ஆளும்
கூட்டணிக்கு
வடக்கில்
ஏன் இந்த நிலை?
(கே.சஞ்சயன்)
மூன்று தசாப்தங்களின்
பின்னர் அனைத்துக்
கட்சிகளும்
பங்கேற்கின்ற
ஒரு சூழலில்
வடக்கில்
உள்ளூராட்சித்
தேர்தல் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடைசியாக
1998 பெப்ரவரியில்
உள்ளூராட்சித்
தேர்தலை அரசாங்கம்
நடத்தியது.
அப்போது ஈபிடிபி,
புளொட், ஈபிஆர்எல்எவ்,
ரெலோ போன்ற
கட்சிகள்
தான் அதில்
போட்டியிட்டன.
இவை நான்குமே
வெறும் கட்சிகளாக
மட்டும் அப்போது இருக்கவில்லை.
ஆயுதம் தாங்கிய
அமைப்புகளாகவும்
இருந்தன.
புலிகளின் அச்சுறுத்தல்
இருந்ததால்
இந்த அமைப்புகள்தான்
போட்டியிட
முன்வந்தன.
தமிழர் விடுதலைக்
கூட்டணி போன்ற கட்சிகள்
தேர்தலில்
இருந்து ஒதுங்கி நின்று கொண்டன.
இதன் காரணமாக
யாழ்ப்பாணத்தில்
தேர்தல் நடத்தப்பட்ட
உள்ளூராட்சி
சபைகளில்
அதிகமானவற்றை
ஈபிடிபியும்,
புளொட் மற்றும் ரெலோ ஆகியன
குறிப்பிட்ட
சிலவற்றையும்
கைப்பற்றிக்
கொண்டன.
அதற்குப் பிறகு
யாழ்ப்பாணத்தில்
இப்போது தான் உள்ளூராட்சித்
தேர்தல் நடக்கப் போகிறது.
வன்னிப் பகுதியிலும்
1980களுக்குப் பின்னர் இப்போது தான் முதல்
முறையாக உள்ளூராட்சித்
தேர்தல் நடத்தப்படுகிறது.
வன்னியின் அனைத்துப்
பகுதிகளிலும்
1989 ம் ஆண்டு
பொதுத்தேர்தலுக்குப்
பின்னர் நடத்தப்படப்
போகும் முதலாவது தேர்தல் இது தான்.
வடக்குத் தேர்தல்
களத்தில்
இப்போது முன்னர் எதிர்பார்க்கப்பட்டது
போன்ற சூடு இருக்கும்
போலத் தெரியவில்லை.
எதிர்பார்க்கப்பட்ட அந்தப்
பரபரப்பு
இப்போதே அடங்கி விட்டது.
ஆனாலும் கட்சிகளுக்கிடையிலான
பிரச்சினைகளும்
இனிமேல் வேட்பாளர்களுக்கு
மத்தியில்
தோன்றக் கூடிய பிரசார
மோதல்களும்
வலுவடையக்
கூடிய வாய்ப்புகளே
தென்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில்
3 நகரசபைகள்,
13 பிரதேசசபைகள்
என 16 உள்ளூராட்சி
சபைகளுக்கும்,
கிளிநொச்சியில்
3 பிரதேசசபைகளுக்கும்
நடக்கப் போகின்ற தேர்தலில்
இருந்து ஆளும் கூட்டணி
முற்றாகவே
வெளித் தள்ளப்பட்டுள்ளது.
ஆளும் கூட்டணியில்
போட்டியிட
முனைந்ததால்
ஈபிடிபி இப்போது சங்கடத்திற்குள்ளாகியிருக்கிறது. இணைக்க அரசியலுக்கான
கதவை மூட
விரும்பாமல்
ஈபிடிபி வெற்றிலைச்
சின்னத்தில்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்
பட்டியலில்
போட்டியிட
முன்வந்தது.
