|
||||
|
நாபா நண்பனா ? தோழனா ?
தலைவனா ?( விடை தெரியாது தொடரும் என் தேடல்) நேற்றுப்போல் இருக்கிறது அந்த மெலிந்த நெடிதுயர்ந்தவரை முதன் முதலாக சந்தித்து. 1978ல் அடித்த சூறாவளி மட்டக்களப்பை புரட்டி போட்டது. அப்போது நான் கொழும்பு பல்கலைகழக முதலாண்டு மாணவன். ஏற்கனவே 1974ல் கொழும்பில் ஏற்பட்ட பழக்கத்தில் நண்பனான தேவா 1977 கலவரத்தின் பின் உருவான தமிழ் அகதிகள் புனர்வாழ்வு கழகம் சார்பாக உணவு பொருட்களை பொதிபண்ணி விமானம் மூலம் அனுப்பும் நடவடிக்கையை தொடங்கி அதற்கான தொண்டர்களை சேர்க்க தொடங்கினார். நானும் எனது பல்கலைகழக நண்பர்களும் நண்பிகளும் சரஸ்வதி மண்டபத்தில் பணியாற்றிய போது எனது மேல்படிப்புக்கு உதவிய மாமா மட்டக்களப்பில் இருந்ததால் அவருக்கு என்ன நடந்ததோ என்ற அக்கறை மேலோங்கியது. அப்போது மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் உயர் பதவி வகித்த தேவாவின் தந்தை அமரர் கதிரவேலு அவர்கள் உத்தியோக பூர்வ விஜயமாக அங்கு செல்வதை அறிந்து அவருடன் கண்டி மகியங்கனை கரடியனாறு ஊடாக பயணித்து எனது மாமனார் இருந்த மணிபுரம் சென்றேன். அவர் அதிக பாதிப்பின்றி இருந்ததால் தமிழ் அகதிகள் புனர்வாழ்வு முகாம் அரசடியில் இருப்பதறிந்து ஆயித்தியமலை வலையிறவு ஊடாக மட்டக்களப்பு சென்றேன். நான் முகாமை அடைந்த வேளை மாலை 7 மணிக்கு மேலாகி விட்டிருந்தது. அங்கு காரியாலயத்தில் இருந்தவரிடம் நான் கொழும்பில் இருந்து வருகிறேன் இங்கு தொண்டராக பணிபுரிய விரும்புவதாக கூற அவர் என்னை அமரச்சொன்னார். அப்போது சாப்பிட்டீர்களா என ஒரு குரல் என் பின்னால் கேட்டது. திரும்பிப்பார்த்தேன் மெலிந்த நெடிதுயந்த நீல டெனிம் கால்சட்டை டெனிம் ஜக்கற் அணிந்த தலையில் கூடையை கவிழ்த்தது போல் நிறைய முடிகொண்ட இளைஞரை கண்டேன். கறுத்த உருவம் வெண்மையான சிரிப்பு. அவரிடம் நான் இன்னமும் சாப்பிடவில்லை இல்லை இங்கு அருகில் ஏதாவது கடை இருக்கிறதா என கேட்டேன். அவர் நோபுறப்ளம் (No Problem) இங்கு எங்களுடன் சாப்பிடலாம் என்றார். பின்புதான் அறிந்து கொண்டேன் என்னை இருக்க சொன்னவர் குமார் என்னும் முத்துக்குமாரசாமி சாப்பிட்டீர்களா என கேட்டது நாபா எனும் பத்மநாபா. இரவு உணவு உண்டபின் உறங்க செல்லுமுன் ஒரு சிறு சலசலப்பு ஏற்பட்டது. வெளியில் இருந்து வந்த சிலர் அனைவரையும் மண்டபத்தில் கூட சொன்னார்கள். வந்தவரில் ஒருவர் நாம் இங்கு ஒரு கட்டமைப்பாக இயங்கவேண்டும் எல்லோருக்கும் ஒரே நிற தொப்பி வழங்கப்படும். எமது அமைப்பு தமிழ் இளைஞர் பேரவை என அடையாளபடுத்த படவேண்டும் என்றார். அவரை பரந்தன் ராஜன் என பின்னர் அறிந்துகொண்டேன். குமார் அதை மறுதலித்து அப்படி செயல்பட முடியாது நாம் இங்கு அரசியல் செய்ய வரவில்லை என கூறியபோது வாக்குவாதம் முற்றியது. அப்போது குமாரின் வாதத்தை ஆதரித்த நாவாந்துறை ரவியை (கால் ஊனமுற்றவர் ) பரந்தன் ராஜன் காலால் அடித்தார். குறுக்கிட்ட நாபா எமக்குள் மோதல் வேண்டாம் நாம் இங்கிருந்து வெளியேறுகிறோம் என கூறி எம்முடன் வருபவர்கள் வாருங்கள் என கூறி வெளியே பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் குமார், நாபா, என பலருடன் நானும் நனைந்தபடி நடந்து மெதடிஸ்த சென்ரல் பாடசாலையை அடைந்தோம். சூறாவளியால் பல ஓடுகள் பறந்திருக்க எங்கெல்லாம் ஒழுக்கில்லையோ அங்கெல்லாம் ஒதுங்கி இரவை கழித்தோம். காலையில் குமார், நாபா யாரோ முக்கிய நபரை சந்திக்க புறப்பட்ட வேளை நாபா என்னை பார்த்து நீங்களும் வாருங்கள் என்றார். ஏதோ பலவருடம் பழகிய நண்பனை போல் அவர் செயல் என்னை ஆச்சரியபடுத்தியது. ஏனென்றல் நேற்று இரவுதான் அறிமுகமான என்னை இன்று தன்னோடு கூட்டிச்செல்ல அவர் முனைந்தது வினோதம்தான். நாம் சந்தித்த முக்கிய நபர் என்ஜினியர் மரியசிங்கம். அவர் எம்மை வரவேற்று எமது தொண்டர் வேலைக்கு தன்னால் முடிந்த உதவியை கேட்கும்படி கூற குமார் தயங்கியபடி எமது போக்குவரத்து, உணவு பிரச்னை பற்றி கூற அவர் தன்னுடைய ஜீப்பை தந்து எங்கிருந்து எவற்றை பெறலாம் என விபரமும் தந்து அனுப்பி வைத்தார். முதல் பணியாக பள்ளிகூடத்தில் மிஞ்சிய ஓடுகளை பொருத்தி நாம் தங்குவதற்கு ஒரு மண்டபத்தை ஒழுங்குசெய்தோம். சமையல் பாத்திரங்களை பல இடங்களில் சேகரித்தோம். திருமலையில் இருந்து அன்னலிங்க ஐயா, தங்கமகேந்திரன்,சின்னவன் எனபலர் மீன்பிடி வள்ளங்களில் வந்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கைலாஸ் பல்கலைகழக மாணவர்களுடன் வந்து