நல்லிணக்க
அரசியலும் இனவாத
அரசியலும்
தேவன்
(கனடா)
ஆசையே
அனைத்து துன்பத்திற்கும்
அழிவுக்கும் காரணம்
- புத்தர்
யுத்தம்,
இடப்பெயர்வு, அகதி
வாழ்வு எப்படி
ஒரு சமூகத்தின்
அத்திபாரத்தை;
தகர்க்கும், அதன்
குறுக்கு வெட்டுத்
தோற்றத்தை எப்படி
சுனாமி போல சுவடே
இல்லாமல் அழிக்கும்,
மனிதத்தைச் சிதைக்கும்
அல்லது விலை பேசும்,
சுரண்டும் என்பதற்கு,
நம் தேசத்தின்
30 வருட உள்நாட்டுப்
போர் மிகப் பெரிய
உதாரணமாக இருக்கிறது.
போரானது மனிதனை
மிருகமாக்குகிறது,
மேன்மையான உணர்வுகளைச்
சிதைக்கிறது, தார்மீகரீதியான
வாழ்வியலை சேதப்படுத்துகிறது.
இதற்கு அனுகூலமாக
சக மனிதனை நம்பாத,
சகோதர இன - சமூக
மக்களுக்கு எதிராக
இன, மத, விரோதமான,
இனவாதமான உணர்ச்சிகரமான
பிரச்சாரங்களை
இனவாத ஊடகங்கள்
முடுக்கி விடுகின்றன.
இத்தகைய அழிவுப்பாதைக்கு
ஒவ்வொரு சமூகத்தையும்
பிரதிநிதித்துவப்படுத்தும்
இனவாத, குறுகிய
சிந்தனை உள்ள அரசியல்
தலைமைகள் தீனி
போடுகின்றன.
தனிநாட்டுக்கான
ஈழப்போர் ஆரம்பிக்கப்படுவதற்கு
முன்பு நமது சமூகத்தின்
கட்டமைப்பு எப்படி
இருந்தது என்பதை
நினைக்கும் போது
மனம் ஏங்குகிறது.
30 வருடத்திற்கு
முன்பு இருந்த
வாழ்வியல், மனிதம்,
ஐக்கியம், ஒற்றுமையில்
வேற்றுமை போன்ற
உயர்ந்த பண்புகளை
எமது முதிய தலைமுறை
கற்றுக் கொடுத்தது.
இன்றுள்ள சூழ்நிலையில்
அந்த வாழ்க்கை
மீண்டும் வருமா
என்பது சந்தேகமே.
ஈழப் போரானது
சமூகக் கட்டமைப்பை
ஆட்டம் காணச் செய்ததுடன்,
தமிழர்களில் யாரை
நம்புவது, யாரை
நம்பக்கூடாது
என்பது போன்ற சிக்கலான
நிலைமையையும்
தோற்றுவித்துள்ளது.
மேலும் போருக்குப்
பின்பான தேசத்தையும்,
பல்லின சமூகங்களையும்,
தேசிய ஐக்கியத்துடன்,
இணக்கப்பாட்டுடன்
வழி நடாத்துவதற்கு
முதிர்ச்சியான,
ஆளுமையான, இனவாதமற்ற
அரசியல் தலைவர்கள்,
கட்சிகள் உருவாக்கப்பட
வேண்டும்.
ஆனால் யதார்த்தம்
என்னவென்றால்,
யுத்தத்திற்குப்
பின்பான இலங்கையை
வழி நடாத்துவதற்கு
தற்போது உள்ள அரசியல்
கட்சிகளைக் கவனத்தில்
எடுத்துக் கொண்டால்,
அநேகமான தலைமைகள்
இனவாதச் சகதிக்குள்
மூழ்கித் தமது
இருப்புக்காக
மக்களைப் பிழையான
பாதையில் வழி நடாத்திக்
கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பிட்டுச்
சொல்லக்கூடிய
சில தலைவர்கள்
சிங்களத் தரப்பிலும்,
தமிழ்த் தரப்பிலும்
தேசிய நல்லிணக்கத்தை
முன்னெடுக்கக்
கூடியவர்களாக
இருக்கிறார்கள்.
ஆனால் இவர்களது
முயற்சி இனவாத
அலைக்குத் தாக்குப்
பிடிக்க முடியாததாகவே
இருக்கிறது.
உதாரணத்திற்கு
தமிழ் தேசிய கூட்டமைப்பை
(த.தே.கூ) எடுத்துக்
கொண்டால், இதன்
அரசியல் செயல்பாடு
குறை கூறுதல்,
அறிக்கை விடுதல்,
உசுப்பேத்தல்,
உணர்ச்சியூட்டல்,
இனவாதத்தைக் கிளப்புதல்,
மேற்குலக அடிவருடிகளாகச்
செயற்படுதல், பாராளுமன்றச்
சலுகைகளை அனுபவித்தல்,
உலகை வலம் வருதல்,
புலம்பெயர் புலி
ஆதரவு மாநாடுகளில்
கலந்து கொள்ளல்
என்பனவே அக்கட்சி
செய்யும் அரசியலாக
இருக்கிறது.