அதேவேளை, ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சிக்கு
யாழ்ப்பாணத்தில்
உயிர் கொடுப்பதற்காக
அங்கஜன் இராமநாதனை
அமைப்பாளராக
நியமித்திருந்தார்
ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஸ. அவரும் இந்தத் தேர்தலில்
வேட்பாளர்களை
நிறுத்த முயன்றார்.
ஆனால் வேட்புமனுத்
தாக்கல் செய்யும் பொறுப்பு ஈபிடிபியிடம்
முழுமையாக
ஒப்படைக்கப்பட்டதால்
அவர் ஒதுக்கிக்
கொள்ள நேரிட்டது.
ஏற்கனவே பொதுத்தேர்தலில்
இவருக்கும்
ஈபிடிபிக்கும்
இடையில் கடுமையான பிரசாரப் போர் நடந்தது. ஒரு அறிக்கையை
வெளியிட்டு
விட்டு அங்கஜன் தனது அணியினருடன்
தேர்தலில்
இருந்து ஒதுங்கிக்
கொள்ள ஈபிடிபியே
வேட்பாளர்களையும்
நிறுத்தியது.
வேட்புமனுக்களையும் தயார் செய்தது. ஐக்கிய மக்கள்
சுதந்திர
முன்னணியின்
யாழ். மாவட்ட தேர்தல்
முகவராக நியமிக்கப்பட்ட
ரங்கன் தேவராஜன் என்ற சட்டத்தரணியே
வேட்புமனுக்களை
தயாரித்து
கையளித்தார்.
அவர் கட்சியின்
பெயரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பதற்குப்
பதிலாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
என்று எழுதி விட்டார். அதனால், அப்படியான
கட்சி ஏதும் இல்லை
என்று வேட்புமனுக்கள்
நிராகரிக்கப்பட்டன.
இதனால் இப்போது
கிளிநொச்சி,
யாழ்ப்பாண
மாவட்டங்களில்
ஈபிடிபி- ஆளும்கட்சி
கூட்டணி போட்டியில்
இருந்த அகற்றப்பட்டு
விட்டது.
இதற்கு எதிராக
சட்டநடவடிக்கை
எடுக்கப்
போவதாக அவர்கள் அறிவித்தாலும்
அது எந்தளவுக்கு
பயன்தரும்
என்பது கேள்விக்குரிய
விடயமே.
ஆளும் ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணிக்கு
வடக்கில்
வெற்றி பெற வேண்டும்
என்று தேவை இருந்தது. அதற்காகவே அது ஈபிடிபியை
தன் கைக்குள்
வைத்திருந்தது.
ஈபிடிபிக்கோ இந்தத்
தேர்தல் அதன் முக்கிய
இலக்குகளில்
ஒன்றாக இருந்தது.
இந்த இரண்டு
தரப்புகளுக்கும்
வேட்புமனுக்கள்
நிராகரிக்கப்பட்டதானது
பேரிடியாகவே
அமைந்துள்ளன.
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதானது
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்க்ஷவைப்
பெரிதும்
அதிர்ச்சிக்குள்ளாக்கி
விட்டது. மூத்த அமைச்சர்களுடனான
சந்திப்பில்
அவர் தனது
அதிருப்தியை
வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி வடக்கில்
ஆளும்கட்சியின்
வேட்புமனுக்கள்
நிராகரிக்கப்பட்டதற்கு
ஈபிடிபியே
காரணம் என்று மூத்த
அமைச்சர்கள்
குற்றம்சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே ஒரு கட்டத்தில்
அரசாங்கத்துக்கும்
ஈபிடிபிக்கும்
இடையில் விரிசல்கள்
தோன்றியிருப்பதாகச்
செய்திகள்
வெளியாகியிருந்தன.
யாழ்ப்பாண சட்டம்
ஒழுங்கு நிலை தொடர்பாக
அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா
நாடாளுமன்றத்தில்
நிகழ்த்திய
உரையும் அதை மறுத்து
யாழ். படைத் தளபதி தெரிவித்த
கருத்தும்
இதற்கான அடையாளமாகவே
பார்க்கப்பட்டது.