இணைந்தார். இன்பம், பாலா (இவர்கள் பின்பு இராணுவத்தால் யாழ்பாணத்தில் கொல்லப்பட்டனர் ) என பலர் நாபாவுடன் இணைந்தனர். இதனால் பல்கி பெருகியது தொண்டர்படை. புனானை முதல் 36ம் கொலனி வரை சிறு சிறு குழுக்களாக பிரிந்து வீதிகள் துப்பரவாக்கல் கிணறுகள் இறைத்தல் வீடுகளை சீரமைத்தல் என எம் செயல் தொடர்ந்தது. முறிந்த மரங்களை துண்டாடும் போதும் இடிபாடுகளை துப்பரவு செய்யும் போதும் பாரமானவற்றை தூக்கி அப்புறபடுத்தும் போதும் நாபா மிகவும் சிரமப்படுவார். அவர் பற்றி விசாரித்த போதுதான் அவர் லண்டனில் இருந்து வந்ததாக அறிந்து ஆச்சரியப்பட்டேன். அப்போது என் மனநிலை பட்டம் பெற்றதும் வேலைக்காக வெளிநாடு செல்வதாக இருந்த வேளையில் வெளிநாட்டில் இருந்து அவர் தொண்டர் வேலைக்கு வந்தது ஆச்சரியமாக இருந்தது. கூடவே கனக்ஸ், லண்டன் மனோ (சுரேசின் அண்ணர்) போன்றவர்களை கண்டதும் மேலும் ஆச்சரியம். அவர்களும் லண்டனில் இருந்து வந்திருந்தனர். விசாரித்தபோது அவர்கள் லண்டனில் உருவான ஈரோஸ் அமைப்பினர் என்றும் முன்னாள் ஈழவிடுதலை இயக்க உறுப்பினர்களான நாபா, குமார், தங்க மகேந்திரன், என பலரும் இயங்குவதாகவும் தெரியவந்தது. உண்மையில் நான் அதுவரை எந்த அரசியலிலும் பங்களிப்பு செய்யாதவன். றோயல் கல்லூரியில் படித்ததால் பழைய பாராளுமன்றத்தில் பலரின் வாதங்களை கேட்டதோடு சரி. ட்ரயல் அற் பார் விசாரணையில் ஜி ஜி மற்றும் திருச்செல்வம் விவாதத்தை பார்த்தது மட்டுமே என் அரசியல் ஞானம். மட்டக்களப்பில் பகல் முழுவதும் சிரமதானம் இரவில் கலந்துரையாடல் நடக்கும். அப்போது லண்டன் மனோ அரசியல் விடுதலை போராட்டங்கள் பற்றி விளக்குவார். ஈழ மாணவர் பொதுமன்றம் ( கெஸ் ) பற்றி கூறுவார். ஈரோஸ் அமைப்பு அதன் கொள்கை ஆயுதபயிற்சி ஈழவிடுதலை ஈழவரைபடம் என பல விடயங்கள் அலசப்படும். நாபா மௌனமாக அவதானித்து கொண்டிருப்பார். நாம் மட்டக்களப்பில் இருந்த போது மார்கழி மாதம் க பொ த சாதாரண பரீட்சை எடுக்கும் மாணவர் பிரச்சனை எம் கவனத்துக்கு வந்தது. அடித்த சூறாவளி, மழையில் அவர்களின் பாடபுத்தகங்கள் அழிந்திருந்தன. நான் இதனை நாபாவிடம் கூறியபோது அவர் நோபுறப்ளம் என்றார். அடுத்த வாரமே அவர் தன் தொடர்புகள் மூலம் வரதன், குமரன் வாத்தி என பலரை யாழ்பாணத்தில் இருந்து வரவழைத்தார். எல்லா இடங்களிலும் யாழ் பட்டதாரி இளைஞர்களால் இலவச ரியூட்டறிகள் ஆரம்பிக்கபட்டு மாணவர்கள் பரீட்சைக்கு தயார்படுத்த பட்டனர். நாபாவின் மௌன ஆளுமை என்னை ஆச்சரியபடுத்தியது. அவருக்கு எதுவுமே நோபுறப்ளம் தான். ஒரு முறை மண்டூரில் செயல்பட்ட வேளை எம்மோடு இருந்த கிறிஸ்தவ நண்பர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் பற்றி பற்றி கவலைப்பட அதற்கும் நோபுறப்ளம் என்ற நாபா கபூர் மாஸ்டரை ( ஈரோசுடன் தொடர்ந்து செயல்பட்டவர் ) களவாஞ்சிகுடி சக்கரவத்தி (எம் பி ராசமாணிக்கத்தின் மகன் ) யிடம் அனுப்ப அவர் கேக் முதல் சிற்றூண்டிகள் இனிப்புகள் நிறைய அனுப்பிவைத்தார். மண்டூர் பாதரிடம் கதைத்து கிறிஸ்மஸ் தாத்தா உடையும் நாபா வாங்கி தந்தார். மாலை 6 மணி முதல் 9 மணி வரை மண்டூர் தெருவெங்கும் கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் நான் பாடி கூத்தாட நாபா எம் பின்னால் வந்த சிறுவர்களுக்கு இனிப்பு வழங்கி சிறுவர்களோடு சிறுவரானார். கிறிஸ்த நண்பர்கள் அன்று மிகவும் சந்தோசப்பட்டனர். சில மாதங்கள் பழகினாலும் பலவருட நட்பு எமக்குள் ஏற்பட்டதுபோல் ஒரு உணர்வுடன் என் படிப்பை தொடர நான் கொழும்பு திரும்பினேன். சில வாரங்களின் பின் நாபா கொழும்பில் சென்ட்ரல் றோட்டில் இருக்கும் அவரது வீட்டில் இருப்பதாக அறிந்து சென்றபோது அவர் அன்று காலை நாட்டை விட்டு வெளியேறியதாக அறிந்தேன். அவரை தேடி பொலிசார் வரும் தகவல் அறிந்து அவர் தப்பி சென்றுவிட்டார். அதன் பின் சில வருடங்கள் எமக்குள் எந்த தொடர்பும் இல்லை. 