தற்போது இலங்கையில்
காணப்படும் இனவாத
அரசியல் கட்டமைப்புக்குள்
இருந்து தேசிய
நல்லிணக்கம், தேசிய
ஒருமைப்பாடு, இணக்கப்பாடு
போன்ற விடயங்களை
முன்னெடுப்பது
சிரமமான ஒரு காரியமாகவும்,
கல்லில் நார்
உரிப்பது போன்ற
செயலாகவும் காணப்படுகின்றது.
ஏனெனில் சிங்களத்
தரப்பிலும், தமிழ்த்
தரப்பிலும் உள்ள
இனவாத அரசியல்
கட்சித் தலைவர்கள்
பழிக்குப் பழி,
வன்மத்துக்கு
வன்மம், இனவாத
தேசியவாத வெறி
போன்ற விடயங்களையே
அறிக்கைகளிலும்
பேச்சிலும் வெளிப்படுத்தி
வருகிறார்கள்.
இலங்கையைப் பொறுத்தவரையில்,
ஜனநாயகத்தை யார்
பாவிக்கிறார்கள்
என்றால், இனவாத
சக்திகளும், ஊழல்வாதிகளும்,
அரசியல் அதிகாரத்தை
துஸ்பிரயோகம்
செய்கிறவர்களுமே
தமது சுயநலத்துக்காக,
இருப்புக்காக
தேசத்தைக் கொள்ளையடித்து
மக்களைத் தவறாக
வழி நடாத்துகிறார்கள்.
இத்தகைய செயற்பாட்டில்
சிங்களத் தரப்புக்கும்
தமிழ் தரப்புக்கும்
பெரிய வித்தியாசம்
இல்லை என்பதுடன்,
ஒன்றுக்கு ஒன்று
உதவியும் புரிகிறது.
இனவாதத்தைக்
கக்கும் தலைவர்களாகட்டும்,
அரசியல் கட்சிகளாகட்டும்,
முரண்பாடுகளை
வளர்ப்பதிலேயே
அக்கறை காட்டுகிறார்கள்.
தேசம் கண்ட
3 ஆயுதக் கிளர்ச்சிகளில்
எவ்வளவு வளங்களை
நாடு இழந்துள்ளது?
எவ்வளவு அப்பாவி
மக்களின் உயிரைப்
பலி எடுத்துள்ளது?
இந்த அழிவுகள்
எல்லாம் எதனால்
ஏற்பட்டது என்பதை
எந்த அரசியல்வாதியும்
ஆற அமர இருந்து
சிந்திக்கத் தயாராக
இல்லை. குறைந்தபட்சம்
கற்றறிந்த பாடங்கள்
ஊடாக சிபார்சு
செய்த இணக்கப்பாடு,
தேச நல்லிணக்கம்,
அரசியல் தீர்வு
போன்ற விடயங்கள்
கூட அரசியல்வாதிகளால்
ஊதாசீனப்படுத்தப்பட்டு
காலாவதியாகி வருவது
போல் தெரிகிறது.
புலிகளின் பினாமியாக,
முகவர்களாக, தமிழ்
மக்களின் நந்திக்கடல்
வரையான அழிவுகளுக்கு
காரணமாக இருந்தவர்கள்தான்,
உள்நாட்டிலும்
சர்வதேச அரங்கிலும்
பதவி, பண மற்றும்
ஊடக பலத்தால் முன்னணியிலும்
பலத்திலும் திகழ்கிறார்கள்.
அவர்களிடம்
பண பலமும், ஊடக
பலமும் இருப்பதால்,
சர்வதேச சமூகமும்
அவர்களிடம்தான்
அரசியல் தொடர்புகளை,
உறவுகளைத் தொடர்ந்து
நடாத்தி வருகிறது.
இது ஒரு தவறான
முன்னுதாரணம்
என்பதுடன், இலங்கைத்
தீவுக்குள் இனங்களுக்கிடையில்
நல்லிணக்கத்தையும்,
தேசிய நல்லிணக்கத்தையும்,
அரசியல் தீர்வை
எட்டுவதற்கும்
இத்தகைய அணுகுமுறை
உதவப் போவதில்லை
என்பதை உலகம் உணரத்
தவறிவிட்டது.
உண்மையிலேயே இனங்களுக்கிடையில்
ஐக்கியம், புரிந்துணர்வு,
நல்லிணக்கம், பன்முகத்தன்மை,
மதச்சார்பின்மை
அல்லது சர்வமத
ஐக்கியம் என்பன
ஏற்படுவதாக இருந்தால்,
இலங்கைத் தீவில்
அரசியலுக்கு வெளியே
சமூகத் தளத்தில்
புதிய அரசியல்
கலாச்சாரம் ஒன்று
உருவாக்கப்படல்
வேண்டும்.
