பதவிப்பிரமாண
அரசியல்
(எம்.எஸ்.எம்.ஐயூப்)
இலங்கை விடயத்தில்
தமிழ் நாட்டுத்
தலைவர்கள் விடுத்த
முதலாவது கோரிக்கையை
புதிய இந்திய பிரதமராகப்
போகும் நரேந்திர
மோடி நிராகரித்துள்ளார்.
மோடி, பிரதமராக
சத்தியப் பிரமாணம்
செய்யும் வைபவத்தில்
இலங்கை ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ
கலந்துகொள்வதை
தமிழ் நாட்டுத்
தலைவர்களான முதலமைச்சர்
ஜெயலலிதா, எதிர்க்
கட்சித் தலைவர்
மு.கருணாநிதி மற்றும்
மோடியின் பாரதீய
ஜனதாக் கட்சியோடு
கூட்டமைப்பு அமைத்து
போட்டியிட்ட வைகோ
ஆகியோர் எதிர்த்த
போதிலும் பா.ஜ.க
அந்த எதிர்ப்பை
ஏற்கவில்லை. சந்தோஷமான
நிகழ்வொன்றின்
போது அயலவர்களை
அழைப்பது தான்
இங்கு நடந்துள்ளது
என்றும் அதனை தமிழ்
நாட்டுத் தலைவர்கள்
புரிந்து கொள்வார்கள்
என்றும் பா.ஜ.க.
பேச்சாளர் நிர்மலா
சீதாராமன் கூறியிருக்கிறார்.
தமது பதவிப் பிரமான
வைபவத்தில் கலந்துகொள்ளுமாறு
மோடி, தெற்காசிய
பிராந்திய ஒத்துழைப்பு
அமைப்பின் (சார்க்
அமைப்பின்) சகல
நாடுகளினதும்
தலைவர்களுக்கு
அழைப்பு விடுத்துள்ளார்.
உண்மையிலேயே இதில்
அசாதாரணத் தன்மை
காண்பதாக இருந்தால்
காண வேண்டியது
ராஜபக்ஷவுக்கான
அழைப்பில் அல்ல.
பாகிஸ்தான் பிரதமர்
நவாஸ் ஷரீபுக்கு
விடுக்கப்பட்ட
அழைப்பே அசாதாரணமான
அழைப்பாக கருதப்படல்
வேண்டும். ஏனெனில்
இந்தியாவும் பாகிஸ்தானும்
நட்பு நாடுகளாக
மரபு ரீதியாக கருதப்படுவதில்லை.
உண்மையிலேயே
இந்த அழைப்பை விடுக்கும்
போது மோடியும்
பாகிஸ்தான் பிரதமரைத்
தான் மனதில் வைத்துக்கொண்டு
அழைப்பு விடுத்திருப்பார்.
அதேவேளை, ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ,
மோடியின் வைபவத்தில்
கலந்துகொள்ளாவிட்டால்
அது அந்த வைபவத்தில்
குறையாக விளங்கும்
என்று கூற முடியாது.
ஆனால் நவாஸ்
ஷரீப் கலந்துகொள்ளாவிட்டால்
அது அங்கு தெளிவாக
தெரியும் குறைப்பாடாக
அமையும்.
பா.ஜ.க.வின் இந்துத்துவக்
கொள்கையை கவனத்தில்
கொள்ளும் போது
பாகிஸ்தானும்
உள்ளடங்கும் வகையில்
மோடி, சார்க் நாடுகளின்
தலைவர்களை அழைப்பதே
வித்தியாசமான
விடயமாகும். தமிழக தலைவர்கள்
இலங்கைத் தலைவர்களுடன்
முரண்படுவதை விட
பா.ஜ.க.வினர் பாகிஸ்தான்
தொடர்பில் முரண்படுகிறார்கள்
என்பது எல்லோரும்
அறிந்த விடயமாகும்.
எனவே அந்தப் பிரச்சினைகளை
ஒரு புறம் வைத்துவிட்டு
சகல சார்க் நாடுகளினதும்
தலைவர்களை பா.ஜ.க.
அழைக்கும் போது
இந்துத் தீவிரவாதக்
கட்சி என்று தமக்கு
இருக்கும் அவப்பெயரை
நீக்கிக்கொள்ள
அக்கட்சி முயற்சிக்கிறதா
என்ற கேள்வியும்
எழுகிறது. பா.ஜ.க. பதவிக்கு
வந்த முதன் முறை
இதுவல்ல. 1998ஆம் ஆண்டு
அடல் பிஹாரி வாஜ்பாயின்
தலைமையிலும் அக்கட்சி
பதவிக்கு வந்தது.