1981ன் பிற்பகுதியில் வெள்ளவத்தையில் வீதியில் நடந்து சென்ற என்னை யாரோ பின்னால் வந்து தோழில் தட்டி சிங்கன் சுகமா எனக்கேட்க திரும்பி பார்த்தால் நண்பன் நாபா. அவர் பக்கத்தில் பாலா(கபூர் ). பாலா றோயல் கல்லூரியில் நான் ஏ எல் படிக்கும் போது 9ம் வகுப்பில் படித்தவர் தேவாவால் கெஸ்சில் இணைந்தவர். அப்போது நாபா வந்தது இந்தியன் பாஸ்போட்டில் செங்கோடன் எனும் பெயரில். அவரை சேரன் என அழைக்கும்படி பாலா கூறினார். பாலாவின் உறவினர்களான சொர்ணலிங்கம் ராகவன் என பலருடன் நாபா நுகேகொட களுபோவில என பல இடங்களில் தங்குவார். அப்போது நான் தவராசாவின் கீழ் மலையக தோட்டங்களில் ஓடிற் வேலை செய்து கொண்டிடுந்தேன். மலையக மற்றும் மட்டக்களப்பு வேலைதிட்டத்திற்காக தன்னுடன் வருமாறு நாபா அழைத்தார். இதனை கூறி நான் வேலையை விடுவதாக தவராசாவிடம் கூற அவர் உவர்களுடன் போய் வாழ்க்கையை வீணாக்காதே என்றார். இருந்தாலும் ஏதோ ஒன்று என்னை நாபாவுடன் செல்ல தூண்டியது. மலையகம், திருகோணமலை, மட்டக்களப்பு, தம்பிலுவில் திருக்கோவில் என பல இடங்கள் பயணித்தோம். மலையகத்தில் பரிபூரன் (ஈரோஸ் ) திருமலையில் 10ம் நம்பர் செஞ்சி மட்டக்களப்பில் உமாவுடன் தங்குவோம். ஒருதடவை மட்டக்களப்பில் இருந்து உன்னிச்சை 7ம் கட்டடையில் திருக்கோயில் வங்கி கொள்ளையில் சம்மந்தபட்டு காயமடைந்து ஒளித்திருந்த சி ரி என்பவரை சந்திக்க மோட்டார் சயிக்கிளில் கூட்டிசென்றேன். அந்த நேரம் நாபாவும் தேடப்படும் நபர் என்பதுதான் வேடிக்கை. பல இயக்கத்தவருடன் நாபா சகஜமாக பழகுவார் உதவுவார். மட்டக்களப்பில் என் எல் எப் ரி விஸ்வா (விஸ்வேஸ்வரன்) நாகபடை உறுப்பினர்கள் என பலருடனும் தோழமையுடன் பழகுவார். தம்பிலுவில்,திருக்கோவிலில் இன்பம், ரவி,ரஞ்சித்,குமார்,சிவா, நிதி, சர்மா என பலருடன் நாபா தலைமையில் நடந்த கூட்டத்தில் குண்சி ஈரோஸ் இயக்கத்தில் இருந்து பிரிந்தமை ஈ பி ஆர் எல் எப் தொடங்கியது கெஸ் அதனுடன் தொடர்வது அமைப்பின் கொள்கை, இலச்சினை, உறுப்பினர்கள் தமக்குள் தோழர் என அழைப்பது கட்சியின் செயலாளர் நாயகம், மத்திய குழு என பல விடயங்களை விளக்கினார். நாபா அமைதியாக அவதானித்து கொண்டிருந்தார். மதிய இடைவேளையின் போது வீதியில் வந்து நின்ற வேளை ரவி சயிக்கிளில் வந்த குண்டான ஒருவருக்கு அறிமுகம் செய்ய அவர் நான் வடபகுதியை சேர்ந்தவன் என்பதை அறிந்து ஊரை குழப்ப யாழ்ப்பாணத்தார் வந்திட்டாங்கள் என கூறி சிரித்தார். அவர்தான் பின்னாளில் நிதி அமைச்சராக வந்த கிருபா எனும் கிருபாகரன். நாபாவுடன் நிறைய பயணங்கள் செய்த எனக்கு அவர் ஒரு புரியாத புதிராகவே இருந்தார். எந்த சூழ்நிலையிலும் மனம் தளர்வதில்லை. உணவு அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. எவ்வளவு தூரம் என்றாலும் நடப்பது அவர் செயல். மலையகத்தில் இருந்தவேளை முல்கம்பொலவில் இருந்து கண்டிவரை நடந்தே செல்வோம். அங்கு முத்துவின் (முத்துலிங்கம் ) தாயார் தரும் ரொட்டி அல்லது பேராதனை பல்கலைகழக அக்பர் விடுதியில் பரிபூரன் (கொழும்பு கரையோர போலிசுக்கு அருகில் அவர் கொண்டு சென்ற சூட்கேஸ் குண்டு வெடித்ததில் இறந்தவர்) வாங்கித்தரும் 1பணிஸ் 1 ரோல் தான் அன்றைய உணவு. ஒருநாள் மிகுந்த பசி. காலையில் இருந்து உணவில்லை. முல்கம்பொல பெளவ்வல வீதியை அண்மித்தே பாலகிருஸ்ணன் ( மேர்ஜ் மற்றும் சரிநிகர் பத்திரிக்கை ) வீடு இருந்தது. அங்கு சென்றோம். வீட்டில் நுழையும் போதே பருப்பு வாசனை வந்தது. பாலா காங்கேசன்துறை வந்த போது நாபா வீட்டில் தாங்கியுள்ளார். மிக நெருக்கமான தோழமை. அவர் மனைவியும் நாபாவை அறிவார். வரவேற்பு நன்றாக இருந்தது. குளிருக்கு இதமாக தேநீர் தந்தார். நாபாவும் பாலாவும் நீண்ட நேரம் மலையக அரசியல் பற்றி பேசினர். நான் குசினி பக்கம் பார்த்தபடி இருந்தேன். திடீரென எழுந்த நாபா ஓ கே தோழர் நீங்கள் தூங்கவேண்டும் நாங்கள் போய்வருகிறோம் என சிரித்தபடி விடைபெற்றார். நாபாவுக்கு ஒரு கொடை அவர் சிரிப்பில் அவர்முகவாட்டம் களைப்பு எல்லாம் மறைக்கப்பட்டு விடும். விட்டு விட்டு அவர் சிரிப்பது வயிறு புடைக்க திண்டவர் போல் அவரை காட்டும். பாதி தூரம் வந்தபின் கேட்டேன் ஏன் சாப்பட்டை பற்றி பேசவில்லை என்று. நாபா சிரித்தபடி கேட்க வெட்கமாக இருந்தது அதுதான் வந்துவிட்டேன் என்றார். அன்று கொலைப்பட்டினி. என்றாலும் கதவு நிலைகளில் மற்றவர்கள் செருகிவைத்திருந்த குறை சுருட்டின் புகை எம்வயிற்றை நிரப்பியது. அன்று அவரின் செயலால் கோவம் வந்தது ஆனால் விட்டு விலகவில்லை. தொடர்ந்தும் அவருடன் விரும்பி அலையும் தோழமை தொடர்ந்தது. ஒருமுறை நான் நாபா குண்சி திருமலையில் இருந்து மூதூர், வெருகல் ஊடாக மட்டுநகர் பயணித்த போது ஓட்டமாவடி பாலத்தில் புகையிரதம் போக கடவை மூடப்பட்டிருந்தது. மூவரும் இறங்கி பாலத்தருகே சிறுநீர் கழித்து கொண்டிருந்த வேளை வேகமாக வந்த பொலிஸ் ஜீப் அருகாமையில் நின்று பொலிசார் குதித்து ஓடிவந்தனர். நானும் குண்சியும் கலவரப்பட்டு வெளியேற்றத்தை நிறுத்திவிட்டோம். நாபா