இத்தகைய மாற்றங்களை
உருவாக்குவதற்குத்
தற்போதைய இனவாத
இனவாத அரசியல்
கட்டமைப்புக்குள்
இந்த மாற்றத்தைச்
செய்ய முடியாது.
ஏனெனில் சிங்களத்
தரப்பாகட்டும்,
தமிழ்த் தரப்பாகட்டும்
(Provocation) இனங்களுக்கிடையில்
கோபமூட்டும், இனவாத
உணர்வைத் தூண்டும்
அரசியலையே செய்து
வருகிறார்கள்.
பல்லின சமூகங்களுக்கிடையில்
புதிய சிந்தனை,
புதிய கலாச்சாரம்,
இணக்கப்பாடு, பல்கலாச்சாரம்,
பன்முகத்தன்மை,
சகிப்புத்தன்மை
என்பன உருவாக்கப்பட
வேண்டுமாக இருந்தால்,
யுத்தத்திற்கும்
அழிவுக்கும் காரணமானவர்கள்
சமூக அரங்கிலும்,
தேச அரங்கிலும்
ஓரங்கட்டப்பட்டு,
அனைத்துச் சமூகத்திலும்
உள்ள அறிஞர்கள்,
சிந்தனையாளர்கள்,
முற்போக்கான கலைஞர்கள்,
எழுத்தாளர்கள்
ஆகியோரை சமூகத்
தளத்திற்கும்,
தேசத் தளத்திற்கும்
கொண்டு வருவதன்
மூலமே ஓர் அர்த்தமுள்ள
மாற்றத்தை நோக்கித்
தேசத்தை நகர்த்தலாம்.
யுத்தம்
முடிந்து 3 வருடங்களுக்கு
மேலாகியும் தமிழ்
சமூகத்தில் எந்தவித
மாற்றத்தையும்
உருவாக்காதது
மிகவும் அவநம்பிக்கையையும்
அதிர்ச்சியையும்
தருகிறது.
அத்துடன் தமிழ்
சமூகத்தின் பின்னடைவுக்கும்
அழிவுக்கும் காரணமாக
இருந்த ஆர்.சம்பந்தன்
தலைமையிலான த.தே.கூவின்
13 பாராளுமன்றப்
பிரதிநிதிகளும்,
புலம்பெயர் நாடுகளில்
கனடிய தமிழ் காங்கிரஸ்,
உலகத் தமிழர் பேரவை
மற்றும் புலிப்
பினாமி ஊடகங்கள்,
அமைப்புகள் என்பனவும்
சர்வதேச அரங்கில்
புனிதர்கள் போல்
நடிப்பதும், மனித
உரிமை, போர்க்
குற்றம், பொறுப்புக்
கூறல், யுத்த விசாரணை
பற்றிக் கதைப்பதும்,
அறம் சார்ந்து
சிந்திப்போரை
அதிர்ச்சியில்
உறைய வைக்கிறது.
தமிழீழப் போரையும்,
இறுதி ஈழ யுத்தத்தையும்
ஆதரித்து உசுப்பேத்தின
தமிழ் சமூகத்தின்
பெரும்பான்மையான
தரப்பினருக்கு
ஐ.நாவின் இரகசிய
அறிக்கை பற்றியோ,
மனித உரிமை பற்றியோ
கதைப்பதற்கு எந்தவிதமான
தார்மீக உரிமையும்
கிடையாது.
இறுதி யுத்தம்
நடந்த காலத்தில்
நடந்த சம்பவங்களை
மீண்டும் வலியுறுத்த
வேண்டி உள்ளது.
மாவிலாறு அணையைப்
பூட்டியது, ஐரோப்பிய
யூனியன் போர்க்
கண்காணிப்புக்
குழுவை வெளியேற்றியது,
சமாதான காலத்தில்
அதிகளவிலான யுத்த
மீறல்களில் ஈடுபட்டது,
இறுதி யுத்தத்தைத்
தன்னிச்சையாக
ஆரம்பித்தது,
48 மணி நேர யுத்த
நிறுத்தத்தைப்
பயன்படுத்தாதது
என, இவைகள் அனைத்தையும்
புலிகளே செய்தார்கள்.
இதற்குப் பின்பலமாக
இருந்தவர்கள்
த.தே.கூட்டமைப்பினரும்,
அவர்களுக்கு ஆதரவான
ஊடகங்களும், அமைப்புகளும்தான்
என்பதை வரலாறு
பதிவு செய்திருக்கிறது.
மனிதர்கள்
யுத்த சூழ்நிலையிலோ
அல்லது சாதாரண
சூழ்நிலையிலோ
இறப்பது வேதனை
மிக்கது என்பது
மனிதத்தை நேசிக்கும்
அனைவருக்கும்
தெரிந்த விடயம்.