அப்போதும்
அக்கட்சியின்
தலைவர்கள் இது
போன்று பாகிஸ்தான்
விடயத்தில் சுமுகமான
கொள்கையொன்றை
கடைப்பிடிக்க
முற்பட்டனர்.
வாஜ்பாய், பாகிஸ்தானுக்கு
பஸ் சேவையொன்றை
ஆரம்பித்து முதலாவது
பஸ்ஸில் தாமும்
பாகிஸ்தானுக்குச்
சென்று பாகிஸ்தான்
விடயத்திலான இந்திய
நிலைப்பாட்டை
மாற்ற முயற்சி
செய்தார்.
எனவே
இலங்கை ஜனாதிபதிக்கு
அழைப்பு விடுப்பதானது
பாரியதோர் திட்டத்தின்
மிகச் சிறியதொர்
விடயமாகும்.
தமிழ் நாட்டுத்
தலைவர்கள், இலங்கைத்
தலைவர்களுடன்
முரண்பட்டுக்கொண்டு
இருந்த போதிலும்
இந்திய மத்திய
அரசாங்கத்திற்கோ
அல்லது மத்திய
அரசாங்கத்தின்
புதிய ஆளும் கட்சியான
பா.ஜ.க.வுக்கோ இலங்கை
அரசாங்கத்துடன்
அவ்வளவு பெரிய
பிரச்சினைகள்
இல்லை. தமது
தேர்தல் பிரசாரத்தின்
போதும் மோடி, பாகிஸ்தான்
மற்றும் சீனாவை
சாடி பேசினாரேயல்லாமல்
இலங்கையைப் பற்றி
ஒரு வார்த்தையேனும்
மோசமாக பேசியதில்லை.
இப்போது மோடியின்
சத்தியப்பிரமாண
வைபவத்தைப் பற்றி
இலங்கையிலும்
ஒரு சர்ச்சை உருவாகியிருக்கிறது.
தமது பதவிப்பிரமாண
வைபவத்தில் கலந்துகொள்ளுமாறு
மோடி விடுத்த அழைப்பை
ஏற்ற ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ,
அதற்காக தம்மோடு
இணைந்துகொள்ளுமாறு
வட மாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரனுக்கும்
அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் முதலமைச்சர்
அதனை நிராகரித்துள்ளார்.
மற்றவர்களுடன்
நல்வுறவை வளர்த்துக்கொள்வதில்
மஹிந்த ராஜபக்ஷ
வல்லவர் என்றே
கருதப்படுகிறது. எனவே
அவர் இதுபோன்றதோர்
அழைப்பை விடுப்பதில்
ஆச்சரியப்படத்
தேவையில்லை. அதற்காக அவர்
பலரது பிறந்த நாட்களையும்
இது போன்ற முக்கிய
நிகழ்வுகளையும்
பாவிப்பதும் உண்டு.
அண்மையில்
அவர் மக்கள் விடுதலை
முன்னணியின் தலைவர்
அனுர குமார திஸாநாயக்கவுக்கு
அவரது பிறந்த நாளில்
தொலைபேசியில்
அழைத்துள்ளார்.
ம.வி.மு. தலைவர் அதற்கு
பதிலளிக்கவில்லையாம்.
உண்மையிலேயே ஜனாதிபதி
தொலைபேசியில்
தம்மை அழைத்தது
தம்மை வாழ்த்த
அல்ல என்றும் தம்மை
வாழ்த்திவிட்டு
அதனை ஊடகங்களுக்கு
அறிவித்து 'புள்ளிகளை'
சேகரிப்பதற்காகவே
என திஸாநாயக்க
பின்னர் கூட்டம்
ஒன்றில் பேசும்
போது கூறியிருந்தார்.
வட மாகாண முதலமைச்சருக்கான
ஜனாதிபதியின்
இந்த அழைப்பில்
உள்ள ஒரு முக்கியத்துவம்
என்னவென்றால்
ஜனாதிபதி, வெளிவிவகார
அமைச்சர் பேராசிரியர்
ஜீ.எல்.பீரிஸ்
மூலமாகவே முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரனுக்கு
அழைப்பு விடுத்துள்ளார்.
இது விந்தையானது.
வெளிநாட்டலுவல்களுக்கு
பொறுப்பான அமைச்சர்
மூலம் வட மாகாண
முதலமைச்சருக்கு
அழைப்பு விடுப்பதற்கு
வட மாகாணம் என்ன
வெளிநாடொன்றா?