நிதானமாக வெளியேற்றத்தை தொடர்ந்தார். பொலிஸ் ஓடியது புகையிரதத்தில் வந்த யக்கடையா என்ற கள்வனை பிடிக்க. பஸ் பயணம் தொடர்ந்தபோது எம்மை பார்த்து நாபா சிரித்தது இன்னும் என் மனத்திரையில். திருமலை 10ம் நம்பரில் செஞ்சி வீட்டில் தங்கும்போது உணவுக்கு பஞ்சமில்லை. இரவில் படுக்க கடற்கரை மண்டபம். அந்த வேளைகளில் நாபா தன் குடும்ப பின்னணியை 1 நிமிடம் கூட எண்ணாத மிக மிக சாதாரண நிலைக்கு தன்னை உட்படுத்தியது எனக்கு விநோதமானது. வசதிகளை தேடுவோர் மத்தியில், இருந்தும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்த ஒருவராக என்வாழ்வில் நான் கண்டது நாபாவை மட்டுமே. ஒரு தடவை மட்டக்களப்பு போய்ஸ் ரவுணில் ஒரு கருத்தரங்கு. அதில் பேச வடக்கில் இருந்து வரதன் தெற்கில் இருந்து தயான், திராணகம, முத்து போன்றோர் வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து தெற்கில் இருந்து வந்தவர் போனபின் பொலிசார் அவ்விடம் வர குண்சி தந்திரமாக நாபாவை தப்பவைக்க வரதன் உட்பட பலர் கைதானார்கள். அப்போது பார் றோட்டில் தங்கியிருந்த என்னிடம் காலில் செருப்பு கூட இல்லாமல் நாபாவை தன் சயிக்கிளில் வந்தாறுமூலை பாலா ( பின்னாளில் பாம்புகடித்து இறந்தவர் ) கூட்டிவந்தார். சிறிது நேரத்தில் வந்த குண்சி நாபாவை உடனடியாக கண்டிக்கு அழைத்து செல்ல சொன்னார். அப்போது குருநாகல் வரைதான் பஸ் கிடைத்தது. இரவு 12 மணியானதால் கண்டி பஸ் காலை 5 மணிக்கு என்றார்கள். நாபா நோபுரப்ளம் என கூறி வாசித்த பத்திரிகையை நிலத்தில் விரித்து பஸ்டாண்டில் படுத்துவிட்டார். காலையில் சக பயணிகள் தட்டி எழுப்ப கண்டி பயணித்தோம். எந்த சூழ்நிலையிலும் நிதானம் தவறாத ஒருவர் என்வரையில் நாபா மட்டுமே. கொழும்பு,மலையகம், திருமலை மட்டக்களப்பு,அம்பாறை என அவருடன் பயணித்த என்னால் அவர் வடக்கிற்கு சென்றபோது போகமுடியவில்லை. ஏனென்றால் என் பெற்றோர், உறவினர் அனைவரும் வதியும் வடக்கில் என் தலை கறுப்பு தெரிந்தால் என்நிலை கவலைக்கிடம் என்பதால் நாபா என்னை வற்புறுத்தவில்லை. மீண்டும் ஒரு நீண்ட பிரிவு எமக்குள். கொழும்பில் தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன். புதிய வாழ்க்கை நிறைய வசதிகள் என 83 கலவரம் வரை சென்றது. 83 கலவரம் முடிந்து சில வாரங்களின் பின்தான், யாழ்ப்பாணம் சென்றேன். அப்போது மானிப்பாயில் மீண்டும் வினோதம். என் எதிரே நாபா, பலாவின் (கபூர்) சயிக்கிளில் வந்தார். என்னை கண்டதும் வாஞ்சையுடன் கரம்பற்றினார். அப்போது பாலா உங்களை நான் கொழும்பில் பல அகதிமுகாமில் தேடினேன் என்றார். நாபா சிங்கன் சுளிச்சிருப்பான் என கூறி, விட்டு விட்டு சிரித்தார். பின் இந்தியாவில் முகாம்கள் தொடங்கிவிட்டோம் பயிற்சிகள் தொடர்கின்றன தொடர்பில் இருங்கள் என கூறி விடைகொடுத்தார். 1984ல் மத்திய கிழக்கு நாட்டில் வேலைசெய்ய போகும் முன் நாபாவை சந்திக்க விரும்பி சென்னை சென்றேன். என்னை தான் தங்கி இருந்த ஞானத்தின் தொடர்மாடிக்கு கூட்டிசென்ற நாபாவிடம் என் பயணம் பற்றி கூற அவர் நோபுரப்ளம் என கூறி இரவு பஸ்சில் கும்பகோணம் அனுப்பிவைத்தார். சிவபுரம் முகாமில் திருமலை பீட்டர் ( பசுக்காவை குத்தி எறியுமுன் வெடித்ததால் இறந்தவர் ) என்பவர் எனக்கு தகவல் சேகரித்தல் பரிமாறல் இரகசிய கடிதம் வரைதல் என உளவாளிக்கு தேவையான மேலும் பல அடிப்படை விடயங்கள் பற்றி விளக்கம் தந்தார். 1981 ற்கு பின் களுவாஞ்சிகுடி ரஞ்சித்தை அங்கு சந்தித்தேன். திருமலை செஞ்சியை இரவு சென்றியில் பார்த்தேன். வசதியோடு வாழ்ந்து எமக்கு அன்னமிட்ட கையில் கடிகாரம் கூட இல்லாமல் காவலில் நின்றார். உப்புக்கு நன்றியாக என் கையில் இருந்த கடிகாரத்தை அவரிடம் கொடுத்தேன். ஆபீஸ் பொறுப்பாளர் மட்டக்களப்பு வேலு இயக்கத்திற்காக கும்பகோணம் முழுவதும் கடன் பட்டிருந்தார். கந்தளாயில் சொந்த உழவுயந்திரம் வைத்து வயல் செய்த சின்னவன் ( இவரின் உந்துதலில் ஸ்டாலின் அண்ணாவின் ஆலோசனையில் உருவானது தான் எஸ் எஸ் எனும் எறிகணை மோட்டர் ) தன் சிறு குடிலில் எனக்கு உணவளித்தார். அதே போல் யாழ்பாணத்தில் பி எம் சி க்கு அருகாமையில் இருந்த டியூடரியில் பிரபல பொருளியல் ஆசானாக பொருளாதார வசதியோடு இருந்த வரதன் குடும்ப நிலைமை கவலையளித்தது. இவர்கள் எல்லோரும் தம்மை இந்தளவிற்கு வருத்தி கொள்ள முன்வந்ததற்கு நாபாவின் தோழமையே காரணம். 