அதற்குப் பிறகு அரசுடன் எந்த முரண்பாடும்
கிடையாது
அதெல்லாம்
வதந்தி என்று ஈபிடிபி
கூறியது.
இப்போது ஏற்பட்டுள்ள
நிலைமையானது
இருதரப்பு
உறவுகள் புதிய விரிசல்களைச்
சந்திக்கக்
காரணமாக அமையலாம். அடுத்த கட்டமாக
சட்டநடவடிக்கை
எடுப்பது
குறித்த ஈபிடிபி ஆராய்வதாக
கூறியுள்ளது.
அரசாங்கமும்
அதற்கான நடவடிக்கைகளில்
இறங்கியுள்ளது.
ஆளும் கூட்டணியின்
வேட்புமனு
நிராகரிக்கப்பட்டதால்
வடக்கில்
தேர்தல் கால பரபரப்பு
பெரிதும்
குறைந்து
விட்டது.
தேர்தல் பிரசாரங்களும்
இனிமேல் அவ்வளவுக்கு
சூடுபிடிக்காது.
கீரைக் கடைக்கும்
எதிர்க்கடை
இருக்க வேண்டும் என்பார்கள்.
அதுபோலவே தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புக்கு
சவாலாக சமமான நிலையில்
இப்போது எந்தக் கட்சியும்
களத்தில்
இல்லை.
யாழ்ப்பாண மாவட்டத்தில்
உள்ள 16 உள்ளூராட்சி
சபைகளிலுமே
நேரடிப் போட்டி என்பது ஐதேகவுக்கும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்
இடையில் தான் இருக்கப்
போகிறது.
ஊர்காவற்றுறை,
வேலணை, நெடுந்தீவு,
வலி-மேற்கு,
வலி-வடக்கு,
வலி-தென்மேற்கு,
வலி-தெற்கு,
நல்லூர் என்று மொத்தம்
எட்டு சபைகளில் இந்த இரு
கட்சிகளும்
மட்டும் நேரடியாக மோதிக் கொள்ளப் போகின்றன.
வல்வெட்டித்துறை நகரசபைக்கு
இந்த இரு
கட்சிகளுடன்
குணசிங்கம்
மோகனகுமார்
தலைமையிலான
சுயேட்சைக்குழு
‘கணினி‘ சின்னத்தில்
மோதுகிறது.
பருத்தித்துறை
நகரசபைக்கு
ஐதேக, தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு,
ஜேவிபி ஆகிய கட்சிகளுடன்
வேலன் குணரெத்தினம்
தலைமையிலான
சுயேட்சைக்குழு
‘அப்பிள்‘ சின்னத்தில்
களமிறங்கியுள்ளது.
சாவகச்சேரி நகரசபைத்
தேர்தலில்
ஐதேக, தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
ஆகியவற்றுடன்
ஐக்கிய சோசலிசக் கட்சியும்
போட்டியிடுகிறது.
காரைநகர்
பிரதேசசபைக்கு
ஐதேக, தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
ஆகியவற்றுடன்
ஜேவிபியும்
களமிறங்கியுள்ளது.
வலி-கிழக்கு பிரதேசசபைக்கு
ஐதேக, தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
ஆகியவற்றுடன்
ஜேவிபியும்
வேட்பாளர்களை
நிறுத்தியுள்ளது.
வடமராட்சி
தெற்கு,மேற்கு
பிரதேசசபைக்கு
ஐதேக, தமிழ்த்
தேசியக்
கூட்டமைப்பு
ஆகியவற்றுடன்
கந்தையா கணேசராசா தலைமையிலான
சுயேட்சைக்குழுவும்
‘ஆமைப்பூட்டு‘
சின்னத்தில்
களமிறங்கியுள்ளது.