ஜனாதிபதியின்
அழைப்பை ஏற்பதானது
இலங்கையின் மத்திய
அரசாங்கத்திற்கும்
வட மாகாண சபைக்கும்
இடையே சிறந்த உறவு
இருப்பதாக உலகுக்கு
தவறானதோர் கருத்தை
கொடுத்துவிடும்
என்பதால் தாம்
அந்த அழைப்பை ஏற்பதில்லை
என்றே வடமாகாண
முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
இந்த பதில்
சற்று சர்ச்சைக்குரியதாகும்.
இலங்கையின்
மத்திய அரசாங்கத்திற்கும்
வட மாகாண சபைக்கும்
இடையே சிறந்த உறவு
இருப்பதாக உலகக்கு
காட்டிக்கொள்வதால்
ஏற்படப்போகும்
நட்டம் என்ன?
அல்லது மத்திய
அரசாங்கத்திற்கும்
வட மாகாண சபைக்கும்
இடையே சிறந்த உறவு
இல்லை என்று காட்டிக்கொள்வதில்
ஏற்படப் போகும்
நன்மை என்ன? என்று ஒருவர்
கேட்கலாம்.ஆனால்,
தற்போதைய நிலையில்
முதலமைச்சர் இந்த
முடிவை எடுக்க
நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்
என்றே தோன்றுகிறது.
தமது மாகாண நிர்வாகத்தை
சுமூகமாக நடத்திக்கொண்டு
போகும் வகையில்
சில அதிகாரிகளை
மாற்றுவது போன்ற
சிறிய விடயங்களிலும்
ஒத்துழைப்பு வழங்க
ஜனாதிபதி மறுக்கும்
நிலையில் வட மாகாண
சபையோடு தாம் சுமூகமான
உறவை கொண்டுள்ளதாக
உலகுக்கு காட்டிக்கொள்ளவே
இந்த அழைப்பின்
மூலம் ஜனாதிபதி
முயற்சிக்கிறார்
என்று முதலமைச்சர்
நினைப்பது நியாயாமே.
கடந்த காலத்தில்
அரசாங்கம் தம்மால்
வழங்கக்கூடிய
ஒத்துழைப்பை வட
மாகாண சபைக்கு
வழங்கியிருந்தால்
முதலமைச்சர் கட்டாயம்
ஜனாதிபதியின்
இந்த அழைப்பை ஏற்கத்தான்
வேண்டும். அவ்வாறு
ஒத்துழைப்பு கிடைத்திருந்தாலும்
அவர் ஜனாதிபதி
முன்னிலையில்
முதலமைச்சராக
பதவிப்பிரமாணம்
செய்துகொண்ட போது
எதிர்த்ததைப்
போல் வட பகுதியில்
சில தீவிரவாதிகள்
இதனையும் எதிர்க்கலாம்.
ஆனால் அரசாங்கம்
மாகாண சபைக்கு
அவசியமான ஒத்துழைப்பை
வழங்கியிருந்தால்
அவ்வாறான எதிர்ப்புகளை
மதியாமல் முதலமைச்சர்
நடந்து கொண்டிருக்கலாம்.
எனவே இது தமக்கு
அவசியமான குறைந்தபட்ச
ஒத்துழைப்பையாவது
வழங்காத அரசாங்கத்திற்கு
தமது எதிர்ப்பை
தெரிவிக்க மாகாண
சபைக்கும் முதலமைச்சருக்கும்
கிடைத்த அரிய சந்தர்ப்பமாக
முதலமைச்சர் நினைக்கிறார்
போலும்.
அண்மைக் காலமாக
வட பகுதியில் அரசியல்வாதிகளுக்கும்
அரசாங்கத்திற்கும்
இடையில் மட்டுமன்றி
வட பகுதியில் சாதாரண
மக்களுக்கும்
அரசாங்கத்திற்கும்
இடையிலும் உறவு
மோசமாகி வந்துள்ளது.
அதிகார பரவலாக்கல்
தொடர்பான விடயங்கள்,
பொது வாழ்க்கையில்
தொடரும் இராணுவத்தின்
தலையீடுகள், காணி
அபகரிப்பு மற்றும்
போரில் இறந்தவர்களை
நினைவுகூரல் போன்ற
பல விடயங்கள் அதற்குக்
காரணமாக அமைந்தன.
அவற்றின் போது
யார் சரி, யார்
பிழை என்பது ஒரு
புறமிருக்க, இவற்றால்
வட பகுதியில் சாதாரண
மக்களுக்கும்
அரசாங்கத்திற்கும்
இடையிலான உறவு
மேலும் மோசமாகியது
என்பதே உண்மையாகும்.