1 வாரத்தின் பின் நாபா கும்பகோணம் வந்தார். அவருடன் காரில் நானும் குண்சியும் ஓட்டி கணேசுடன் திருச்சி சென்று இரவு விடுதியில் தங்கினோம். யன்னல் ஊடாக மலையில் வெளிச்சம் தெரிய விசாரித்தேன். உச்சிப்பிள்ளையார் என்றனர். அதிகாலையே எழும்பி மலைஏறி நெத்தியில் திருநீறு சந்தணம் குங்குமத்துடன் வந்த என்னிடம் குண்சி நீங்கள் ஈ பி ஆர் எல் எப் கொள்கையை மீறிவிட்டீர்கள் என்றார். நாபா சிரித்த படி நின்றார். எனக்கு அது நோபுரப்ளம் என கூறுவதுபோல இருந்தது. இன்று குண்சி தீவிர பக்தர். எல்லாம் அவன் செயல். இரவு 10 மணிக்கு சென்னை பயணித்தோம். நானும் குண்சியும் தூங்கினோம். நாபா தூங்கவில்லை. கணேஸ் கண் அயர்ந்தால் நாபா வண்டியை நிறுத்த சொல்லி அவரை தேநீர் அருந்திவர சொல்வார். எம்மை தூங்கவிட்டு அவர் பயணம் முழுவதும் விழித்திருப்பார். ஒருநாள் என்னை வடபழனி வீட்டுக்கு கூட்டிசென்றார். வசதியான வீடு.( நடிகை நளினியுடையது) அங்கு இருந்தவர்களும் போராளிகள் தான். நாம் உள்ளே போனதும் நெடிதுயர்ந்த ஒருவரும் கட்டுமஸ்தான ஒருவரும் நாபாவை வரவேற்றனர். நெடிதுயர்ந்தவர் டெலோ சிறி சபாரட்ணம் கட்டுமஸ்தானவர் செல்வம் அடைக்கலநாதன். நாபா தான் பாவிக்கும் கார் சிறி தந்தது என கூறினார். சிறி நாபாவின் தோழில் செல்லமாக தட்டினார்.( பின்னாளில் சிறியை காப்பற்ற முடியாத அளவிற்கு நாபா சூழ்நிலை கைதியானது அவர்மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை என்னுடன் திருமலையில் தங்கியிருந்த போது பகிர்ந்துகொண்டார்.) ஒருநாள் என்னை மட்டும் காரில் கூட்டிசென்று ஒருஇடத்தில் காரை நிறுத்தசொன்னார். அப்போது காரின் பின் கதவை திறந்து கொண்டு ஒரு பெண் நாபா அருகில் அமர இவர்தான் ராம் கொழும்பில் இருக்கிறார் என நாபா என்னை அறிமுகபடுத்த அது நாபாவின் ஆள் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஆனந்தி வணக்கம் சொல்ல நானும் வணக்கம் சொன்னேன். சாலிக்கிராம் மணியின் (இன்பம்) வீட்டில் நடந்த அறிமுகத்தின் பின் மணி என்னிடம் மப் (மக்கள் ஆய்வு பிரிவு) பற்றி கூறி என்னை பின்பு தொடர்பு கொள்வதாக கூறினார். 2 வாரங்கள் பல பயணங்கள் பலரின்சந்திப்பு என முடிவடைய தோழர் நாபவை பிரிந்து கொழும்பு திரும்பினேன். அங்கு எனது மத்திய கிழக்கு நாட்டு வேலைக்கும் நான்கொடுத்த பணத்திற்கும் ஏஜன்ட் மங்களம் பாடியிருந்தார். நல்லவேளை நான் பார்த்த தனியார் நிறுவன வேலை இருந்ததால் தப்பித்தேன். என் வேலையோடு நாபா அறியதருவதையும் செய்தேன். யாழ்ப்பாணத்தில் ஜேம்ஸ் என்பவரை சந்திக்க சொன்னார். யாழ் பல்கலைகழகம் சென்றபோது வெள்ளை சேட் வேட்டி அணிந்த தமிழ் பண்டிதர் போல இருந்த ஒருவர் ஜேம்ஸ் என தன்னை அறிமுகபடுத்தினார். கொழும்பில் ஏற்படுத்தவேண்டிய தொடர்புகளை விபரித்தார். தயான் ஒருதடவை குண்சிக்கு என்ன நடந்தது நாபாவும் அவரும் கணவன் மனைவிபோல. ஏன் பிரிந்தார்கள் என கேட்டு கவலைப்பட்டார். என்னிடம் அப்போது பதில் இல்லை. மீண்டும் இந்தியா போனபோது இதுபற்றி முழுமையாக அறிந்தாலும் நாபாவிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் குண்சி ஒதுங்கியது ( ஒதுக்கப்பட்டது) நபாவுக்கு மிகுந்த மனவேதனை என்பதும் அந்த விடயத்தில் அவர் ஒரு சூழ்நிலை கைதி என்பதும் என்னால் உணரமுடிந்தது. இம்முறை றோ அதிகாரிகளான வாசு, ரமணனை சந்திக்க ஞானத்தின் ஸ்கூட்டரை நான் செலுத்த நாபா பின்னால் அமர்ந்துவருவார். அவர்கள் எனக்கு இலங்கை இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பை தந்தனர். கொழும்பில் அவர்கள் கேட்கும் தகவல்களை சேகரித்து கொடுக்கும்படி நாபா பணித்தார். ரவி எனும் அதிகாரி பலவிடயங்களை கேட்பார். அத்துலத்முதலிக்கு நெருக்கமான ஒரு பத்திரிகை நபர்மூலம் தகவல்கள் கிடைக்கும். இந்த வேளையில் யாழ்ப்பான நிலவரம் பற்றி அவர் கூறியது பாரதூரமானது. சிவத்தம்பி கூறியதாக அவர் என்னிடம் கூறி ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டார். நான் உடன் யாழ்ப்பாணம் சென்று சந்தி (சந்திரசேகரம் பெருமாள் கோவிலுக்கு முன் உள்ள நாபா வீட்டில் வசித்தவர் ) பேள் ரவி ( வெற்றியின் அண்ணர் அதே வீதியில் வசித்தவர் ) உட்பட எனது தனிப்பட்ட தொடர்புகள் மூலம் விசாரித்த போது பெருமாள் கோவில் முதல் தென்மராட்சி வரை நடந்த சம்பவங்களை அறிந்தேன். அதில் சம்மந்தபட்ட ஒருசிலர் உண்மையை கூறினாலும் பொறுப்பாளர் மறுத்துவிட்டார். சந்தி பெருமாள் கோவில் சங்கு பற்றி கவலைப்பட்டார். தகவல்களுடன் இந்தியா போக முற்பட்டபோது 5 தினங்கள் மாதகல் கரையில் காக்கவைக்கபட்டேன். வண்டி