றி மாளிகை கட்டப்பட்டிருக்கிறது. உங்கள் மாளிகையின் நிலைத்தலுக்காய், இந்த இழப்புக்களை என்றும் நிலை நிறுத்த நினையாதீர்கள். இன நன்மை நோக்கி இவ் இழப்புத்தூண்களை எடுத்தெறிந்து விட்டு, சொந்த மண்ணில் சுயமாய் வெற்றிக் குடிசை கட்டுங்கள். அது இப்போதைய மாளிகையை விட மாண்பு கொண்டதாய் இருக்கும். 

 *** திரும்பத்திரும்ப ஒரே பாதையில் நீங்களும் நடந்து, நம்பிய மக்களையும் நடக்கச்செய்து, இழப்பைக் காட்டிக் காட்டி, ஏற்றக் கனாவில் இன்னும் மக்களை வாழ வைத்து, நீ;ங்கள் வெற்றிக்கதிரைகளில் எப்போதும் வீறுடன் இருக்கலாம் எனக் கருதாதீர்கள். இது உங்களின் மேல் அன்பு கொண்டவன் என்ற வகையில் எனது அறிவுரை. முடிந்தால் போராடி சாதனை செய்யுங்கள். அன்றேல் அரசியலைத் துறந்து வெளி வாருங்கள்! உங்களை உலகு தொடர்ந்து மதிக்கும்.  

*** இவை என் சொந்தக் கருத்துக்கள். ஏற்றால் இனம் உயரும். இகழ்ந்தால் இனம் தாழும். எது செய்யப்போகிறீர்கள்? 'தமிழினத்தைக் கடவுள் தான் காப்பாற்றவேண்டும்' என்றார் தந்தை செல்வா. தமிழினத்தைத் தலைவர்களும் காப்பார்கள்! எனும் வரலாறும் வரட்டுமே! உண்மைக்கு வெற்றி கிட்டட்டும்! வாழ்த்துக்கள். 'இன்பமே எந்நாளும் துன்பமில்லை'

அன்பன் இ.ஜெயராஜ்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com