இந்த நிலையில்
தாம் ஜனாதிபதியின்
அழைப்பை ஏற்று
மோடியின் பதவிப்பிரமாண
வைபவத்தில் கலந்துகொண்டால்
அது தம்மை மக்களிடமிருந்து
அந்நியப்படுத்திவிடலாம்
என விக்னேஸ்வரன்
நினைத்தால் அதுவும்
நியாயமே. சிலவேளை
அரசாங்கத்தின்
நோக்கங்களில்
ஒன்றாக அவ்வாறு
அவரை அந்நியப்படுத்துவதும்
இருந்திருக்கலாம்.
போர் முடிவடைந்தவுடன்
இருந்ததைப் பார்க்கிலும்
இப்போது வட பகுதியில்
தமிழ் அரசியலில்
பாரிய மாற்றங்கள்
ஏற்பட்டு வருவதை
அவதானிக்கலாம்.
குறிப்பாக
அப்போது இருந்ததைப்
பார்க்கிலும்
இப்போது வட பகுதியில்
தீவிரவாதம் மீண்டும்
வளர்ந்துள்ளது.
அரசியல் காரணங்களுக்காகவும்
தேர்தல் வெற்றிக்காகவும்
தமிழ் தேசியக்
கூட்டமைப்பு புலிகளை
பூஜித்தமையும்
அரசாங்கம் தமிழ்
மக்களின் கோரிக்கைகளை
தொடர்ந்து அவமதிப்புச்
செய்து வந்தமையுமே
இதற்குக் காரணமாகும்.
இந்த நிலைமை
தொடர்ந்தால்
1970களிலும் 1980களிலும்
இடம்பெற்றதைப்
போல் அந்தத் தீவிரவாதம்
எதிர்காலத்தில்
மிதவாத தமிழ் அரசியல்வாதிகளுக்கு
சுருக்குக் கயிறாக
மாறக்கூடும்.
ஆனால் இப்போதைக்கு
அதன் வளர்ச்சிக்கான
காரணங்கள் இல்லாமலும்
இல்லை. அவ்வாறு
தீவிரவாதம் வளர்ந்து
வரும் நிலையில்
தமிழ் மக்களில்
பெரும்பாலானவர்கள்
ஏற்றுக்கொள்ளாத
ஒரு விடயத்தை முதலமைச்சர்
செய்தால் அவர்
மக்களிடமிருந்து
அந்நியப்பட்டுவிடலாம்.
எனவே அவர் ஜனாதிபதியின்
அழைப்பை நிராகரிக்கும்
போது அதனையும்
கருத்திற்கொண்டிருக்கலாம்.
இலங்கைத் தமிழ்
அரசியலில் முதலமைச்சர்
போன்ற மிதவாதிகளுக்கும்
தீவிரவாதிகளுக்கும்
இடையில் சிறியதோர்
பனிப் போர் நடந்து
வருவது பலருக்குத்
தெரியும். அவர்
முதலமைச்சர் வேட்பாளராக
தமிழ் தேசிய கூட்டமைப்பின்
தலைமையால் நியமிக்கப்பட்ட
போதும் அவர் ஜனாதிபதியின்
முன் முதலமைச்சராக
பதவிப்பிரமாணம்
செய்து கொண்ட போதும்
இந்தப் பனிப்போர்
ஓரளவுக்கு அம்பலத்துக்கு
வந்தது.
எனவே
வட பகுதியில் தீவிரவாதம்
மீண்டும் வளர்ந்துள்ள
இந்த சந்தர்ப்பத்தில்
ஜனாதிபதியின்
அழைப்பை அவர் ஏற்பது
அவருக்கு கடினமானதாக
இருந்திருக்கும்.
தமிழ் நாட்டுத்
தலைவர்கள் தமது
சொந்த அரசியலுக்காகவே
இலங்கை தமிழர்களின்
பிரச்சினைகளைப்
பற்றிப் பேசுகிறார்கள்.
ஆர்ப்பாட்டம்
நடத்துகிறார்கள்.
தம்மைத் தாமே
தீ மூட்டிக்கொள்ளும்
வகையில் சாதாரண
மக்களை உணர்ச்சிவசப்படுத்துகிறார்கள்.
விக்னேஸ்வரனே
இதனை வட மாகாண
சபைத் தேர்தல்
நடைபெறும் காலத்தில்
கூறியிருந்தார்.
ஆனால் அவர்களது
ஆர்ப்பாட்டங்கள்
இலங்கைத் தமிழர்களுக்கு
பல சந்தர்ப்பங்களில்
நன்மையளித்துள்ளன.