வரவில்லை என கூறினர். கொழும்பு திரும்பி விமான மூலம் பயணித்து அப்போது நாபா கும்பகோணத்தில் நின்றதால் அங்கு சென்றேன். சிவபுரம் முகாமில் காலை பயிற்சியில் இருந்த நாபாவிடம் சகலதையும் கூறினேன். நீன்ற நேரம் ஓடியபடியே கேட்ட நாபா சினப்பையன் சொல்லி மாற்றலாம் நோபுரப்ளம் என்றார். என் மனதில் இனித்தான் புரப்ளம் என பதிவானது. நான் கொழும்பு திரும்பி விட்டேன். சில மாதங்களின் பின் இப்ராகிம் (சிவகரன்) சொன்ன விடயங்கள் எனக்கு மனக்கலக்கத்தை ஏற்படுத்தியது. நாபாவின் கவனத்துக்கு கொண்டுவர கும்பகோணம் போனேன். முதல் நாள் தான் அவர் தாயகம் சென்றதாக ஸ்டாலின் அண்ணா கூறி எனது அவசரத்தை பார்த்து என்னை வேதாரணியம் அனுப்பிவைத்தார். அங்கு ஈஸ்வரன் (பெருமாள் கோவிலடி) எமது வண்டி போய்விட்டதால் பனாகொடை மகேஸ்வரன் வண்டியில் அனுப்பி வைத்தார். நான் பஸ்சில் பயணித்தபோது மானிப்பாயில் கபூர் (பாலா) எனது மாமா ஒருவருடன் நிற்பதைகண்டு இறங்கினேன். கபூர் எப்போவந்தீர்கள் என கேட்க எனது மாமா என்னைபார்த்து பாலா (எனது வீட்டுப்பெயர் ) இவர்களுக்கு விளக்கிசொல் என்றார். கபூர் தோழர் எஸ் ஜி வந்துள்ளார் தங்குவதற்கு பாதுகாப்பான வீடு தேவை உங்கள் மாமா வீட்டை 1 மாதம் தரசொல்லுங்கள் என்றார். நானும் மாமாவிடம் சிபார்சு செய்ய வீடு கிடைத்தது. பின்பு கபூரிடம் ஏன் ராணுவ பொறுப்பாளரின் யாழ் வீட்டை பாவிக்கவில்லை என கேட்க அவர் சில நடைமுறை சிக்கல்களை கூறி நான் கொண்டுசென்ற தகவலை உறுதிப்படுத்தினார். நாபாவிடம் தகவல்களை கூற அப்போதும் நோபுரப்ளம் பேசி தீர்க்கலாம் என்றார். நான் கொழும்பு திரும்பிவிட்டேன். சில வாரங்களின் பின் புலி டெலோ மோதல் அதன்பின் நாபா இந்தியா திரும்பியதை அறிந்தேன். மீண்டும் யாழ் சென்றபோது நிலைமை நன்றாக இல்லை. மட்டக்களப்பு தோழர்கள் பலர் கோப்பாயில் இருந்தனர். குண்சியின் ஆலோசனையில் சுரேஸ் அந்த பிராந்தியத்துக்கு புதிய போட் வார்ப்பித்து கொடுத்திருந்தார். தாளையடியில் இருந்து புறப்பட்ட கன்னிப்பயனத்தில் ஓட்டி மாமா, ஜோதி,யசீர் மற்றும் சிலருடன் நானும் கோடியாக்கரை சென்றோம். நாபா பலவிடயங்களை மனம்விட்டு பேசினார். மிகுந்த நம்பிக்கை தென்பட்டது. என்னை மீண்டும் டெலோ வீட்டிற்கு கூட்டிசென்றார். செல்வம் தான் புதிய தலைவர் என அறிமுகபடுத்தினார். செல்வம் நாபா மீது அபரித நம்பிக்கை கொண்டவராக காணப்பட்டார். நான் ஸ்டாலின் அண்ணா வீட்டில் வைத்து சென்ற என் பாஸ் போட்டில் கொழும்பு திரும்பும் வேளை நாபா என்னை மட்டக்களப்பு வேலைத்திட்டத்தில் கவனம்செலுத்த பணித்தார். அடிக்கடி மட்டக்களப்பு செல்வேன். குமார், அருள், சர்மா,ரட்ணம், சரத், குட்டி, பரா என பலருடன் கொக்கட்டிசோலை, அன்னமலை,துறைநீலாவணை,காரைதீவு என பயணிப்பேன். குமார் காளி மக்களால் (புலி ) தான் பிரச்சனை வரும் என கூறினார். ஒரு தடவை போனபோது நான் இந்தியா போன அந்தபிராந்திய போட் நிறைய ஆயுதங்கள் வெடி மருந்துகளுடன் வருவதறிந்து குட்டி,சரத் மற்றும் சிலருடன் ரக்டரில் கிரான்குளம் கரையில் காத்திருந்தோம். பொருட்களுடன் ஓட்டி மாமா, ஜோதி, பாட்டுரவி,சின்ன ரஞ்சித் எல்லோரும் வந்தனர். நாபா நேரடியாக அந்த பிராந்தியத்துக்கு ஆயுதம் அனுப்பியிருந்தார். பூசா முகாமில் இருந்து விடுதலையான சுகுவை இந்தியா அனுப்பி வைக்குமாறு நாபா பணித்தார். சுகுவின் தாயார் என்னை தொடர்புகொள்ள இருவருக்கும் பாஸ் போட் செய்து விமானநிலையம் வரை சென்று அனுப்பி வைத்தேன். சில மாதங்களின் பின் யாழில் இருந்து வந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது. ராணுவ பொறுப்பாளர் புறப்பட்ட போட் கவிழ்ந்ததால் பல நல்ல தோழர்கள் பலியானதோடு பல லட்சம் பெறுமதியான பொருட்களும் கடலுக்கு இரையானது. இடிமேல் இடியாக சூளைமேடு சம்பவம் அதை தொடர்ந்த நடவடிக்கை காத்திருந்த புலிகளுக்கு வாய்ப்பாக எம்மவரை தாக்கி அழித்தனர். ஒருசிலர் கொழும்பு தப்பிவர அவர்களுக்கு பயண ஒழுங்கு செய்யசொல்லி நாபா பணித்தார், செய்தேன். அவர்களில் முக்கியமானவர் இளங்கோ (சாவகச்சேரி ரவீந்திரன். இவர் பெயர் தான் முதலில் வட- கிழக்கு மாகாண சபை சபாநாயகர் பதவிக்கு முன் மொழியப்பட்டது ). சுரேஸ் பிரஸ் கருணாவிடம் நிற்பதாக அறிவித்தார். நான் போகுமுன் அவரை கருணா தன் குடும்பத்துடன் இந்தியா கூட்டிசென்றுவிட்டார். உகந்தை காட்டில் நிற்பவர்களை சந்திக்கும்படி அறிவித்தார். நான் மட்டக்களப்பு சென்று சாம் தம்பிமுத்து