பருத்தித்துறை
பிரதேசசபைக்கு
ஐதேக, தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
ஆகியவற்றுடன்
துரையன் தங்கவேலாயுதம்
தலைமையிலான
சுயேட்சைக்குழுவும்
‘மாம்பழம்‘ சின்னத்தில்
வேட்பாளர்களை
நிறுத்தியுள்ளது.
சாவகச்சேரி
பிரதேசசபைக்கு
ஐதேக, தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு,
ஜேவிபி ஆகிய கட்சிகளுடன்,
‘மான்‘ சின்னத்தில்
அமரசேகரம்
செல்லையா
தலைமையிலான
சுயேட்சைக்குழுவும்,
‘அன்னாசி‘ சின்னத்தில்
கந்தன் ஆறுமுகம் தலைமையிலான
சுயேட்சைக்குழுவும்
வேட்பாளர்களை
களமிறக்கியுள்ளன.
இங்கு தான் மூன்று கட்சிகள், இரண்டு சுயேட்சைக்
குழுக்கள்
என்று ஐந்து முனைப்
போட்டி நிலவுகிறது.
எட்டு சபைகளில்
நேரடியாக
இருமுனைப்
போட்டியும்,
ஒன்றில் நான்கு முனைப் போட்டியும்,
ஏனையவற்றில்
மும்முனைப்
போட்டியும்
காணப்படுகின்றன.
ஆனால் என்னதான் சுயேட்சைக்குழுக்கள்,
அரசியல்கட்சிகள்
களமிறங்கினாலும்
இந்தத் தேர்தல் ஐதேகவுக்கும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்
இடையிலான
நேரடிப் போட்டியாகவே
அமைந்துள்ளது.
இது எதிர்பாராமல்
நிகழ்ந்துள்ள
மாற்றமே.
இதை ஐதேக தலைமை கொஞ்சம்
கூட எதிர்பார்க்கவில்லை.
புதிய நிலைமைகளை
அடுத்து வடக்கில் தேர்தல் பிரசாரங்களை
தீவிரமாக
மேற்கொள்வதற்கு
நடவடிக்கை
எடுக்குமாறு
ரணில் விக்கிரமசிங்க
பணித்துள்ளதாகவும்
தகவல்.
இந்தக் கட்டத்தில்
ஈபிடிபி- அரசாங்கத்
தரப்புக்
கூட்டணி வடக்குத் தேர்தல்களில்
என்ன செய்யப்
போகிறது?
வெறும் பார்வையாளராக
மட்டும் இருந்து விட்டுப் போகப் போகிறதா
என்ற கேள்வி
எழுகிறது.
சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்
வரை- அதன்
தீர்ப்பு
வெளியாகும்
வரை தேர்தல்
நிறுத்தி
வைக்கப்படப்
போவதில்லை.
இந்தக் கட்டத்தில்
பின்கதவு
வழியாக இந்த சபைகளைப்
பிடிக்க முயற்சிக்கலாம்.
பொதுவாக இப்படியான
தருணங்களில்
சுயேட்சைக்
குழுகைகளை
விலைக்கு
வாங்குவதும்
இயல்பே.
சிலவேளைகளில் சிறிய கட்சிகள் கூட அப்படி
விலைக்கு
வாங்கப்படுவதுண்டு.
ஆனால் யாழ்ப்பாண
நிலவரத்தைப்
பொறுத்தவரையில்
ஆளும்கட்சிக்கு
அங்கேயும்
ஒரு சிக்கல்
உள்ளது.
யாழ்ப்பாணத்தில்
உள்ள அனைத்துச்
சபைகளையும்
வசப்படுத்தும
வகையில் கட்சிகளையோ
சுயேட்சைக்
குழுக்களையோ
மடக்கிப்
போடுவதென்றால்-
ஆளும் கூட்டணி ஐதேகவிடம்
தான் சரணடைய
வேண்டும்.
அது பெரிதும்
சாத்தியமாகப்
போவதில்லை.
அதற்கடுத்து நான்கு
சபைகளில்
போட்டியிடும்
ஜேவிபியும்
ஆளும் கூட்டணியின்
ஆதரவைப் பெறும் நிலையில் இல்லை.
ஒரே ஒரு சபையில் போட்டியிடும்
ஐக்கிய சோசலிசக் கட்சியும்
இதற்கு மசியாது.
அடுத்து இருக்கின்ற
ஒரே தெரிவு
சுயேட்சைக்
குழுக்கள்
தான்.
கடந்த இரண்டு
மாதங்களில்
யாழ்ப்பாணத்தில்
ஏற்பட்டிருந்த
சுமுகமற்ற
சூழல் இப்போது அரசாங்கத்துக்கே
ஆப்பாக மாறி விட்டது.
இல்லையேல் இந்தப்
பிரச்சினையை
மிகச் சுலபமாகவே
சமாளித்திருக்க
முடியும்.
அதிகளவு சுயேட்சைகள்
போட்டியிட்டிருந்தால்
அவற்றை விலைக்கு வாங்குவது
சுலபம். வன்முறைச் சூழலால்
யாழ்ப்பாணத்தில்
ஏற்பட்ட பதற்றம் காரணமாக சுயேட்சையாகப்
போட்டியிடும்
எண்ணத்தில்
இருந்தவர்கள்
பலரும் ஒதுங்கிக்
கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் 19 சுயேட்சைக்குழுக்கள்
போட்டியிடுவதற்காகக்
கட்டுப்பணம்
செலுத்தின.
ஆனால் ஆறு சுயேட்சைக்குழுக்கள்
தான் வேட்புமனுக்களைக்
கையளித்தன.
வேட்பாளர்கள் கிடைக்காததே
இதற்குக்
காரணம். சுமுகமற்ற சூழல் தான் வேட்பாளர்கள்
பின்னடிக்கக்
காரணமாக இருந்தது.
இது ஆளும் கூட்டணிக்கு
சாதகமற்ற
நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி சுயேட்சைக்
குழுக்களை
மடக்கிப்
போட்டு ஆதரவு கொடுத்து
வெற்றி பெற வைக்க
முனைவதென்றாலும்-
அது வல்வெட்டித்துறை , பருத்தித்துறை
நகரசபைகள்
மற்றும் வடமராட்சி
தெற்கு,மேற்கு,
சாவகச்சேரி,
பருத்தித்துறை
பிரதேசசபைகளில்
தான் அது
சாத்தியமாகும்.
இங்கு தான் சுயேட்சைகள்
போட்டியிடுகின்றன.
அது கூட எந்தளவுக்கு
சாத்தியமாகும்
என்று கூற முடியாது.
யாழ்ப்பாணத்தில்
ஒட்டுமொத்தமாக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை
அரச கூட்டணி
தோற்கடிக்க
வேண்டும்
என்று நினைத்தால்-
அதற்கு இருக்கின்ற
ஒரே வழி,
தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு
சகுனப் பிழையாக வேண்டும் என்று ஐதேகவின்
காலில் சரணமாகதி அடைவது தான்.
அதை அரசாங்கம்
செய்யுமா
என்பது சந்தேகமே.
ஒரு பக்கத்தில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும்
அரசாங்கம்
பேச்சுக்களை
நடத்தி வருவதால் இந்த விடயத்தில்
அதனுடன் ஒரு கட்டத்துக்கு
மேல் முட்டி
மோத விரும்பாது
போகலாம்.
எனவே யாழ்ப்பாண
தேர்தல் களத்தில் சட்ட நடவடிக்கைக்கு
அப்பால் ஆளும் கூட்டணி
புதிய அரசியல் நகர்வு எதிலும் இறங்குவதற்கு
சாத்தியங்கள்
குறைவே.
அப்படி இறங்கினாலும்,
கடந்தமுறை
கொழும்பு
மாநகரசபைத்
தேர்தலில்
ஐதேக மூக்கை
உடைத்துக்
கொண்டது போல ஆகிவிடக்
கூடிய வாய்ப்புகளே
அதிகம்.