எனவே இலங்கை,
தமிழ்த் தலைவர்கள்
மற்றும் தமிழக
தலைவர்களை முற்றாக
பகைத்துக் கொள்ளவும்
விரும்புவதில்லை.
இலங்கை ஜனாதிபதி,
மோடியின் பதவிப்பிரமாண
வைபவத்திற்கு
வருவதையே விரும்பாத
தமிழகத் தலைவர்கள்,
இலங்கை ஜனாதிபதியோடு
வட மாகாண முதலமைச்சரும்
இந்தியாவுக்கு
வருவதை எவ்வகையிலும்
விரும்ப மாட்டார்கள்.
எனவே ஜனாதிபதியோடு
மோடியின் பதவிப்பிரமாண
வைபவத்திற்குச்
சென்று வீணாக தமிழக
தலைவர்களை பகைத்துக்கொள்ள
விக்னேஸ்வரனும்
விரும்ப மாட்டார்.
ஜனாதிபதியின்
அழைப்பை ஏற்று,
முதலமைச்சர் விக்னேஸ்வரன்
புதுடில்லிக்குச்
சென்றாலும் புதிய
இந்திய பிரதமரின்
கவனத்தை ஈர்த்துக்கொள்ள
அவருக்கு வாய்ப்பு
கிடைக்கும் என்ற
உத்தரவாதமும்
இல்லை. ஏனெனில்
இது இலங்கைத் தூதுக்
குழுவொன்று மட்டும்
கலந்துகொள்ளும்
வைபவம் அல்ல. அதேவேளை,
தமிழக தலைவர்கள்
மத்தியில் இலங்கையின்
வட பகுதி முக்கியத்துவம்
பெற்றுள்ள போதிலும்
இந்திய மத்திய
அரசாங்கத்தின்
பிரதமர் ஒருவருக்கு,
அதிலும் வட இந்தியாவைச்
சேர்ந்த ஒருவருக்கு
வட மாகாண முதலமைச்சர்
முக்கியமானவராக
தெரிய நியாயம்
இல்லை.
எனவே
இந்தப் பயணத்தால்
வட மாகாணம் அடையப்
போகும் நன்மை எதுவும்
இல்லை என்றும்
தமிழ் தேசிய கூட்டமைப்பு
நினைத்திருக்கலாம்.
நாட்டில் இன
நல்லிணக்கத்திற்கு
அரசாங்கத்திற்கும்
வட மாகாண சபைக்கும்
இடையில் நல்லுறவு
வளர்வது அத்தியாவசியமாகும்.
அந்த வகையில் வட
பகுதியில் எழுந்த
எதிர்ப்புகளை
உதறித் தள்ளிவிட்டு
விக்னேஸ்வரன்
ஜனாதிபதி முன்னிலையில்
முதலமைசசராக சத்தியப்பிரமாணம்
செய்து கொண்டமை
வரவேற்கத்தக்கதாகும்.
அதேபோல் முதலமைச்சர்,
ஜனாதிபதியின்
அழைப்பை ஏற்று
மோடியின் பதவிப்பிரமாண
வைபவத்தில் கலந்துகொள்ள
வேண்டும் என்று
தென் பகுதியில்
பலர் நினைக்கிறார்கள்.
ஆனால் விக்னேஸ்வரன்,
ஜனாதிபதி முன்னிலையில்
சத்தியப்பிரமாணம்
செய்து கொண்டதன்
பின்னர் இரு தரப்பினரினதும்
நடவடிக்கைகள்
காரணமாக வட மாகாண
சபையும் மத்திய
அரசாங்கமும் ஒன்றையொன்று
மென்மேலும் அந்நியப்படுத்திக்கொண்டன.
எனவே முதலமைச்சர்
மோடியின் பதவிப்
பிரமாண வைபவத்தில்
கலந்துகொள்வதில்
அர்த்தம் இல்லை
என்றும் சிலர்
வாதிடலாம்.
உண்மையிலேயே
அவர் புது டில்லிக்குச்
செல்வதில் கிடைக்கக்கூடிய
நன்மையோ அல்லது
தீமையோ இல்லை என்றே
கூற வேண்டும்.
ஒரு புறம் மோடியும்
ஒரு புறம் மஹிந்தவும்
ஒரு புறம் தமிழக
தலைவர்களும் மற்றொரு
புறம் விக்னேஸ்வரனும்
அவரவரது அரசியல்
பிரசாரத்துக்காக
இந்த சந்தர்ப்பத்தை
பாவிக்கிறார்கள்.
அவ்வளவு தான்.
மக்கள் நலன்
என்பது இதில் மிகக்
குறைவாகவே சம்பந்தப்பட்டுள்ளது.