தந்த தகவலுடன் மளிகைகாடு வெள்ளையன் உட்பட முஸ்லிம் நண்பர்களுடன் பொத்துவில் சென்று உகந்தை காட்டில் இருந்த ரட்ணம், பாட்டுரவி,பரா,விக்கி, சங்கர்,என பல தோழர்களை சந்தித்தேன். அவர்கள் ஆயுதம் அனுப்பினால் போராடலாம் என்ற தகவலுடன் இந்தியா போனேன். அப்போது தங்கச்சி மடத்தில் இருந்த நாபாவிடம் தகவலை கூற அவர் அன்று இரவு எமக்கு ஆயுதங்கள் வருவதை கூறினார். இரவு 10 மணிக்கு பல வகையான புதிய ஆயுதங்கள் வந்தன. அங்கு தங்கியிருந்த ஜோர்ஜ், ரொபின், சாமி, முகுந்தன் என பலரும் நாட்டுக்கு திரும்பும் விருப்பில் இருந்தனர். உகந்தை முருகன் கோவில் அரகில் உள்ள கரைக்கு ஆயுதவண்டி வரும் என்ற செய்தியுடன் நான் மாளிகைகாடு வெள்ளையனிடம் சென்றேன். காலையில் சாம் அண்ணா இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி தொலை பேசியில் அறியத்தந்தார். மறுநாள் செய்தியை அறிந்த காட்டில் இருந்தவர்கள் தம்மிடம் இருந்த ஆயுதங்களுடன் காட்டைவிட்டு வெளியேறி வந்தவாகனத்தில் ஏறி கொக்கட்டிசோலை போக புலிகள் அவர்களை பிடித்துவிட்டார்கள். செய்தி கிடைத்ததும் நாபாவுக்கு தெரியபடுத்த அவர் துரிதமாக செயல்பட்டதால் இந்திய அமைதிப்படை அதிகாரிகள் கேணல் கண்ணா மேஜர் முத்தண்ணா இருவரும் ஜீப்பில் காரைதீவு வந்து புலிபொறுப்பாளர் ரோமியோவிடம் கதைத்து ரட்ணம், விக்கி உட்பட அனைவரும் விடுவிக்கபட்டனர். ஆயுதங்கள் தொடர்பாடல் கருவி திருப்பி தரப்படவில்லை. நாபா தோழர்கள் விடுபட்டால் போதும் ஆயுதங்கள் போனால் நோபுரப்ளம் என்றார். சில தினங்களில் தாம் வருவதாகவும் தாம்வரும் ஹெலிகொப்டார் இறங்கும் இடத்தை அறியத்தர சொன்னார். நாம் மாளிகைகாடு தாமரைக்கேணி மைதானத்தை அலங்கரித்து ஒலிபெருக்கியில் தலைவர்கள் ஹெலியில் வருவதை அறிவிக்க ஊரே திரண்டு வந்தது. மாலை 6 மணிபோல் அவர்கள் இந்திய ராணுவ வண்டிகளில் வந்தனர். நாபா, வரதன்,கிருபா,ஜோர்ஜ், ஓட்டி கணேஷ், முகுந்தன்,உருத்திரன் உட்பட பலர் தாம் கொண்டுவந்த பிரசுரங்களை விநியோகித்தனர். இந்தியன் ஹெலி பார்க்க வந்த மக்கள் திட்டிக்கொண்டு சென்றனர். நாபா செய்த முதல் வேலை இறந்த அனைத்து தோழர்கள் வீட்டுக்கும் சென்று துக்கத்தில் பங்கெடுத்ததே. காலை 6 மணிக்கு தொடங்கினால் இரவு 9 மணிவரை மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட கிராமங்கள் எல்லாம் தோழர் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறுவார். அனைத்தையும் உருத்திரன் வீடியோ பண்ணுவார். சில விசமிகளால் தமிழ் முஸ்லிம் கலவரம் தூண்டப்பட நாபா உடனடியாக இந்திய அமைதிப்படை உதவியுடன் அதை தடுத்தார். இரவில் நாபா உட்பட எம்மில் சிலர் வெள்ளையன் வீட்டில் தான் தங்குவோம். பின்னாளில் அந்த முஸ்லிம் நண்பர் கொல்லப்பட்ட செய்திகூட நாபாவை பாதித்தது. நான் வேலை நிமித்தம் கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும் பயணம் செய்வேன். ஒருதடவை கோட்டை ரயில் நிலையத்தில் அக்கரைபற்று ஜெகதீஸ் ஒருவரை தனது ஆசிரியர் என அறிமுகபடுத்தினார். அவர் 2 புத்தகங்களை தந்து அதை நாபாவிடம் கொடுக்க சொன்னார். தனது நாபாவை சந்திக்கும் விருப்பத்தையும் கூற நான் அவரை காரைதீவு வந்தால் அறிமுகபடுத்துவேன் என கூறினேன். அவர் தான் பின்பு வட- கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் அமைச்சரான அபு யூசுப். இன்னொரு நாள் லண்டனில் இருந்து வந்த உபாலி கூரே இதே போல் கேட்க அவரை காரைதீவு அழைத்து சென்று நாபாவை சந்திக்க வைத்தேன். அந்த சந்திப்பு தான் பின்னாளில் வரதன், அமீன் (சிவகுமார்) கொழும்பில் இருந்து எனது பெயரில் வெளியிட்ட புதிய கண்ணோட்டம் பத்திரிகையை இலவசமாக அவர் பதிப்பகத்தில் அச்சிடவும் அதை 2 ரூபாவுக்கு விற்று தோழர்கள் பசியாறவும் உதவியது. சந்திப்பவர்களை தன்வசமாக்கும் காந்த சக்தி நாபா பெற்ற வரம். சுயநலம் விட்டவரை பொதுநலம் தேடிவரும். நல்லதோர் வீணையை சாம்பலாக்கி விட்டர்கள். பொறுமை காக்காத புலிகள் கிரானில் வாசுதேவா குழுவினரை பலியெடுத்தனர். தொடர்ந்து எம் பக்கமும் திரும்பினார்கள். நாபாவை காலை திருமலை அனுப்பிவிட்டு கல்முனையில் கொழும்பு செல்லும் பஸ்ஸில் இருந்தபோது வந்த புலிகள் தோழர்கள் யாரும் நிற்கிறீர்களா என கேட்க நட்பட்டிமுனை தைரி ஆம் என கூற என்கண் முன்னால் அவர் சுட்டு கொல்லபட்டார். 1978 சூறாவளி முதல் தொடர்ந்து எம்மோடு இணைந்து செயல்பட்டவர் மண்ணில் சாய்க்கபட்டார். இரவு முழுக்க நித்திரையின்றி காலையில் கொழும்பை சென்றடைந்தேன்.