ஐ.நாவினுடைய கையாலாகாத்தனத்தை
மிகச் சரியான முறையில்
விமர்ச்சித்தவர்
புலிகளால் கொலை
செய்யப்பட்ட முன்னாள்
வெளிநாட்டு அமைச்சர்
லக்ஸ்மன் கதிர்காமர்
அவர்கள் ஆகும்.
அந்த அமைப்பு
மலேரியா, டெங்கு
போன்ற விடயங்களைக்
கையாளத்தான் தகுதி
வாய்ந்தது என அவர்
தெரிவித்திருந்தார்.
அந்த மனிதர்
அப்படி ஒரு விமர்சனத்தை
முன் வைத்ததிற்குக்
காரணம், ஐ.நா மேற்குலகின்
கைப்பாவையாக இருக்கிறது
என்று கருதியதால்தான்.
அது மட்டுமல்லாது
ஈராக் மீதான யுத்தத்தையும்,
உலகின் பிற தேசங்களில்
நடந்த அத்துமீறல்களையும்
ஐ.நா தடுக்கத்
தவறியதாலேயே அப்படி
ஒரு கருத்தை அவர்
முன் வைத்திருந்தார்.
ஈழப் போரையும்
அழிவையும் பொறுத்த
வரை, பொத்தாம்
பொதுவாக ஐ.நா சபையையோ,
இந்தியாவையோ, இலங்கையையோ,
உலகத்தையோ பொறுப்புக்
கூறும்படி விமர்சிக்க
முடியாது. இந்த விடயத்தில்
முதன்மையான காரணிகள்
புலிகள், த.தே.கூ,
புலம்பெயர் தமிழ்
அமைப்புகள், தமிழ்
ஊடகங்கள் மற்றும்
ஆன்மீக நிறுவனங்கள்தான்.
அவைதான் தமிழ்
சமூகத்திற்குப்
பொறுப்புக் கூற
வேண்டியவர்கள்.
ஏனெனில் தமிழ்
ஊடகங்களும், பெரும்பாலான
தமிழ் மக்களும்,
அலிபாபாவும்
22 திருடர்களும்
(அந்த நேரத்தில்
இருந்த த.தே.கூ
பாராளுமன்ற உறுப்பினர்கள்)
போர் நடந்த காலத்தில்
அழிவு தரக்கூடிய
யுத்தத்தை போரியல்
வரலாறு என்றும்,
போர்க் கலை என்றும்
கூறியதுடன், பொறுப்பற்ற
விதத்திலும் நடந்து
கொண்டார்கள்.
தமிழ் சமூகத்தின்
பெரும்பாலானவர்கள்
அறிவுபூர்வமாகச்
சிந்திப்பதில்லை.
படித்தவர்கள்
முதல் பாமரத் தமிழன்
வரை உணர்ச்சி அடிப்படையிலேயே
சிந்திக்கிறார்கள்.
அதனால்தான்
இவ்வளவு பெரிய
மானிட அழிவு, சொத்து
இழப்பு ஏற்பட்டும்
இனப் பிரச்சினைக்கு
எதையும் தீர்வாகப்
பெற முடியாமல்
போனது.
தமிழ் சமூகத்தை
வெறும் உணர்ச்சிப்
பாதையில் அழிவு
ஏற்படுத்தும்
விதமாக வழி நடத்தியவர்கள்
தமிழ் காங்கிரஸ்,
தமிழரசுக் கட்சி,
தமிழர் விடுதலைக்
கூட்டணி, புலிகள்,
தமிழ் தேசியக்
கூட்டமைப்பு, புலம்பெயர்
புலி சார்புத்
தமிழ் அமைப்புகள்
என்பவையாகும்.
தொடர்ந்தும்
தமிழ் சமூகத்தை
அழிவுப் பாதையிலேயே
அவர்கள் வழி நடாத்திக்
கொண்டிருக்கிறார்கள்.
இணக்கப்பாடு, நல்லெண்ணம்,
புனர்வாழ்வு, தேச
ஒருமைப்பாடு, தேசப்பற்று,
பல் கலாச்சாரம்
போன்ற விடயங்களைச்
சிந்திப்பதற்கும்,
அதன் அடிப்படையில்
தேசிய நீரோட்டத்தில்
மக்களை வளர்த்தெடுப்பதற்கும்,
நல்ல பார்வை உள்ள,
அறிவுபூர்வமாகச்
சிந்திக்கக்கூடிய
அரசியல் தலைமை
வேண்டும். தற்போது
உள்ள த.தே.கூ கட்சியினால்
அந்த நிலையை எப்போதும்
எட்ட முடியாது
என்பதைப் புரிந்து
கொண்டு அதற்கான
ஒரு மாற்றத்தை
உருவாக்க வேண்டும்.
உலக நீரோட்டத்தில்
நல்ல தலைவர்களாக,
மாவீரர்களாக ஏற்கப்பட்டவர்கள்,
அங்கீகரிக்கப்பட்டவர்கள்
காந்தி, மார்டின்
லூதர் கிங், நெல்சன்
மண்டேலா போன்றவர்கள்.
ஏனெனில் அவர்களது
சிந்தனைகள், அரசியல்
செயல்பாடுகள்,
தியாகங்கள், அர்ப்பணிப்புகள்
வீண் போகவில்லை
என்பதுடன், அவர்கள்
எந்தச் சமூகத்திற்கும்
அச்சுறுத்தலை
ஏற்படுத்தாமல்,
நல்லெண்ண, இணக்கப்பாடு,
அகிம்சை வழிகளில்
தம்மை ஈடுபடுத்தியதுடன்,
வரலாற்றுச் சுவடுகளிலும்
தமது பெயரை ஆழப்பதித்துள்ளார்கள்.
நமது தமிழ் சமூகமோ
கோழைகளையும், அழிவையும்,
கொலைகளையும் உருவாக்கி,
சக மனிதனின் கருத்து
உரிமையையும், வாழ்வு
உரிமையையும் பறித்த,
ஒட்டு மொத்த சமூகத்தையும்
துவம்சம் செய்த
அமைப்பையும் அதன்
தலைவனையும் ;மாவீரர்கள்
எனக் கொண்டாடுகிறது,
புகழ்கிறது. இது ஒரு தவறான
முன்னுதாரணமாகவே
வரலாற்றில் பதியப்படும்.
கடந்த 30 வருட
கால யுத்தத்தில்
இறந்தவர்களுக்குத்
துக்கம் அனுஸ்டிப்பது
தேவையான ஒன்றுதான்.
அதை யாரும்
மறுப்பதற்கில்லை.
அதற்கு நவம்பர்
27 பொருத்தமான ஒரு
நாள் அல்ல. இந்த
நாளை நினைவு கூருதல்
புலிப் பாசிச அமைப்பிலிருந்து
மரணித்தவர்களையும்,
அதன் தலைவனின்
பிறந்த நாளையும்
நினைவு கூருவதாகவே
கருதப்படும். அத்துடன் இறந்தவர்களை
நினைவு கூரும்போது,
சக மனிதருக்கும்
சமூகத்திற்கும்
அச்சுறுத்தல்
ஏற்படுத்துவதைத்
தவிர்த்து அமைதியான
முறையில் நினைவு
கூரல் வேண்டும்.
இதற்கு மாறாக,
அறிவுபூர்வமாகப்
பார்த்தால், அனைத்து
வன்முறைகளுக்கும்
அழிவுகளுக்கும்
வித்திட்ட புலிகளால்
முதலாவது அரசியல்
படுகொலையாக நிகழ்த்தப்பட்ட
யாழ்.மாநகர முதல்வர்
அல்பிரட் துரையப்பா
அவர்களது கொலைத்
தினத்தையே தமிழ்
சமூகத்தின் தேசிய
துக்க நாளாக அறிவிக்க
வேண்டும்.
புலிகள் தேசிய
இன ஒடுக்குமுறையை
எதிர்கொள்ளவெனவும்,
தீர்வைப் பெறுவதற்குமெனவும்
சொல்லிக் கொண்டு,
தமது எதேச்சாதிகாரத்தை
நிறுவுவதற்கு
வன்முறை, கொலை,
அச்சுறுத்தல்
போன்ற அழிவுகரமான
பாதையையே நாடினார்கள்.
இத்தகைய அழிவுகரமான
பாதையைத் தவறு
என விமர்ச்சித்தவர்களுக்கு
புலிகளால் மரண
தண்டனை வழங்கப்பட்டது.
இந்த அநீதியை
பெரும்பான்மையான
தமிழர்கள் தட்டிக்
கேட்காது மௌனம்
காத்தார்கள்.
பாகிஸ்தானில்
தலிபான் இயக்கத்தின்
அநீதிகளையும்,
அடக்குமுறைகளையும்
தட்டிக்கேட்டு
தலிபான்களின்
துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்காகிய
14 வயது Malala Yousafzai
என்ற சிறுமியிடம்
எமது தமிழ் சமூகம்
நிறையப் படிக்க
வேண்டியுள்ளது.
அந்தச் சிறுமி
கல்வி அனைவருக்குமானது,
அதாவது ஆண் - பெண்
என்ற வித்தியாசம்
இன்றி அனைவருக்குமானது
என்று அஞ்சாது
குரல் கொடுத்து
தலிபான்களின்
கோபாவேசத்துக்கு
இலக்கானாள். அதனால் அந்தச்
சின்னஞ்சிறு துளிரை
அவர்கள் சுட்டுப்
பொசுக்க முயன்றார்கள்.
இஸ்லாமிய மத
அடிப்படைவாதிகளான
அந்தத் தலிபான்களுக்கும்,
இனவெறி கொண்ட புலிகளுக்கும்
பெரிய வித்தியாசம்
எதுவும் இல்லை.
அவர்கள் மதத்தைக்
கருவியாக பயன்படுத்தி
அனைத்து மக்களையும்
அடிமைகளாக நடத்துகிறார்கள்.
புலிகள் இனம்,
மொழி என்பனவற்றை
கருவியாகக் கொண்டு
தமிழ் மக்கள் அனைவரையும்
அச்சுறுத்தி அடிமைகளாக
நடத்தினார்கள்.
இரத்தமின்றி, யுத்தமின்றி,
அழிவுகள் இன்றி,
துணிவுடனும் விவேகத்துடனும்
செயற்பட்டதினால்
அந்த பாகிஸ்தானியச்
சிறுமி, உலகத்தின்
ஆதரவையும் பாராட்டுதலையும்
பெற்றதுடன், நோபல்
சமாதானப் பரிசுக்கும்
பரிந்துரைக்கப்பட்டிருக்கிறாள்.
இந்த 14 வயதுச்
சிறுமியிடம் இன்று
புலி அடிவருடிகளால்
தவறாக வழி நடாத்தப்படும்
யாழ்.பல்கலைக்கழக
மாணவர்கள் கூட
நிறையக் கற்றுக்
கொள்ள வேண்டும்.
ஆனால் நமது சமூகமோ
புலிகள் சிறு பெண்களையும்,
பையன்களையும்
பலவந்தமாகக் கடத்திச்
சென்று தமது படையணிகளில்
இணைத்துப் போர்
முனைக்கு அனுப்பி
அவர்களைப் பலிக்கடாக்கள்
ஆக்கியபோது, அவர்கள்
புறநானூறு கண்ட
மறவர்கள் எனப்
புகழாரம் சூட்டி
மெய் சிலிர்த்து
நின்றார்கள்! தற்போது
இனப் பிரச்சினை
தீர்வுக்கு முன்பாக
நம்மவர்களுக்கு
முதலாவதாகத் தேவைப்படுவது
கண்ணியமாக வாழ்வது
எப்படி என்ற பயிற்சி
(Moral Revolution) ஆகும்.
இணக்கப்பாடு அல்லது
தேசிய நல்லிணக்க
அரசியலை முன்னெடுப்பதற்கு
அறம் சார்ந்த,
பன்முக அடிப்படையிலான
முற்போக்காளர்கள்,
ஜனநாயகவாதிகள்,
சிந்தனையாளர்கள்,
பொறுப்புள்ள மனிதர்கள்
தேவையாக இருக்கின்றது.
ஆனால் இந்தத்
தகுதி த.வி.கூவிடம்
அறவே இல்லை.
த.தே.கூ தலைவர்
ஆர்.சம்பந்தன்
அண்மையில் ஆசிய
மனித உரிமை அமைப்பிடம்
பேசும்போது, இறுதி
யுத்த விசாரணை,
பொறுப்புக் கூறல்
என்பன நடைபெற்றால்தான்,
நல்லிணக்கம் உருவாக
முடியும் எனக்
கூறியிருந்தார்.
த.தே.கூ பொறுத்தவரைக்கும்
அதிலுள்ள பிற்போக்கான,
முட்டாள்தனம்
நிறைந்த 13 பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கும்
யுத்தக் குற்றம்,
பொறுப்புக் கூறல்,
மனித உரிமை போன்ற
விடயங்களை உச்சரிப்பதற்கு
எந்தவிதமான தகுதியும்
தார்மீக உரிமையும்
கிடையாது.
த.தே.கூவில் இருக்கும்
சம்பந்தன், சுரேஸ்
பிரேமச்சந்திரன்,
செல்வம் அடைக்கலநாதன்
போன்றோர், தமது
தலைவர்களான அமிர்தலிங்கம்,
பத்மநாபா, சிறீ
சபாரத்தினம் ஆகியோரைப்
புலிகள் கொன்ற
போதும், அரசியல்
தீர்வுத் திட்டத்தை
வரைந்த நீலன் திருச்செல்வத்தைக்
கொன்ற போதும்,
மௌனம் காத்ததுடன்,
புலிகள் அழிந்த
பின்னர் கூட இன்றுவரை
மரணித்த தமது தலைவர்களுக்கு
ஒரு இரங்கல் நிகழ்வைக்கூட
நடத்தாத, ஒரு சொட்டுக்
கண்ணீரைச் சிந்தாத
வர்களாக இருந்து
கொண்டு, வாழ்வின்
பொறுப்புப் பற்றிக்
கதைப்பது வேடிக்கையாக
இருக்கிறது.
யுத்தத்திற்குப்
பின்பான நிலவரங்களை
அவதானிக்கும்
போது, ஒரு விடயத்தைத்
தமிழ் சமூகத்திற்கு
நினைவூட்ட வேண்டியுள்ளது.
அண்மையில்
துருக்கியின்
வெளிநாட்டமைச்சர்
கனடாவுக்கு வந்தபோது,
1915இல் நடைபெற்ற
ஆர்மேனிய மக்கள்
படுகொலை பற்றி
கனடியப் பிரதமர்
ஸ்ரீபன் கார்பரால்
கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அது
ஒரு உள்நாட்டு
விவகாரம் என்றும்,
தற்போது அதைப்பற்றிப்
பேசுவது பொருத்தமற்றது
என்றும், இப்போது Reconciliation பற்றிப்
பேசுவதே பொருத்தமாக
இருக்கும் என்றும்
தெரிவித்தார்.
அத்துடன் அவர்
கனடிய அரசிடம்
ஓரு கேள்வியைக்
கேட்டார். அதாவது கனடிய
அரசு இந்நாட்டின்
உண்மையான உரித்தாளர்களான
பூர்வகுடி மக்களை
எப்படி நடத்துகிறது?
எவ்வாறு கையாள்கிறது?
என்று கேட்டால்,
உங்கள் பிரதிபலிப்பு
எப்படி இருக்கும்
என்று வினவினார்.
அத்துடன் அது
உள்நாட்டு விவகாரம்,
அதில் தலையிட நாம்
விரும்பவில்லை
எனவும் கூறியிருந்தார்.
ஆக, இந்த வகையான
உதாரணங்கள் இலங்கைக்கும்
பொருந்தும். போர் முடிந்த
பிற்பாடு, போர்
ஏன் நடந்தது?
என ஆராய்ந்தால்,
சமத்துவமின்மை,
வறுமை, சமூக நீதி
பேணப்படாமை, சிறுபான்மை
இன மக்களின் உரிமைகள்
நலன்கள் உறுதிப்படுத்தப்படாமை
போன்ற காரணங்களைக்
காண முடியும்.
இதனால் தேசம்
எத்தனை பெரிய விலையைக்
கொடுத்துள்ளது?
இத்தகைய விலைக்
கொடுப்புக்குப்
பின்னாலும், தமிழ்
சமூகம் சார்ந்த
தேசியவாத, இனவாத,
புலிவாத அமைப்புக்கள்,
இணக்கப்பாடு மற்றும்
நல்லெண்ண அரசியலை
முன்னெடுப்பதாகத்
தெரியவில்லை.
தமிழ் சமூகத்திற்கு
விடிவு, விமோசனம்
தேவையாக இருந்தால்,
சம்பந்தன் தலைமையிலான
த.தே.கூ அரசியலில்
இருந்து முற்றுமுழுதாக
ஓரம் கட்டப்பட
வேண்டும். இல்லையேல் இந்த
ஜென்மத்தில் தமிழ்
சமூகத்திற்கு
விமோசனம் கிடையாது.
இணக்கப்பாடு,
நல்லெண்ணம் போன்ற
விடயங்களை முன்னெடுப்பதற்கு
சுயநலமற்ற, இனவாதமற்ற,
முதிர்ச்சியான
அரசியல் தலைமை
வேண்டும். தமிழ் மக்களிடம்
இருப்பதோ பிழைப்புவாத
அரசியல் கட்சிகள்.
இந்த சுயநல
பிழைப்புவாதக்
கட்சிகளுக்கு,
மறுபக்கத்தில்
பார்த்தால், மகிந்த
அரசுதான் தீனி
போட்டு வளர்க்கிறது.
இதற்கு மாறாகத்
தமிழ் சமூகத்தில்
நிதானமாகச் சிந்தித்துச்
செயற்படும் பாராளுமன்ற
பிரதிக் குழுக்களின்
தலைவர் சந்திரகுமார்
போன்றவர்கள் பன்முக
சிந்தனையுள்ள
இளைஞர்களை உருவாக்குவதன்
மூலமே, இலங்கையில்
நம்மவர்கள் தலைநிமிர்ந்து
நிற்க முடியும்.
த.தே.கூவின் முட்டாள்தனமான
13 பாராளுமன்ற உறுப்பினர்கள்
சாதிக்க முடியததை
இந்த மனிதர் (சந்திரகுமார்)
தனது உறுதியான
கொள்கைகளாலும்,
மென்மையான பேச்சாலும்
லிபரல் (தாராள)
தனமான சிந்தனையாலும்
பல விடயங்களை அடக்கமாக
எளிமையாகச் சாதித்துக்
கொண்டிருக்கிறார்.
இவர்கள் போன்ற
மனிதர்களையே த.வி.கூக்கு
மாற்றீடாக இலங்கை
அரசும், தமிழ்
சமூகமும் ஊக்குவிக்க
வேண்டும்.
நமது சமூகத்திற்கு
எதிரி யார் என்று
பார்த்தால், நம்மவர்களே
எதிரிகளாக இருக்கிறார்கள்.
புலிகளது ஆதரவு
அமைப்புகளையும்,
தமிழ் இனவாதத்
தேசியத் தலைமைகளையும்
யாராலும் திருப்பிப்படுத்த
முடியாது. இவர்கள் அடிப்படைவாத
எண்ணங்களில், உணர்ச்சிகளில்
ஊறினவர்கள். இவர்களால் அந்த
வட்டத்தைவிட்டு
வெளியே வர முடியாது.
இதற்கான காரணம்
கடந்த 60 வருடங்களுக்கு
மேலாக இந்த இனவாதத்
தமிழ்த் தலைமைகள்,
துரோகி, மாவீரன்,
தியாகி எனும்
ஒற்றையடிப் பாதையிலேயே
வழி நடத்தப்பட்டு
வந்துள்ளார்கள்.
புலித் தேசியவாத
அன்பர்கள் ஈழத்
தமிழர்களுக்குத்
துரோகிப் பட்டம்
கொடுத்து சலித்துப்போய்
இறுதியாக இசைஞானி
இளையராஜா அவர்களுக்குத்
துரோகி பட்டம்
வழங்கியுள்ளார்கள்.
அதற்கான காரணம்,
இவ்வருட (2012) நவம்பர்
மாதத்தில் அவரது
ஒரு இசை நிகழ்ச்சியை
சிலர் கனடாவின்
ரொறன்ரோ நகரில்
ஏற்பாடு செய்ததினால்
ஆகும். பின்பு
அந்த நிகழ்ச்சி
வட அமெரிக்காவைத்
தாக்கிய சன்டி
சூறாவளி காரணமாக
இரத்துச் செய்யப்பட்டது.
இத்தனைக்கும்
இந்த மனிதர் செய்த
தவறென்ன? பண்ணைபுரத்தில்
இருந்து இங்கிலாந்து
வரை, சிம்பனி (How
it name it ) என்ற இசை
அல்ப வெளியீடு
மூலம் தமிழின்
பெருமையை உலகறியச்
செய்ததுதான்!
கொலைகளையும்,
அழிவுகளையும்
வியாபாரம் ஆக்கியவர்களுக்கு
இசைஞானியின் பெறுமதி
தெரியாமல் போனதில்
வியப்பில்லை.
இதைத்தான்
கூறுவார்களோ,
கழுதைக்குத் தெரியுமா,
கற்பூர வாசனை
என்று? ஹிட்லருக்கு,
முசோலினிக்கு
பொல்பொட்டுக்கு
சற்றும் குறைவில்லாத
பிரபாகரனை மாவீரன்
என்று வாழ்த்தும்,
தார்மீகம் (Moral) பற்றிச்
சிந்திக்காது,
எந்தக் கேள்வியையும்
எழுப்பாது வாழும்
மக்கள் பற்றி நினைக்கும்
போது வெட்கமாகவும்,
வேதனையாகவும்,
அதிர்ச்சியாகவும்
இருக்கிறது.
சமூக அரசியலினதும்,
தேசிய அரசியலினதும்,
சர்வதேச அரசியலினதும்
இறுதியில் நன்மை
விளையும் (Optimism என்ற
எதிர்பார்ப்பு
தவிர்க்க முடியாத
ஒன்று. ஆனால் தமிழ்த்
தேசியம் அதற்குப்
பழக்கப்படாத ஒன்று.
அதற்குத் தெரிந்ததெல்லாம்
எதிர்ப்பு, இனவாதம்,
சுயநலம், முரண்பாடு,
தூய்மைவாதம் பற்றிப்
பேசுதல், ஆணவம்
இவைகள்தான். இவைகள்
மேலும் பல முள்ளிவாய்க்கால்களை
உருவாக்க உதவுமே
தவிர, வேறொன்றுக்கும்
உதவப் போவதில்லை.
மனிதர்கள்
எப்போதும் மத்திம,
கடந்தகாலப் புனைவுகளிலும்,
சரித்திரங்களிலுமே
கிறங்கிப்போய்
உள்ளார்கள். அதனால்தான்,
இலங்கை ஆட்சியாளர்கள்
மகாவம்சக் கனவிலும்,
ஆசையிலும் முழு
இலங்கையையும்
அதிகாரம் பண்ண
நினைக்கிறார்கள்.
அதுபோலவே தமிழ்த்
தேசியவாதமும்
ஆண்ட பரம்பரை
மீண்டும் உருமுறை
ஆள நினைப்பதில்
தவறென்ன? என்று
முக்கால்வாசி
இலங்கையை தமிழ்
ஈழமாக கோரி நிற்கிறது.
புத்த பெருமானின்
ஒரு நிதர்சனமான
கூற்று, ஆசையே
அனைத்து துன்பத்திற்கும்
அழிவுக்கும் காரணம்
என்பதாகும். இந்த
உண்மையில் இருந்து
இலங்கைத் தீவில்
உள்ள அனைத்து அரசியல்
தலைமைகளும், குறிப்பாக
சிங்களப் பேரினவாதிகளும்,
தமிழ் இனவாதிகளும்
ஏதாவது பாடங்கள்
கற்றுக் கொண்டால்தான்,
நமது நாட்டின்
நாளைய தலைமுறையாவது
தலை நிமிர்ந்து
நிற்க முடியும்.
(நன்றி: தேனி
இணையம்)