நாபா இந்தியா சென்றுவிட்டார். புலிகள் அமைதிப்படை மோதலில் பாரிய ஆயுதங்கள் பாவிக்க படவில்லை என அமிர்தலிங்கம் அறிவிக்க உண்மைநிலைய அறியத்தருமாறு நாபா சொன்னதாக சுரேஸ் அறிவித்தார். அப்போது கிளிநொச்சிவரை பயணித்து பின் ஆனையிறவு பின் பக்கத்தால் நடந்தும் வரும் சயிக்கில் ரக்டர் என்பவற்றில் பயணித்து நீர்வேலி பூதர்மடம் ஊடக பெருமாள் கோவில் சந்தி வீடு சென்றேன். சில வாரங்கள் அங்கு சந்தி, ரவி தந்த சயிக்கிளில் பல இடங்கள் திரிந்து தகவல் அறிந்தேன். பீச் றோட்டில் இருந்த வேதநாயகம் ( வரதனின் மாமா) நடந்த விடயங்கள் பல கூறினார். அவர் வீட்டிலும் சந்தி வீட்டிலும் உணவு கிடைத்தது. யாழில் இருந்து புறப்பட்ட முதலாவது மினிபஸ்ஸில் கொழும்பு சென்று சென்னைபோய் நாபாவிடம் கூற அவர் டெல்லி அனுப்பினார். கேதீஸ் என்னை றோ சந்திரனிடம் கூட்டிசென்றார். நான் அங்கு நேரில் கண்ட ராணுவத்தின் 2 இஞ்ச் மோட்டர் பவனை செயின்புலக் வீதியோர மதில்களை தோட்டங்களை துவசம் செய்தமை பெண்களை சோதனையிடும் முறை விசாரணையின் போது விழும் வாதராணி கம்பு அடி என பட்டியலிட்டேன். கேதீஸ் அவரிடம் ஏன் பெண் ராணுவத்தை அனுப்பகூடாது என கேட்க அவர் சம்மதித்து அடுத்த வாரம் சி. ஆர்.பி படையணி யாழ் வந்தது.சில நாட்களின் பின் நாபா திரும்பிவந்தார். திருமலை சீனன் குடாவில் இந்திய அமைதிப்படை பாதுகாப்பில் இருந்த நபா உட்பட அனைவரையும் சந்திக்க நாபா தான் முக்கியவேலையாக இந்தியா திரும்புவதாகவும் வரதன், சேகரை கொழும்பு அனுப்புவதாக கூறினார். அவர்கள் தங்குவதற்கான ஏற்பாட்டை அபு யூசுப் தனது கம்யுனிஸ் கட்சி இளைஞரணி செயளாளர்மூலம் ஒழுங்கு செய்தார். பின் திசரணி, குணசேன மகாநாமாவை அறிமுகபடுத்த ஜி சி எஸ் யு (அரச எழுதுவினைஞர் சங்கம்) மேல்மாடியில் நிரந்தர வாசம். 1988ல் எனது திருமண எழுத்து பற்றி நாபாவுக்கு தெரிவிக்க அவர் கேதீஸ் மனைவி மூலம் ஒரு பட்டுசேலை அனுப்பியிருந்தார். பின்பு நான் இந்தியா போகுமுன் நாபாவின் தாயார் ஒரு மோதிரம் தந்துவிட்டார். அதை நான் நாபாவிடம் கொடுக்கும் போது அவரது கையில் ஏற்கனவே இருந்த மோதிரத்தை காணவில்லை. எங்கே என கேட்டேன் விட்டு விட்டு சிரித்தார். அந்த சிரிப்பில் அதை விற்றுத்தான் பட்டுசேலை வாங்கி அனுப்பினார் என்பதை புரிந்து கொண்டேன். வரதனை கொழும்பு அனுப்பிய நாபாவின் தீர்க்க தரிசன முடிவுதான் ஈ பி ஆர் எல் எப் அரசியல் கட்சியாக பதியபடவும் பின் வட-கிழக்கு மாகாண அரசை அமைக்கவும் வழிசமைத்தது. யாரிடம் எதனை ஒப்படைப்பது என்பதை நன்கு அறிந்தவர் நாபா. அவரின் முடிவுகள் ஒருசிலரது எதிர்பார்க்கைக்கு ஏமாற்றம் தந்தாலும் அவர் யாரையும் ஏமாற்றவில்லை. மாகாணசபையை அமைத்தபோது நாபாதான் முதல்வர் என பலரும் எதிர்பார்க்க அவர் மறுத்துவிட்டார். பதவிக்கு பின்னால் ஓடுபவர் மத்தியில் தான் ஒதுங்கி உழைப்புக்கு மதிப்பளித்த நாபா தான் உண்மையான தலைமைத்துவ பண்புகொண்ட தலைவன். எந்த இடத்திலும் மாகாணசபை நிர்வாகத்தில் நாபா தலையிடுவதில்லை அதேபோல் எந்த அரசியல் முடிவும் நாபாவுடன் கலக்காமல் வரதன் எடுப்பதில்லை. தமக்குள் முரண்பாடு கொண்டபலரும் நாபா தம் பக்கம் பேசவேண்டும் என விரும்பினாலும் நாபா யார்பக்கமும் சாய்வதில்லை. அதனால் யாரும் நாபாவை விமர்சிப்பதில்லை அதற்கான தேவையும் இருக்கவில்லை. இந்திய அமைதி படை வெளியேற்றம் அனைவரையும் மீண்டும் இந்தியா திரும்பச்செய்தது. நான் மீண்டும் கொழும்பில். எம்மை மீளமைக்கும் முயற்சியில் நாபா சென்னை டெல்லி என அலைந்தார். ஒரு தடவை பணத்தட்டுப்பாடு என அறிவித்தார். நான் என்னிடம் ஒப்படைக்கபட்ட வியாபார பணத்துடன் இந்தியா சென்று அவரிடம் கொடுத்தேன். ( எந்த தொடர்மாடி வீட்டில் வைத்து பணம் கொடுத்தேனோ அதே வீட்டில் வைத்து தான் பின்நாளில் பலியெடுக்கபட்டார் ) அன்று இரவு தாஸ் வீட்டில் உணவு அருந்திகொண்டிருந்த போது நாபா அங்குவந்தார். தான் டெல்லி போவதாகவும் இங்கு கலைஞர் கரைச்சல் தருவார் எனவும் கூறி என்னிடம் விடைபெற்றார். அதுதான் எமது கடைசி சந்திப்பு என்பது எனக்கு அப்போது தெரியாது. என் நிறையில் குறை கண்டவர் பலர் ஆனால் என் குறையில் கூட நிறை கண்டவர் நாபா மட்டுமே. அதனால் தான் அவர் என் நண்பனா தோழனா தலைவனா என்ற என் தேடல் இன்றுவரை மட்டுமல்ல என் இறுதிவரை தொடரும். ஏனென்றால் விநோதங்களுக்கு விடை கிடைப்பதில்லை. (ராம்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |