Contact us at: sooddram@gmail.com

 

நேர்காணல்

மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்” - எம். ஏ. நுஃமான்

சந்திப்பு: தேவிபாரதி

எம். ஏ. நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும் ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் வெளிப்பட்ட இவர் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வு மரபில்வைத்து எண்ணப்பட வேண்டிய விமர்சகர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும் அவற்றின் பெயரால் இலக்கியத்தை எளிமைப்படுத்துவதற்கு அப்பால் நிற்கும் வெகுசிலரில் ஒருவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மரபான இலக்கியத்திலும் இலக்கணத்திலும் புலமைகொண்ட அவர் நவீன இலக்கியக் கோட்பாடுகள் பற்றி எழுதியும் விவாதித்தும் வருகிறார். தமிழில் கால்கொண்ட அமைப்பியல், பின்அமைப்பியல் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. தமிழ்மொழியோடு ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளையும் பயின்று தனது விமர்சனச் செயற்பாட்டை அமைத்துக்கொண்டவர். ஆங்கிலத்திலிருந்து பாலஸ்தீனக் கவிதைகள் உள்ளிட்டவற்றை மொழிபெயர்த்த இவரின் கவிதைகள், ஆங்கிலம், சிங்களம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆசிரியர், இணையாசிரியர், பதிப்பாசிரியர், இணைப் பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் 25 நூல்களுக்குமேல் இவர் வெளியிட்டுள்ளார். ஈழத்தின் கடந்த தலைமுறையினரோடு படைப்புப் பணியைத் தொடங்கிய எம்.ஏ. நுஃமான் இளைய தலைமுறைப் படைப்பாளிகளோடும் உறவைப் பேணிவருபவர்.

தமிழில் இன்று எழுதும் விமர்சகர்களில் ஆகவிவேகமான பார்வை இவருடையதுதான் என்று சுந்தர ராமசாமியால் குறிக்கப்பட்டவர் நுஃமான். உடனடிக் கவன ஈர்ப்பு நோக்கத்தில் இல்லாமல் நிதானத்தோடு செயற்படும் பொறுப்புமிக்க விமர்சகர். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிந்தைய ஈழத்தின் இன்றைய அரசியல் கலாச்சாரச் செயற்பாடுகள் பற்றித் தன்னுடைய கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

  • ஈழ இலக்கியத்துக்குத் தனி அடையாளம் உண்டா?

முதலில் ஈழம் என்னும் சொல்லின் பொருளைத் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். இன்று தமிழ்நாட்டிலும் தீவிரத் தமிழ்த் தேசிய உணர்வு கொண்ட இலங்கைத் தமிழர் மத்தியிலும் ஈழம் என்பது தமிழர் தாயகம் எனக் கருதப்படும் வடக்கு-கிழக்குப் பகுதியையே குறிக்கின்றது. தீவிர அரசியல் அர்த்தத்துடன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பண்டைக் காலத்திலிருந்து ஈழம், இலங்கை ஆகிய இரு சொற்களும் ஒரு பொருட்சொற்களாகவே வழங்கி வந்துள்ளன. அவ்வகையில் முழு இலங்கையையும் குறிக்கும் சொல்லாகவே நான் ஈழம் என்பதை இங்கே பயன்படுத்துகிறேன். தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மொத்தச் சனத்தொகையில் அரைவாசிக்கு அதிகமானோர் வடக்கு - கிழக்குக்கு வெளியே வாழ்கிறார்கள் என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டும். அத்தோடு ஈழத் தமிழர் என்பது இலங்கையில் வாழும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரையும் உள்ளடக்காது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இனி விசயத்துக்கு வருவோம். குறிப்பாக 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழக இலக்கியத்துக்கும் ஈழத் தமிழ் இலக்கியத்துக்கும் இடையே பெரிய வேறுபாடு இருந்ததாகக் கூற முடியாது. ஆனால் கலாச்சாரம் சார்ந்த சிற்சில வேறுபாடுகளைக் காண முடியும். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனியத்திற்கெதிராக இலங்கையில் அடையாள அரசியல் ஒன்று உருவாயிற்று. பிரித்தானிய அரசின் ஆதரவு பெற்ற கிறிஸ்தவத்திற்கு எதிராக ஆறுமுக நாவலர் இந்து அல்லது சைவ அடையாளம் பற்றியும் சித்தி லெப்பை இஸ்லாமிய அடையாளம் பற்றியும் அநகாரிக தர்மபால போன்றோர் பௌத்த அடையாளம் பற்றியும் பேசத் தொடங்கினார்கள். இவற்றைச் சமய மறுமலர்ச்சி இயக்கங்கள் என்று நாங்கள் சொல்கிறோம். இந்தக் காலகட்டத்தில் இந்து அல்லது சைவ வேளாள, இஸ்லாமிய, சிங்கள அடையாளங்கள் இலங்கையில் வலுப்பெற்றுவிட்டன. அரசியல் நலன் சார்ந்து உருவான இந்த அடையாளங்களும் அவற்றின் பிரச்சினைகளும் மெல்ல மெல்ல இலக்கியத்திலும் இடம்பெறத் தொடங்கின. ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகுதான் அது கூர்மை அடைந்தது.

  • காலனியக் கிறிஸ்துவத்துக்கு எதிராக உருவான இந்த அடையாளங்களுக்கு இடையில் முரண்பாடு இருந்ததா?

ஆம். அடையாள அரசியல் ஓர் எதிர்வினைக் கருத்துநிலைதான். ஏதாவது ஒன்றுக்கு எதிராகத்தான் அது கட்டமைக்கப்படுகிறது. தன்னைப் பிறவற்றிடமிருந்து அது வேறுபடுத்துகிறது. பிற அடையாளங்களைவிடத் தன்னை மேன்மையாகக் கருதிக்கொள்கிறது. அவ்வகையில் ஒவ்வொரு அடையாளமும் பிற அடையாளங்களுக்கு எதிரானதுதான்.

பௌத்த சிங்கள அடையாளம் பிற அடையாளங்களை வெளி ஒதுக்குவது. சைவத் தமிழ் அடையாளமும் அப்படியே. சைவத் தமிழ் அடையாளம், பௌத்த அடையாளம் ஆகியவற்றுக்கு எதிர்வினையாகத்தான் இஸ்லாமிய அடையாளம் இலங்கையில் உருவாயிற்று. இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை அப்போதைய பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தியபோது இலங்கையில் அந்தஸ்துமிக்க தலைவராக விளங்கிய பொன்னம்பலம் இராமநாதன் என்பவர்தான் இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மையினரின் பிரதிநிதியாக இருந்தார். அக்காலகட்டத்தில் வளர்ந்துவந்த இஸ்லா மிய நடுத்தர வர்க்கத்தினர் தங்களுக்கெனத் தனியான பிரதிநிதித்துவம் வேண்டுமென்று விரும்பினார்கள். அரசாங்கத்திடம் அக்கோரிக்கையை முன்வைத்தார்கள். ஆனால் அக்கட்டத்தில் இராமநாதன் அதற்கு எதிராகப் பேசினார். இஸ்லாமியர்கள் தனி இனக் குழுவினர் அல்ல. சமயத்தால் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் தமிழர்கள்தாம் என்று அவர் வாதிட்டார். அது தொடர்பாக ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டார். முஸ்லிம்கள் தங்களை அராபியரின் வம்சாவளியினர் எனச் சொல்வதை அவர் மறுத்தார். இக்கருத்தை இஸ்லாமிய உயர்குழாத்தினர் தீவிரமாக எதிர்த்தனர். அவர்கள் தாங்கள் அராபிய வழித்தோன்றல்கள் என்றும் தங்களுடையது தூய அரபு ரத்தம் என்றும் வாதிட்டனர். தங்கள் மூதாதையர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்ததால் சில கலாசார ஒற்றுமைகள் இருக்கலாம், ஆனால் தங்களுக்கும் தமிழர்களுக்கும் இனரீதியாக எந்த உறவும் இல்லை என்றனர். வர்த்தகத் தேவைகளுக்காகத் தாங்கள் கடன்வாங்கிய மொழிதான் தாங்கள் பேசும் தமிழ் என்றனர். இத்தகைய கருத்துகள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வலுவாகப் பேசப்பட்டன. இலங்கையில் தமிழ் பேசும் இஸ்லாமியர் மத அடையாளத்தை முதன்மைப்படுத்தித் தாங்கள் தமிழர் அல்ல தனியான இனக் குழுவினர் என்பதை 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே உறுதிப்படுத்திக்கொண்டனர். போத்துக்கேயர் காலத்திலிருந்து தம்மீது திணிக்கப்பட்ட விஷீஷீக்ஷீs என்ற அடையாளத்தை ஏற்றுக்கொண்டனர். தமிழில் தங்களைச் சோனகர் என அழைத்தனர். சில அரசியல் காரணங்களுக்காகத் தவிர இலங்கைத் தமிழர்களும் இங்குள்ள முஸ்லிம்களைத் தமிழர் என்று கருதுவதில்லை. பிரித்தானியர் காலத்திலிருந்து அரச ஆவணங்களிலும் முஸ்லிம்கள் தனி இனக் குழுவினராகவே அடையாளப்படுத்தப்படுகின்றனர். சிங்கள பௌத்த அடையாளத்துக்கு எதிர்வினையாகவும் முஸ்லிம் அடையாளம் இலங்கையில் வலுப்பெற்றது. தீவிர சிங்கள பௌத்த தேசியவாதிகள் வர்த்தகப் போட்டி காரணமாக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக நவீன இலங்கையின் முதலாவது மிகப் பெரிய இனக் கலவரம் - சிங்கள ஜ் முஸ்லிம் கலவரம் - 1915இல் வெடித்தது. இதில் முஸ்லிம்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பிரித்தானிய அரசு ராணுவச் சட்டத்தைப் பயன்படுத்தி அக்கலவரத்தை அடக்கியது. அது தொடர்பாக அன்றைய தமிழ்த் தலைமை சிங்கள தேசியவாதிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டமையும் இந்த இனத்துவ அடையாள இடைவெளியை ஆழமாக்கவே உதவியது.

காரணம் எதுவாயினும், நவீன இலங்கையில் இலங்கையர் என்னும் அடையாளத்துக்குப் பதிலாகச் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற அடையாளங்களே வலுப்பெற்றன. இலங்கையில் முஸ்லிம்கள் தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருப்பினும் தங்களைத் தமிழர் என்று அடையாளப்படுத்துவதில்லை என்பது முக்கியமான அம்சம். தமிழ்நாட்டில் நிலைமை அப்படியல்ல. இங்கு இஸ்லாமியர் ஒருவர் தன்னைத் தமிழர் என்றோ இஸ்லாமியத் தமிழர் என்றோ தமிழ் முஸ்லிம் என்றோ அழைப்பதை ஏற்றுக்கொள்வார். ஆனால் இலங்கையில் அப்படியல்ல.

  • அப்படியானால் இலங்கையில் அது வெறும் சமய அடையாளம் மட்டுமல்ல?

சமய அடையாளம் அல்ல. அது இனத்துவ அடையாளமாகத்தான் இருக்கிறது. மதம் இங்கு இன அடையாளத்தின் குறியீடாக இருக்கிறது. இது முஸ்லிம்களைப் பொறுத்தவரை மட்டும்தான். சிங்களம் பேசும் கிறிஸ்தவர் தங்களைச் சிங்களவர் என்று அடையாளப்படுத்திக்கொள்வதுபோல் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் தங்களைத் தமிழர்கள் என அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தங்களைத் தமிழர் என அடையாளப்படுத்துவதில்லை. இந்த அடையாள அரசியலுக்கு ஒரு நூற்றாண்டுக்கு அதிகமான வரலாறு உண்டு. அது இலக்கியத்திலும் பிரதிபலிக்கிறது.

ஆக ஈழத் தமிழர்கள் என்று பேசும்போது அது ஒரு தனி அலகு அல்ல என்பதை நாம் மனம்கொள்ள வேண்டும். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அடையாள அரசியலில் இன்னொரு மாற்றம் வருகிறது. இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்வதற்காகப் பிரித்தானியர் தமிழ்நாட்டிலிருந்து கூலித் தொழிலாளர்களைக் கொண்டுவருகிறார்கள். அவர்கள் காலப்போக்கில் பத்து லட்சத்திற்கு அதிகமாகப் பெருகி தனி இனக் குழுவாக உருவாகிறார்கள். அவர்கள் தொழிற்சங்கங்களால் வர்க்க அடிப்படையில் ஒன்று திரட்டப்பட்டார்கள். அவர்களுக்கு வர்க்க அடையாளமும் இனத்துவ அடையாளமும் படிப்படியாக உருவாயின. அவர்கள்தான் மலையகத் தமிழர்கள் என்று இப்போது அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் பெரிய ஒட்டுறவு இல்லை. அவர்களுடைய சமூக, அரசியல், பொருளாதார நலன்கள் இவர்களுடையதிலிருந்து வேறுபட்டவை. மலையகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்மீது - குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்மீது - கொஞ்சம் எதிர்ப்புணர்வோடுதான் இருந்தார்கள். ஏனென்றால், மலையகத்தில் கிளார்க்குகளாகவோ ஆசிரியர்களாகவோ டாக்டர்களாகவோ நிருவாகப் பதவிகளில் பணியாற்றியவர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்களே. மலையகத் தமிழர்கள் இவர்களைத் தங்கள்மீது ஆதிக்கம் செலுத்த வந்தவர்களாகவே கருதினார்கள். மலையகத் தமிழர்களின் பிரச்சினை முற்றிலும் வேறானது. இலங்கையில் மிக மோசமான ஒடுக்குமுறைக்கு ஆளான மக்கள் அவர்கள்தான். அவர்கள் மிக மோசமாகச் சுரண்டப்பட்டவர்கள். அதனாலேயே தொழிற்சங்கங்கள் அவர்களை ஒன்று திரட்டுவது இலகுவாக இருந்தது. கடந்த நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்தில் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன. 1920-30களில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் முக்கியமான, வலிமையான சக்தியாக உருவாகியிருந்தனர். இதில் தொழிற்சங்கவாதியான கோ. நடேசையர் போன்றோரின் பங்கு முக்கியமானது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர் இலங்கை அரசாங்க சபையில் உறுப்பினராகவும் இருந்தார். அவருடைய மனைவி மீனாட்சியம்மாளும் செயற்பாட்டாளராக மலையகத்தில் பணியாற்றியிருக்கிறார். சுதந்திரத்துக்குப் பின்னர் மலையகத் தமிழர் தமக்கென்று தனித்துவமான அடையாளமுள்ள இனக்குழுவாக உருவாகிவிட்டனர்.

  • ஈழத் தமிழர் என்பது யாரைக் குறிக்கும்?

ஈழத் தமிழர் என்பது அங்கே நீண்டகால வரலாறு உடைய வடக்கு - கிழக்குத் தமிழர்களைத்தான் குறிக்கும். இந்தியத் தமிழர் அல்லது மலையகத் தமிழர் என்பது மத்திய மலைநாட்டில் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்தியத் தமிழர்களின் வம்சாவளியினரைக் குறிக்கும். இவர்களுக்கு சுமார் இருநூறு வருட வரலாறு உண்டு. தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு ஆயிரம் ஆண்டு வரலாறு இருக்கிறது. ஆக இன்று இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகப் பேசும் சமூகத்தினர் மூன்று தனித்துவமான இனக்குழுமங்களாக உள்ளனர். இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்கள் என இவர்கள் இனங்காணப்படுகின்றனர். இலங்கை அரச ஆவணங்களில், குடிசனக் கணக்கெடுப்பில் இந்தப் பிரிவுகள் இடம்பெற்றுவிட்டன. இலங்கையில் தமிழர் என்ற பதம் இம்முப்பிரிவினரையும் உள்ளடக்காது. இலங்கை அரசியலில் தந்தை செல்வா (எஸ். ஜே. வி. செல்வநாயகம்) காலத்திலிருந்து தமிழ் பேசும் மக்கள் என்னும் பதம் இம்முப்பிரிவினரையும் உள்ளடக்கப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இது மொழியியல் கருத்துத்தான். அரசியல் கருத்து அல்ல. இவர்களுடைய சமூக, பொருளாதார, அரசியல் நலன்கள் வேறுபட்டவை. சில வகையில் முரண்படுபவை. தமிழகத்தினருக்கு இவ்வேறுபாடு புரிவதில்லை. அதைப் புரிந்துகொள்ள அவர்கள் விரும்புவதும் இல்லை. ஈழம், ஈழத் தமிழர் என்பதை எவ்வித அரசியல் புரிதலும் இல்லாமல் அவர்கள் பேசுகின்றனர்.

  • இந்த முரண் தொடக்கத்திலிருந்தே இருக்கிறதா?

இல்லை. நான் முன்னர் குறிப்பிட்டதுபோல 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்துதான் இலங்கையில் இன முரண்பாடும் இன அடையாளங்களும் வளர்ச்சி பெற்றன.

  • சுதந்திரத்திற்குப் பிறகு தமிழர்கள் தங்கள் உரிமைக்காக முன்னெடுத்த போராட்டம் என்பது மலையகத் தமிழர்களையும் இஸ்லாமியத் தமிழர்களையும் விலக்கி வைத்துதான் நடந்ததா?

ஒருவகையில் அப்படித்தான். நான் முன்பு சொன்னதுபோல இவர்களுடைய அரசியல் நலன்கள் வேறாக இருந்தன. எனினும் இவர்கள் எல்லாரையும் ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் பேசும் மக்கள் என்னும் சொல்லாடலைத் தந்தை செல்வா முன்வைத்தார். ஆனால் அது அரசியல்ரீதியில் வலுவானதாக இருக்கவில்லை. தமிழர் உரிமைப் போராட்டம் என்பதே மொழி உரிமைப் போராட்டமாகத்தான் தொடங்கியது. இது ஆழமாகப் பார்க்கப்பட வேண்டிய அரசியல். ஆங்கிலத்தின் இடத்தில் சுதேச மொழிகள் - அதாவது சிங்களமும் தமிழும் - ஆட்சிமொழிகளாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1930களின் தொடக்கத்திலேயே அரசாங்க சபையில் முன்வைக்கப்பட்டது. எனினும் சிங்களம் மட்டும் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்ற பிரேரணையை 1943இல் ஜே. ஆர் ஜெயவர்த்தனா கொண்டுவந்தார். ஆயினும் தமிழர் முஸ்லிம்கள், சிங்களவர் என்ற பேதமின்றிப் பலரும் அதை எதிர்த்து இருமொழிக் கொள்கையை ஆதரித்தனர். பின்னர் இருமொழிக் கொள்கை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் சுதந்திர இலங்கையில் நிலைமை தலைகீழாக மாறியது. நாடாளுமன்ற சந்தர்ப்பவாதம் வரலாற்றோடு விளையாடியது. இருமொழிக் கொள்கையை ஆதரித்த பண்டாரநாயக்க 24 மணிநேரத்தில் சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்னும் சட்டத்தைக் கொண்டுவருவேன் என்னும் வாக்குறுதியோடு 1956இல் ஆட்சியைக் கைப்பற்றினார். சிங்களம் ஆட்சிமொழியானால் தங்கள் பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீண்டுவிடலாம் எனச் சிங்கள மக்கள் நம்பினர். 1956இல் சிங்களம் மட்டும் ஆட்சி மொழியாக்கப்பட்டது. இன முரண்பாடு கூர்மையடைந்தது. சிங்கள, தமிழ்த் தேசியவாதங்கள் வேரூன்றி வளரத் தொடங்கின.

  • சிங்களம் ஆட்சிமொழியாக்கப்பட்டதற்கு எதிராகத்தான் தமிழ்த் தேசியவாதம் முன்னெடுக்கப்பட்டதா?

ஆம். ஆரம்பத்தில் அது மொழித் தேசியவாதமாகத் தான் மேற்கிளம்பியது. 1950களில் தமிழ் மக்கள் மத்தியில் மொழியுணர்வு கொழுந்துவிட்டெரிந்தது. தமிழரசுக் கட்சியும் அவர்களது சுதந்திரன் பத்திரிகையும் அதற்கு நெய்யூற்றி வளர்த்தன. தமிழ்க் கவிஞர்கள் ஆர்ப்பாட்டமான போர்ப் பாடல்களைப் பாடினர். தமிழ் உணர்ச்சியை ஒரு கருவியாகப் பயன்படுத்தித் தமிழர்கள் மத்தியில் தமிழரசுக் கட்சி தனிப்பெரும் அரசியல் சக்தியாக மேற்கிளம்பியது. மொழி உரிமைப் போராட்டத்தை வடகிழக்கு முஸ்லிம்களும் ஆதரித்தனர். ஆனால் தொன்னிலங்கை முஸ்லிம்கள் அதைத் தங்களின் பிரச்சினையாகக் கருதி அதற்கு ஆதரவு அளிக்கவில்லை. அவர்கள் சிங்களப் பெரும்பான்மைப் பிரதேசத்தில் வாழ்வதும் சிங்களமும் தமிழும் பேசக்கூடியவர்களாக இருப்பதும் அதற்குக் காரணம் எனலாம்.

  • இந்த மொழி வேறுபாட்டைச் சிங்கள ஆட்சியாளர்கள் முறையாகக் கையாளாததற்கு அவர்கள் சிங்கள ஆதரவாளர்களாக மட்டும் இருந்ததுதான் காரணமா?

அப்படித்தான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணம் இருந்தது. தமிழ்நாட்டில் பார்ப்பனர் சிறுபான்மையினராக இருந்தாலும் பிரித்தானிய ஆட்சியில் ஆங்கிலக் கல்வி காரணமாகப் பொருளாதாரரீதியிலும் கல்வியிலும் அவர்களே மேலாதிக்கம் பெற்றிருந்தனர். இதற்கு எதிராகவே 1930களிலிருந்து இடைப்பட்ட சாதியினர் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதை ஒத்த நிலைமை இலங்கையிலும் காணப்பட்டது. பிரித்தானிய ஆட்சியில் ஆங்கிலக் கல்வி வாய்ப்பு அதிகம் பெற்ற யாழ்ப்பாண உயர்சாதி நடுத்தர வர்க்கத்தினர் நிருவாகத் துறையில் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். சிங்கள நடுத்தர வர்க்கத்தினர் இதற்கு எதிராகச் செயற்படத் தொடங்கியதன் விளைவுதான் சிங்களம் மட்டும் ஆட்சிமொழிச் சட்டம். அதன் பிறிதொரு விளைவுதான் இன ஒதுக்கல். இன்று அரச நிருவாக யந்திரம் முழுமையாகச் சிங்களமயமாக்கப்பட்டுவிட்டது. இன்று மொத்த அரச ஊழியர்களில் தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் 8 விழுக்காடுதான் இடம்பெற்றுள்ளனர். இதில் பள்ளி ஆசிரியர்களும் உள்ளடக்கம். இந்தப் புறக்கணிப்பும் பாராபட்சமும்தான் யுத்தத்துக்கும் புலப்பெயர்வுக்கும் இட்டுச்சென்றன.

  • தமிழரசுக் கட்சி முன்னெடுத்த உரிமைப் போராட்டம் என்பது எதை வலியுறுத்தியது?

அவர்கள் முதலில் மொழி உரிமையைத்தான் வலியுறுத்தினார்கள். தங்கள் மொழிக்குச் சம உரிமை இல்லாத சமூகத்தினர் இரண்டாந்தரக் குடிமக்களாகிவிடுகின்றனர். அதனால் அவர்கள் அதை எதிர்த்தனர். அடுத்து அதிகாரப் பரவலாக்கலை - சமஷ்டி ஆட்சிமுறையைக் கோரினார்கள். தொடக்க காலத்தில் மொழி உரிமைக் கோரிக்கையைச் சில சிங்கள இடதுசாரிக் கட்சிகளும் ஆதரித்தன. பிரபலமான இடதுசாரித் தலைவர்களுள் ஒருவரான கொல்வின் ஆர். டி. சில்வாவின் புகழ்பெற்ற கூற்று ஒன்று உண்டு. “One language two nations, two languages one nation” ஆனால் 1970களில் இந்த இடதுசாரிகளும் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்துக்கு இரையாகிச் சிங்களப் பேரினவாதத்துடன் சமரசப்பட்டுவிட்டனர்.

  • வர்க்கரீதியான ஒற்றுமை அங்கே உருவாகவில்லையா?

1960களில் வர்க்கரீதியான ஒற்றுமை ஓரளவு காணப்பட்டது. ஆனால் 70களில் இனவாதம் உக்கிரமடைந்த பிறகு அந்த ஒற்றுமை போய்விட்டது. இடதுசாரிக் கட்சிகளும் தமிழ் எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்ப வேண்டிய நிலைமை உருவாகிவிட்டது. தமிழரசுக் கட்சியின் தீவிர வலதுசாரி நிலைப்பாடும் இதற்கு ஒரு காரணம் எனலாம். ஆயினும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இதற்குள் வரவில்லை.

  • மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை இவர்கள் பேசவில்லையா?

பேசினார்கள்தான். ஆயினும் மலையகத் தமிழர்களின் அரசியல் பொருளாதார நலன்கள் இவர்களால் சரியாக முன்னெடுக்கப்படவில்லை. அவர்கள் பல்வேறு தொழிற்சங்க இயக்கங்களுள் வலுவாகப் பிணைக்கப் பட்டிருந்தனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்தான் அவர்களது பெரிய தொழிற்சங்கமாகவும் அரசியல் கட்சியாகவும் செயல்பட்டது. அதன் தலைவர் தொண்டமான் பலம் மிக்க அரசியல் தலைவராக விளங்கினார். சிங்கள ஆளும் கட்சிகளுடன் இணங்கிச் செயல்பட்டார். தமிழர் பிரச்சினையில் சில சமரசங் களுக்கும் முயன்றார். தமிழர் விடுதலைக் கூட்டணி யிலும் இணைந்தார். ஆயினும் அக்கூட்டு நீடிக்க வில்லை. தமிழ் ஈழக் கோரிக்கை மலையகத்தை உள்ளடக்கவில்லை. அதை உள்ளடக்குவதும் சாத்தியமல்ல. அது அவர்களுடைய கோரிக்கையும் அல்ல. இந்த நிலைப்பாடுதான் இஸ்லாமியர் மத்தியிலும் இருந்தது. ஆயினும் தமிழ் ஈழக் கோரிக்கையால் அவர்கள் இருசாராருமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள்.

  • மொழிப் பிரச்சினைதான் இந்த இனப் பாகுபாடுகளுக்குக் காரணமா?

மொழிப் பிரச்சினையுடன்தான் இன முரண்பாடு உக்கிரமடைந்தது. ஆரம்பத்திலேயே இது தீர்க்கப்பட்டிருந்தால் மற்ற பிரச்சினைகள் இந்த அளவுக்குத் தலையெடுத்திருக்கமாட்டா. பிரிவினைவாதம்வரை அது சென்றிருக்காது. ஆனால் சிங்கள ஆளும் வர்க்கம் அதற்குத் தயாராக இருக்கவில்லை. அவர்களுக்கு அரசியல் தீர்க்கதரிசனம் இருக்கவில்லை. இன முரண்பாட்டை நாடாளுமன்ற ஆசனத்தைப் பிடிப்பதற்கான குறுக்கு வழியாக அவர்கள் பயன்படுத்தினர். தமிழ்த் தேசியவாதிகளுக்கும் அதுவே வாய்ப்பாக அமைந்தது.

  • யாழ்ப்பாணத் தமிழர்களின் மேலாதிக்கத்திற்கெதிராகத் தான் சிங்களவர்கள் மத்தியில் தமிழ் எதிர்ப்புணர்வு உருவாகிறது என்கிறீர்கள். இதை யாழ்ப்பாணத் தமிழ் இயக்கங்கள் உணர்ந்திருந்தனவா?

அப்படிச் சொல்ல முடியாது. இந்த மேலாதிக்கம் என்பது திட்டமிட்டு வந்ததல்ல. இயல்பாக அவர்களின் ஆங்கிலக் கல்வி மூலமாக வந்ததுதான். ஆனால் தமிழர்கள் தங்கள் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்துக்கொண்டதாகச் சிங்களவர்கள் நினைத்தார்கள். சிங்கள மத்தியதர வர்க்கமும் அரசியல்வாதிகளும் அந்தக் கண்ணோட்டத்தைத்தான் கொண்டிருந்தனர். அந்தவகையில் எல்லாத் துறைகளிலும் சிங்கள மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதே சுதந்திரத்துக்குப் பிந்தைய சிங்கள ஆட்சியாளர்களின் செயல்பாடாக இருந்தது.

  • நிலம் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறதா?

ஆம். சுதந்திரத்துக்குப் பின் நிலம் ஒரு பிரச்சினையாக வளர்ந்துவிட்டது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி எல்லாருக்கும் இப்பிரச்சினை இருக்கிறது. நிலப்பற்றாக்குறை, குடிசனப் பெருக்கம், திட்டமிட்ட குடியேற்றம் என்பவற்றின் விளைவு இது. உதாரணத்துக்கு அம்பாறை மாவட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். தமிழர்களும் இஸ்லாமியரும்தான் இங்குப் பெரும்பான்மையினர். இவர்கள் சுமார் அறுபது சதவீதத்தினர். ஆனார் 30 சதவீதத்துக்குக் குறைவான நிலம்தான் இவர்களிடம் இருக்கிறது. இந்த நிலப் பற்றாக்குறை காரணமாகக் கடலுக்கு மிக அருகிலும் வாழ்விடங்கள் உருவாகியுள்ளன. கடற்கரையை அண்டிய குறுகிய நிலப்பகுதியிலேயே இவர்கள் வாழ்கின்றனர். இதனால் சுனாமியின்போது பெரிய உயிரிழப்புகள் இங்குதான் நிகழ்ந்தன. இலங்கையின் மொத்த உயிரிழப்பில் மூன்றில் ஒரு பகுதி, சுமார் பத்தாயிரம்பேர் இங்கு உயிரிழந்தனர். நிலப்பற்றாக்குறை காரணமாகத் தங்கள் நிலத்தைப் பாதுகாப்பதற்கும் பிறரின் நிலத்தைக் கைப்பற்றுவதற்கும் நடக்கும் முயற்சிகளில் இனங்களுக்கிடையிலான பிரச்சினை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.

  • இந்த நிலப் பிரச்சினைத் தீர்வுக்கு அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது?

சிங்களவரின் நிலப்பிரச்சினையைத் தீர்ப்பதே அரசின் பிரதான குறிக்கோளாக இருந்துவருகிறது. 1950களிலிருந்தே சிங்களக் குடியேற்றங்களைத்தான் தொடர்ந்து செய்கின்றனர். அரசுக்குத் தேசிய நிலப்பங்கீட்டு, குடியேற்றக் கொள்கை என எதுவும் இல்லை. அப்படி ஏதும் இருந்தால் இது சிறுபான்மையினர் அடர்த்தியாக வசிக்கும் பிரதேசங்களில் நிலமற்ற சிங்களவர்களைக் குடியேற்றுவதும் அதன் மூலம் சிறுபான்மையினரின் அடர்த்தியைக் குறைப்பதும்தான் அக்கொள்கை எனக் கூறலாம். இத்திட்டத்தை அவர்கள் வெற்றிகரமாகச் செயற்படுத்திவருகிறார்கள். உதாரணமாகத் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் சிங்களவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்திருப்பதைக் காட்டலாம். வடக்கில் மட்டும்தான் இது குறைவாக இருந்தது. ஆனால் போருக்குப் பிந்தைய அரசின் நடவடிக்கைகள் அங்கும் சிங்களக் குடியேற்றங்கள் அதிகரிக்கும் சாத்தியத்தைக் காட்டுகின்றன.

  • இலங்கை ஜனநாயக நாடு. அதன் அரசியல் சாசனத்திற்குட்பட்டு இப்பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்ததில்லையா? ஆயுதப் போராட்டத்திற்கான தேவை எதனால் ஏற்பட்டது?

ஜனநாயகம் என்பது பொய்மைதான். இந்தியா உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு என்கிறீர்கள். அது எந்த அடிப்படையில்? இங்கு எல்லா மக்களும் சகல உரிமைகளும் பெற்று வாழ்கிறார்களா? தேர்தல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டும்தான் ஜனநாயகமா? அப்படியென்றால் இலங்கையும் ஜனநாயக நாடுதான். பெரும்பான்மை ஜ் சிறுபான்மை முரண்பாடு எங்கும் இருக்கிறது. பெரும்பான்மையினர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது அவர்களுக்கு உகந்த முறையில்தான் செயல்படுகிறார்கள். பிரித்தானியர் ஆட்சியைக் கையளித்துச் சென்றபோது அவர்கள் உருவாக்கிக் கொடுத்த அரசியல் சாசனத்தில் சிறுபான்மையினருக்கெனச் சில காப்புகள் இருந்தன. அப்படி இருந்தும் அந்த அரசியல் யாப்பின் கீழ்தான் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. சிங்களம் மட்டும் ஆட்சிமொழி ஆக்கப்பட்டது. ஜனநாயக முறையில் தந்தை செல்வா போன்றவர்கள் போராடினார்கள். ஆனால் அது அரசால் ஒடுக்கப்பட்டது. 1956இல் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆட்சியாளர் வன்முறையைப் பயன்படுத்தி அடக்கினர். அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக வழியிலான எல்லாப் போராட்டங்களும் இவ்வாறுதான் தோல்வியில் முடிந்தன. இதன் விளைவாகத்தான் வேறு வழியில்லாத நிலையில் ஆயுதப் போராட்டம் உருவானதாக ஒரு கருத்து உண்டு. ஆனால் இது முழு உண்மையல்ல. அதற்கு வேறு சில காரணங்களும் இருந்தன. அதில் முக்கியமானது யாழ்ப்பாண இளைஞர்களின் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது எனலாம். 1972இல் அரசாங்கம் பல்கலைக்கழக அனுமதிக்குத் தரப்படுத்தல் முறையை அறிமுகப்படுத்தியது. அதுவரை பல்கலைக்கழக அனுமதியில் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் யாழ்ப்பாண இளைஞர்கள் முன்னணியில் இருந்தனர். இத்தரப்படுத்தல் முறையால் கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மாணவர்கள் பெரிதும் நன்மை அடைந்தனர் எனினும் யாழ்ப்பாண மாணவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். கல்வி வாய்ப்பு, தொழில் வாய்ப்பு என்பவற்றில் நம்பிக்கை இழந்த மாணவர்கள் வன்முறை அரசியலில் எளிதாக ஈர்க்கப்பட்டனர். யாழ்ப்பாண இளைஞர்களை வன்முறை அரசியலுக்கு ஆற்றுப்படுத்தியதில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதையும் நாம் மறுக்க முடியாது. அதன் பயனைப் பின்னர் அவர்களே அறுவடை செய்யவும் நேர்ந்தது.

அரசு என்பது வன்முறை நிறுவனம்தான். தனது அதிகாரத்துக்கு எதிரான சாத்வீகப் போராட்டங்களையே அது ஒரு எல்லைக்குமேல் அனுமதிக்காது. வன்முறைப் போராட்டத்தை அது மூர்க்கமான வன்முறையினாலேயே எதிர்கொள்கிறது. வன்முறை வன்முறையையே தூண்டுகிறது. இது நச்சுவட்டச் சுழல்தான். அரசுக்கு எதிரான இளைஞர்களின் ஒவ்வொரு தாக்குதலும் அரசின் மிகமோசமான எதிர்த்தாக்குதலை எதிர்கொண்டது. அரசின் ஒவ்வொரு தாக்குதலும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஆயுதப் போராட்டப் பாதையில் தள்ளியது இவ்விதமாகத்தான்.

  • இந்த இளைஞர்களின் எதிர்ப்பு இயக்கங்கள் அரசியல் கொள்கையோடு செயற்பட்டனவா?

தமிழ்த் தேசியம்தான் அவர்களுடைய கொள்கை எனலாம். தன் இனப் பற்றும் பிற இன வெறுப்பும் இனத் தேசியவாதத்தின் உள்ளார்ந்த அம்சங்கள். தமிழ் ஈழ விடுதலை இயக்கங்கள் எல்லாவற்றினதும் அடிப்படையான கருத்துநிலை இதுதான். இதற்கு மேலாக மார்க்சியக் கொள்கையில் ஆரம்பத்தில் சில இயக்கங்கள் ஆர்வம் காட்டின. இது சில தனிப்பட்டவர்களின் விருப்பார்வமாக இருந்ததே தவிர இயக்க உறுப்பினர்கள் எல்லாரும் இவ்வாறு அரசியல் மயப்படுத்தப்பட்டதாகச் சொல்ல முடியாது. தனிநாடுதான் அவர்களது கனவாக இருந்தது. தனிநாடு கிடைத்தால் தாங்கள் சுயாதீனமாக முன்னேறலாம் என்று அவர்கள் நம்பினார்கள்.

  • இந்த எதிர்ப்பு இயக்கத்தினர் தங்களது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் மலையகத் தமிழர்களையும் இசுலாமியத் தமிழர்களையும் இணைத்துக்கொண்டார்களா?

தொடக்க காலத்தில் இவர்களுள் பலர் இந்த இயக்கங்களில் போராளிகளாக இணைந்திருந்தனர். ஆனால் அது பெரிய எண்ணிக்கையில் இல்லை என்று நினைக்கிறேன். தமிழ் பேசும் ஏனைய சிறுபான்மை இனங்களின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு பொதுவான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அவர்களை ஒன்றிணைத்து விடுதலைப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல விடுதலை இயக்கங்கள் தவறிவிட்டன. ராணுவவாதம் அவற்றுள் மேலோங்கி இருந்தது. இன சமத்துவக் கோட்பாட்டுக்குப் பதிலாக இன மேலாண்மை அவற்றின் அடிப்படைக் கருத்துநிலையாக இருந்தது. மலையகத் தமிழர், இஸ்லாமியர் ஆகியோரின் வேறுபட்ட அரசியல் பொருளாதார நலன்கள், அபிலாசைகள் பற்றிய புரிந்துணர்வு அவர்களுக்கு இருக்கவில்லை. அதனால் மலையகத் தமிழர்களும் வடக்கு - கிழக்கு முஸ்லிம்களும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துள் உள் வாங்கப்படவில்லை. குறிப்பாக முஸ்லிம்களைப் பொறுத்தவரை விடுதலை இயக்கங்களின் நடவடிக்கைகளால் சந்தேகமும் முரண்பாடுகளும் மோதல்களும் அதிகரித்தனவே தவிர ஒன்றிணைந்து போராடுவதற்கான வாய்ப்பே இருக்கவில்லை.

மலையகத் தமிழர்கள் பரந்த அர்த்தத்தில் தமிழர் என்ற அடையாளத்துக்குள் வருவார்கள். என்றாலும் தமிழ் ஈழம் என்னும் கோரிக்கையின் புவியியல் எல்லைக்கு அப்பால் மத்திய இலங்கையில் சிங்களப் பெரும்பான்மைப் பிரதேசத்தில் வாழ்பவர்கள் அவர்கள். தமிழ் ஈழம் புவியியல்ரீதியில் அவர்களை உள்ளடக்காது. ஆனால் இலங்கை முஸ்லிம்கள் அப்படியல்ல. நான் ஏற்கனவே கூறியபடி அவர்கள் மொழியை அன்றி மதத்தையே தம் இனத்துவ அடையாளச் சின்னமாக ஏற்றுக்கொண்டவர்கள். அதனால் அவர்கள் தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. அதேவேளை மொத்த இலங்கை முஸ்லிம்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினரான வடக்கு - கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் ஈழ எல்லைக்குள் வாழ்பவர்கள். அவ்வகையில் தமிழ் ஈழக் கோரிக்கை இலங்கை முஸ்லிம்களைப் புவியில்ரீதியில் கூறுபடுத்தி இரண்டு தேசங்களில் இரண்டு பெரும்பான்மை மேலாண்மை ஆட்சியின்கீழ்ப் பலமற்ற சிறுபான்மையினராக மாற்றிவிடும் என்று அவர்கள் பயந்தார்கள். 1985க்குப் பின்னர் வெளிப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் அவர்களின் அச்சத்தையும் பாதுகாப்பின்மை உணர்வையும் ஆழப்படுத்தின. கப்பம் கேட்டல், வாகனங்களைப் பறித்தல், ஆட்கடத்தல், கொலைசெய்தல் என்பன இஸ்லாமியர் மத்தியில் எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்தின. கிழக்கில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிளவுபடுத்தி ஈழப்போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்த அரசாங்கமும் ஆயுதப்படைகளும் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தின. 1990ஆம் ஆண்டு இந்த முரண்பாட்டின் உச்சம் எனலாம். பல நூற்றாண்டுகளாக வடக்கையே தம் தாயகமாகக் கொண்டிருந்த எழுபதினாயிரத்துக்கு அதிகமான முஸ்லிம்கள் அனை வரும் உடுத்த உடையுடன் புலிகளால் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். இதே காலப்பகுதியில் கிழக்கிலங்கையில் மட்டும் ஆயிரத்துக்கு அதிகமான முஸ்லிம்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

  • இவ்விஷயத்தில் பிற இயக்கங்களின் பார்வை என்ன?

1990களில் புலிகள்தான் மேலாதிக்கம் உடைய இயக்கத்தினராகச் செயல்பட்டார்கள். 1985க்குப் பின் எல்லா இயக்கங்களும் புலிகளால் தடைசெய்யப்பட்டன. 1987இல் இந்திய அமைதிப்படை வந்தபின்னர் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பல அமைதிப்படையுடன் இணைந்து செயல்பட்டன. அமைதிப்படை போன பின்னர் அவற்றுள் சில அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டன. சில புலிகளுடன் ஐக்கியப்பட்டன. ஆனால் பெரும்பாலும் எல்லா இயக்கங்களுமே முஸ்லிம் எதிர்ப்புக் கருத்துநிலை உடையவைதான். ஈபிஆர்எல்எஃப்தான் இதை முதலில் நடைமுறையில் காட்டியது. பின்னர் புலிகள் இதைப் பெரிய அளவில் முன்னெடுத்தனர்.

  • இந்தக் கொலைகளுக்கான காரணம் என்ன?

அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டது, போராளிகளைக் காட்டிக்கொடுத்தது, ராணுவத்துடன் இணைந்து முஸ்லிம் ஊர்க்காவல் படை தமிழர்களைக் கொன்றது என்றெல்லாம் காரணங்கள் கூறப்பட்டன. அப்படியாயின் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டித்திருக்க வேண்டும். வடக்கிலிருந்து முஸ்லிம்களை முற்றாக வெளியேற்றியதையும் பல ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைப் படுகொலை செய்ததையும் எப்படி நியாயப்படுத்துவது? இலங்கை ராணுவம் தமிழர்களைக் கொன்றதை இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பு எனக் கூறலாம் என்றால் புலிகளின் செயல்பாட்டையும் அவ்வாறு சொல்வதில் தவறு இல்லை. இன மேலாண்மையும் இன முரண்பாடும்தான் இப்படுகொலைகளுக்குக் காரணங்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரை பொன்னம்பலம் இராமநாதனின் நிலைப்பாட்டைத்தான் புலிகளும் கொண்டிருந்தனர். அதாவது அவர்கள் மதத்தால் முஸ்லிம்களாய் இருந்தாலும் இனத்தால் தமிழர்கள்தான். ஆனால் இதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் ஈழத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய மேலாண்மைக்கு எதிராக இக்காலப்பகுதியில் முஸ்லிம் தேசியம் தீவிரத்துடன் எழுச்சியடைந்தது. இதன் விளைவாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கென்று தனி அரசியல் இயக்கமாக உருவாகியது. தமக்கு எதிராக எந்தச் சக்தியும் வளர்வதை விரும்பாத புலிகள் முஸ்லிம்களின் இருப்பை வன்முறைமூலம் துடைத்தெறிய முயன்றதன் வெளிப்பாடாகவே இந்த வெளியேற்றத்தையும் படுகொலைகளையும் கருத வேண்டும்.

  • ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கிடையில் ஏன் இவ்வளவு பிளவுகள் இருந்தன?

இது இயல்பானதுதான். எல்லா விடுதலைப் போராட்ட இயக்கங்களிலும் நாம் இதைப் பார்க்கலாம். தலைமறைவு, வன்முறை இயக்கங்கள் எல்லாம் சிறு சிறு குழுக்களாகப் பிளவுண்டு இயங்குவதைப் பல்வேறு நாடுகளிலும் நாம் காண முடிகிறது. இந்தப் பிளவுகள் கொள்கை வேறுபாட்டின் அடிப்படையிலானவை என்று மட்டும் சொல்லிவிட முடியாது. சில தனிப்பட்ட காரணங்கள் - ஆளுமைப் பிரச்சினைகள், அதிகாரப் போட்டி, அச்சம் என்பனவும் - இதற்குப் பின்னால் உள்ளன. தன் சொந்த அரசியல் காரணங்களுக்காக இந்தியாவும் இயக்கங்களுக்கிடையில் இருந்த ஒற்றுமையைச் சிதறடித்தது. அதைவிட முக்கியமானது அரசியல் வன்முறையும் அரசியல் சகிப்புத்தன்மையும் சகவாழ்வு நடத்த முடியாது என்பது.

  • தனி ஈழம் என்னும் கருத்தாக்கம் எப்படி உருவானது?

16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கேயர் இலங்கைக்கு முதலில் வந்தபோது வட இலங்கை தமிழ் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்தது. பிரித்த தானியருக்கு முந்தைய இந்தியாபோல் இலங்கையும் தனி ஒரு தேசமாக இருக்கவில்லை. தென்னிலங்கை மூன்று சிங்கள ராச்சியங்களாக இருந்தது. பிரித்தானியர் தான் ஒரே இலங்கையை உருவாக்கினர். அதேவேளை இனப் பிளவுகளுக்கும் அவர்களே வித்திட்டனர். சுதந்திரத்திற்குப் பின்னர் ஒரே நாடு என்னும் கொள்கை பொதுவாக எல்லாருக்கும் ஏற்புடையதாகவே இருந்தது. ஆனால் சிங்கள இன மேலாண்மை தமிழர்களைத் தனிமைப்படுத்திய பின்னணியில்தான் ஆண்ட பரம்பரை என்ற கருத்தும் தமிழ் ஈழக் கோரிக்கையும் உருவாயின.

  • மலையகத் தமிழர்கள் இந்த ஆயுதப் போராட்டங்களால் பாதிக்கப்பட்டார்களா?

மிக மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். ஏற்கனவே அவர்கள் மிகவும் பலவீனமான சமூகமாக இருந்தார்கள். ஆயுதப் போராட்டத்தின் மூலம் இன முரண்பாடு கூர்மையடைந்து தமிழர்களுக்கெதிரான இன வன்முறைகள் வெடித்தபோதெல்லாம் (1977, 1981, 1983) தமிழர் என்ற அடையாளத்தால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.

  • மலையகத் தமிழர்கள் அனைவருக்கும் இப்போது குடியுரிமை அளிக்கப்பட்டுவிட்டதா?

பெரும்பான்மையானவர்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டது என்றுதான் நினைக்கிறேன். அவர்களின் தொகை இன்று சுமார் பத்து லட்சம் இருக்கும். அவர்களில் சிலர் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள், அரசாங்கப் பணிகளில் இருக்கிறார்கள், வேறு பல தொழில்களும் செய்கிறார்கள். எனினும் மிகப் பெரும்பாலோர் இன்னும் தோட்டங்களிலேயே வாழ்கிறார்கள். இளைஞர்கள் தோட்டங்களைவிட்டு வெளியேறும் போக்கும் காணப்படுகிறது. இன்று இலங்கையில் சமூக, பொருளாதாரரீதியில் மிகவும் பின்தங்கிய சிறுபான்மைச் சமூகம் என்று இவர்களையே சொல்ல வேண்டும்.

  • இந்த மூன்று இனக் குழுக்களுமே தமிழர் என்னும் அடிப்படையில் பாதிப்புக்குள்ளாகும்போது அவர்கள் ஒன்றிணையும் வாய்ப்புதானே உள்ளது?

அப்படிச் சொல்ல முடியாது. மூன்றுமே தமிழ் பேசும் இனங்களாக இருந்தாலும், நான் ஏற்கனவே சொன்னதுபோல இவர்களது அரசியல் பொருளாதார நலன்கள் வெவ்வேறாக இருக்கும்போது இது சாத்தியமல்ல. ஆனால் இவர்கள் எல்லாரும் சிறுபான்மையினர் என்ற வகையில் ஒரு பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தங்கள் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராட முடியும். ஆனால் அத்தகைய பொது நோக்குடைய அரசியல் தலைமைகள் இங்கு உருவாகவில்லை.

  • ஈழப் போராட்டம் என்பதை இப்படித்தான் பார்க்க வேண்டுமா?

ஆம். இங்கே தமிழ்நாட்டில் இருப்பவர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியிலும் ஒரு ஒற்றைப் பார்வைதான் இருக்கிறது. ஆனால் இலங்கையில் யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது. தனி ஈழம் அல்லது தமிழ் ஈழம் என்பது தமிழ் பேசும் எல்லா மக்களுக்குமானதல்ல. அது அடிப்படையில் யாழ்ப்பாண மையச் சிந்தனையின் வெளிப்பாடுதான்.

  • வரலாற்றிலும் எல்லாளன், துட்டகாமினி இருவருக்குமான மோதல்கள் இருந்தன. இன்றைக்கும் இந்த இன மோதல் தொடர்ந்துகொண்டிருக்கிறதல்லவா?

இன மோதல் வரலாற்றுக் காலம் தொட்டு இருப்பதாகக் கூறுவது தவறு. எல்லாளனுக்கும் துட்டகாமினிக்கும் இடையிலான மோதல் இன அடிப்படையிலான மோதல் என்று சொல்ல முடியாது. அது அரச பரம்பரை, ஆட்சியதிகாரம் தொடர்பானது. இன்றைய இன முரண்பாட்டுடன் அதைத் தொடர்புபடுத்தக் கூடாது. இன்று நாம் பேசும் இனத்துவம், இன அடையாளம், இன முரண்பாடு என்னும் கருத்துகள் நம் காலத்துக்கே உரியவை. பல வரலாற்றாசிரியர்கள் பலர் இதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

  • தமிழ் பேசும் மக்களிடையே உள்ள இந்த அடையாள வேறுபாடு இலக்கியத்தில் என்ன தாக்கங்களை ஏற்படுத்தியது?

சமகால இலங்கைத் தமிழ் இலக்கியம் பெரும்பாலும் இந்த அடையாள அரசியலின் வெளிப்பாடாகவே உள்ளது எனலாம். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலிருந்தே யாழ்ப்பாணத் தமிழ் இலக்கிய வெளிப்பாடுகளில் கிறிஸ்தவ, சைவ அடையாள மரபுகள் வேரூன்றிய போதிலும் அவற்றுக்கிடையே முரண்பாடுகள் நிலவியதாகத் தெரியவில்லை. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கைத் தமிழர்களின் - குறிப்பாக யாழ்ப்பாணச் சைவ வேளாளர்களின் - கருத்துநிலை வெளிப்பாடாக ஆறுமுக நாவலரின் செயற்பாடுகளை நாம் கருதலாம். சைவத் தமிழ் அடையாளத்தையே ஆறுமுக நாவலர் வலுவாக முன்வைத்தார். அது கிறிஸ்தவத்துக்கு எதிர்வினையாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை யாழ்ப்பாணச் சிந்தனையின் மையமாக இதுவே விளங்கியது. ம. வே. திருஞானசம்பந்தம் பிள்ளையின் கோபால நேசரத்தினம் என்னும் நாவல் சைவ வேளாள, கிறிஸ்தவ முரண்பாட்டின் வெளிப்பாடாகவே அமைகிறது.

1950கள்வரை யாழ்ப்பாணத் தமிழர்களின் இலக்கிய வெளிப்பாடு பெரிதும் தமிழ்ப் பண்பாட்டில் மையங்கொண்டிருந்தது. 1950க்குப் பின் மொழி உரிமைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு மொழித் தேசியவாதம் மேற்கிளம்பியபோது மொழி உரிமைக்கான வீரார்ந்த அரசியல் கவிதைகள் தோன்றின. 1980க்குப் பின் இன முரண்பாடு தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமாக வடிவம் பெற்றபின் கடந்த முப்பது ஆண்டுக்கால ஈழத் தமிழர்களின் இலக்கிய வெளிப்பாடு பெரிதும் தமிழ்த் தேசியக் கருத்துநிலையை உள்ளடக்கமாகக் கொண்ட போர்க்கால இலக்கியமாகவே அமைந்துள்ளது. இதில் கிழக்கிலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளின் பங்களிப்பும் கணிசமானது.

1885இல் வெளிவந்த இலங்கையின் முதல் நாவலாகக் கருதப்படும் சித்திலெப்பையின் அசன்பே சரித்திரம் இஸ்லாமிய அடையாள உணர்வின் வெளிப்பாடுதான். 1950களில் பெரிதும் ஸ்தாபனமயப்பட்டுவிட்ட முஸ்லிம் அடையாளத்தைப் புரட்சிக் கமால் முதலில் தன் கவிதைகளில் பதிவுசெய்தார். இவர் கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர் என்பது முக்கியக் கவனத்துக்குரியது. 50களிலிருந்து முஸ்லிம்களின் வாழ்க்கையை அப்படையாகக் கொண்ட படைப்புகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. 80களின் பிற்பகுதியிலிருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களின் - குறிப்பாக விடுதலைப் புலிகளின் - ஒடுக்குமுறைக்கு எதிர்வினையாக முஸ்லிம் படைப்பாளிகள் ஏராளமாக எழுதினர்.

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மலையகத் தமிழ் அடையாளம் 1920களில் வெளிப்படத் தொடங்கியது. கோ. நடேசையர், அவருடைய மனைவி மீனாட்சியம்மாள் ஆகியோர் அரசியல் பிரக்ஞை உள்ள மலையக இலக்கியத்தின் முன்னோடி கள் எனலாம். பிறிதொரு முக்கியமான தொழிற்சங்கவாதியான சி. வி. வேலுப் பிள்ளை 1940, 50களில் புதிய மலையக இலக்கியத்தின் உருவாக்கத்தில் முக்கியப் பங்குவகித்தார். தேயிலைத் தோட்டத்திலே என்ற அவரது ஆங்கில நெடுங்கவிதையும் வீடற்றவன், இனிப்படமாட்டேன் முதலிய அவரது நாவல்களும் புதிய மலையக இலக்கியத்துக்கு வித்திட்டவை. மலையகத் தேசியம் என இனங்காணக்கூடிய சமூக, அரசியல், பண்பாட்டு எழுச்சி 1960களிலிருந்தே மலையகத்தில் தீவிரமாக வெளிப்பட்டது. தெளிவத்தை ஜோசப், என். எஸ். எம். ராமையா ஆகியோர் இதன் இலக்கிய வெளிப்பாட்டின் முக்கியமான முன்னோடிகள்.

மூன்று வேறுபட்ட இனக் குழுமத்தினர் தமிழ் என்னும் ஒரே மொழியைப் பகிர்ந்துகொண்டு தங்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளை, தங்களது பார்வைகளை இலக்கியத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இத்தன்மையைப் போர்க்கால இலக்கியங்களிலும் காண முடியும். உதாரணமாக 1984இல் வெளிவந்த மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பை எடுத்துக்கொள்ளலாம். அதில் பெரும்பாலும் யாழ்ப்பாணப் படைப்பாளிகளின் பங்களிப்பு தான் அதிகம் இருக்கும். யாழ்ப்பாணத் தமிழர்மீது மேற்கொள்ளப்பட்ட ராணுவ ஒடுக்குமுறையின் பதிவுகள் அதில் பெரிதும் இடம்பெற்றிருக்கும். பின்னர் 2000 ஆண்டில் கிழக்கிலிருந்து மீசான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் என்னும் தொகுதி வெளிவந்தது. இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கவிதைகள் முஸ்லிம் படைப்பாளிகளால் எழுதப்பட்டவை. அவை அனைத்தும் விடுதலை இயக்கங்கள் முஸ்லிம் மக்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளைப் பதிவுசெய்தவை.

  • இறுதி யுத்தத்தின் முடிவு இந்த மூன்று இனக் குழுக்களின் நிலைப்பாடுகளில் என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது?

இலங்கையின் எல்லாச் சிறுபான்மையினரையும் அது மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது. சிங்கள பௌத்த தீவிரத் தேசியவாதத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது. இதுதான் புலிகளின் இந்த 30 ஆண்டுக்காலப் போரின் பலன் என்பது துயரமான விடயம். சிங்கள இதழ் ஒன்றுக்கான நேர்காணலில் “புலிகள் தமிழ் மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டு நந்திக் கடலில் மூழ்கிவிட்டனர்” எனச் சொல்லியிருந்தேன். இதுதான் யதார்த்தம். புலிகளின் தோல்விக்குப் பல்வேறு காரணங்கள் கூறலாம். என்றாலும் பிரதான காரணம் புலிகளின் தற்கொலை அரசியல்தான். ஈழத் தமிழ் மக்களிலிருந்தும் ஏனைய இலங்கை மக்களிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் சர்வதேச நாடுளிலிருந்தும் அவர்கள் தனிமைப்பட்டதற்கு அதுதான் காரணம். தமிழ் ஈழ மாயையில் மூழ்கியிருந்த புலம்பெயர்ந்த தமிழர்களையும் தமிழகத் தமிழர்களையும் தவிர அவர்களுக்கு நேச சக்திகள் என்று யாருமே இருக்கவில்லை. இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எல்லோரும் குற்றம்சாட்டுவது போல இலங்கை அரசுக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ அதேயளவு பங்கு புலிகளுக்கும் இருக்கிறது. அவர்கள்தான் தங்களோடு மக்களையும் இழுத்துச் சென்றனர்.
இத்தோல்வியை விமர்சனபூர்வமாக அணுக யாரும் தயாராக இல்லை.
தமிழ்நாட்டிலும் சரி புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி ஒற்றைப் பார்வை அணுகுமுறையுடன் தான் இருக்கிறார்கள்.

  • இந்த 30 வருடப் போராட்டத்திற்கும் இத்துணை இழப்புகளுக்கும் பிறகு இது போன்ற துயரம் தொடரக் காரணம் புலிகளின் அணுகுமுறைதானா?

அப்படித்தான் நான் சொல்லுவேன். புலிகள் இயக்கம் அடிப்படையிலேயே ஒரு ராணுவ அமைப்புத்தான். அவர்களுக்கு என்று தெளிவான, யதார்த்தமான அரசியல் பார்வை இல்லை. அரசியல் நெளிவுசுளிவுகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. 1987இல் இந்திய நிர்ப்பந்தத்தால் வந்த தீர்வை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொண்டு, தங்களை ஸ்திரப்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இது போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டார்கள். மக்களை அரசியல்மயப்படுத்தி மக்கள் சக்தியில் நம்பிக்கை வைக்காமல் ஆயுத முனையில் மக்களை வழிநடத்தினார்கள். தாங்கள், தாங்கள் மட்டுமே, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதில் உறுதியாக நின்றார்கள். தங்களுடன் கருத்துவேறுபட்டவர்களை எல்லாம் துரோகிகள் என்று அழித்தார்கள். அவர்கள் நம்பியிருந்த ஆயுதப்போர் என்னும் ஒற்றை அணுகுமுறையால் முதலில் தங்கள் மக்களிடமிருந்தே அன்னியப்பட்டார்கள். பிறகு வெளியிலிருக்கும் எல்லா ஆதரவுச் சக்திகளையும் இழந்தார்கள். அவர்களின் தோல்வி என்பது தவிர்க்க முடியாத தற்கொலைதான்.

  • தமிழ் பேசும் மக்களுக்குரிய அரசியல் எதிர்காலம் என்ன?

அது பெரிய கேள்விக்குறிதான். அவர்களின் அடிப்படை வாழ்வே கேள்விக்குள்ளாகி இருக்கிறது. சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாதிருக்கிறது. இன்றைய நிலைமையில் சிங்களத் தீவிரவாதம்தான் மேலோங்கியுள்ளது. அது சிறுபான்மையினரின் உரிமைக்குச் சாதகமாக இல்லை. தோல்வியில் முடிந்த முப்பது ஆண்டு யுத்தம் சிறுபான்மையினரின் அரசியலைச் சிக்கலான இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அது அண்டிப் பிழைப்போரின் அரசியலாகியிருக்கிறது. மைய நீரோட்டத்தில் மாற்றங்கள் ஏற்படாதவரையில் இது தொடரும் என்றுதான் தோன்றுகின்றது.

  • மீண்டும் போராட்டம் உருவாவதற்கு வாய்ப்புகள் எவையும் தென்படுகின்றனவா?

இல்லை. புலம்பெயர் தமிழர்கள் இன்னும் தமிழ் ஈழக் கனவில் இருக்கிறார்கள். நாடுகடந்த தமிழ் ஈழம் ஒன்றையும் பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள். அது அவர்களின் வாழ்தலுக்கான முயற்சியாகவே தெரிகிறது. ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு அது எந்தவகையிலும் உதவாது. இன்னொரு வகையில் அந்தப் பூச்சாண்டியைக் காட்டித்தான் இலங்கை அரசு ராணுவ முகாம்களைப் பலப்படுத்துகிறது. சிங்களத் தீவிரவாதத்தைப் பலப்படுத்தும் பிறிதொரு செயற்பாடுதான் இது. இதைவிட்டுப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயனுள்ள காரியங்கள் எத்தனையோ செய்யலாம்.

  • முகாமில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் எப்படி இருக்கிறது?

பெரும்பாலான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வாதாரம் இன்னும் சீர்பெறவில்லை. அவர்களின் நிலங்கள் இன்னும் முற்றாக அவர்களிடம் கையளிக்கப்படவில்லை. வடக்கு - கிழக்கிலுள்ள ராணுவ முகாம்கள் எவையும் விலக்கிக்கொள்ளப்படவில்லை. பதிலாகப் புதிய முகாம்கள் அமைக்க முயல்வதாகத் தெரிகிறது.

  • புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள்; இனியாவது சிறுபான்மையினரின் பிரச்சினைகளை இனங்கண்டு பேச அரசு தயாராக வேண்டும். அப்படி இல்லாதபோது இதை முன்னெடுக்க ஜனநாயகரீதியான இயக்கங்கள் இப்போது அங்கே இருக்கின்றனவா?

ஆக்கபூர்வமான வலுவான இயக்கங்கள் எவையும் இல்லை. முப்பதாண்டு யுத்தமும் அதன் இறுதி வெற்றியும் அரசின் கரங்களைப் பலப்படுத்தியிருக்கின்றன. ஆட்சியாளர்களின் கைகளில் அதிகாரத்தைக் குவித்திருக்கின்றன. எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்தியிருக்கின்றன. ஜனநாயகப் போராட்டங்களுக்கான கதவுகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்க் கட்சிகளிடம் புதிய பார்வை இல்லை. அவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்துகொண்டுதான் உள்ளனர். ஆனால் தீர்வுக்கான முனைப்பு எதுவும் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. என்ன தீர்வு என்பதில் இன்னும்தான் ஒருவருக்கும் தெளிவும் இல்லை

  • இலங்கையில் கல்வி எப்படி இருக்கிறது?

போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் கல்வி பாதிக்கப்படவில்லை. முகாம்களில் இருந்துகூட மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்தப் போரால் சுமுகமான கல்விச் சூழல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. அரசு கல்விக்கு ஒதுக்கும் நிதி போதாது என்ற குற்றச்சாட்டும் உண்டு. யுத்தத்துக்குப் பின் ராணுவச் செலவீடுகள் குறைந்து சமூக நலத்துறைகளுக்கு அதிக ஒதுக்கீடுகள் இருக்கும் என எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால் நடைமுறை அதற்கு மாறாக இருக்கிறது.

  • இலங்கையில் தமிழ்க் கல்வி எப்படி இருக்கிறது? சிங்கள இனவாத அரசாங்கத்தால் அதற்குச் சிக்கல் இருக்கிறதா?

தமிழ்நாட்டைவிடத் தமிழ்க் கல்விக்கான வாய்ப்புகள் இலங்கையில்தான் அதிகமாக இருக்கின்றன. சிங்களம் மட்டும் ஆட்சிமொழியாக இருந்த காலத்திலும்கூடப் பல்கலைக்கழகம்வரை கல்வி மொழி சிங்களமும் தமிழும்தான். இந்த நிலைமை தமிழ்நாட்டில்கூட இல்லை. அந்தவகையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான வாய்ப்பு இலங்கையில் சிறப்பாக இருக்கிறது. ஆயினும் உலகமயமாக்கலின் விளைவாக இலங்கை அரசு சமீபகாலமாக ஆங்கிலக் கல்விக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. சமுக மனப்பாங்கும் ஆங்கிலத்தை நோக்கித் திரும்புகிறது. இதைத் தவிரக் கடந்த 50 வருடங்களாக உயர்கல்விவரை தமிழ்வழிக் கல்வி உரிமைக்கு வேறு சவால்கள் இல்லை.

  • பாடத்திட்டங்களில் தமிழர்களுக்குப் புறக்கணிப்பு இருக்கிறதா?

பள்ளி மட்டத்தில் பாடத்திட்டங்கள் ஒருமுகப்பட்டவை. மொழி, சமயம் தவிர்ந்த அனைத்துப் பாடத் திட்டங்களும் பாட நூல்களும் சிங்கள, தமிழ் மொழிமூலம் கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவானவைதான். ஆனால் மொழி, மதம் தவிர்ந்த பாடத் திட்டங்களை உருவாக்குவதில் சிறுபான்மையினரின் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கிறது. இப்பாடத் திட்டங்கள், பாடநூல்கள் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டுப் பின்னர் தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இதனால் வரலாறு, சமூகக் கல்வி போன்ற பாடநூல்களில் சில சமயங்களில் பெரும்பான்மை இன மேலாண்மை நுழைந்துவிடுகிறது.

  • போர்க்கால இலக்கியம் பற்றி . . .

போர்க்கால இலக்கியம் 1970களுக்குப் பிந்தைய அரசின் அடக்குமுறைகள், போர் அவலங்கள், விடுதலை இயக்கங்களின் வன்முறைகள் முதலியவற்றைப் பிரதிபலிப்பவை. மிகப் பெரும்பான்மையான சமகால இலங்கைப் படைப்புகள் போர்க்கால வாழ்வைச் சொல்பவையாகவே இருக்கின்றன. இது கவிதைகளில் தீவிரமாக வெளிப்பட்டது. நாவல், சிறுகதைகளிலும் இதன் தாக்கம் ஆழமானது. இவை வெளிப்படையாக அரசியல் பேசும் இலக்கியம்தான். தமிழ்நாட்டு இலக்கியத்தில் வெளிப்படையான அரசியல் மிகக் குறைவு. அரசியல் இலக்கியத்துக்கு உரியதல்ல என்ற கருத்தும் இங்கே வலுப்பெற்றுள்ளது. ஆனால் இலங்கை இலக்கியத்தின் அடிப்படையே அதுதான். தமிழ்நாட்டிலுள்ள அதிநவீன எழுத்தாளர்கள் சிலர் இத்தகைய எழுத்தை இலக்கியமாக ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இது வெறும் அரசியல், இலக்கியமே அல்ல. இக்கண்ணோட்டத்தில் பார்த்தால் மூன்றாம் உலக நாடுகளின் மிகப் பெரும்பாலான எழுத்தை வெறும் பிரசாரக் குப்பை என ஒதுக்க வேண்டியிருக்கும். தமிழ்நாட்டுக் கவிதைகள் பெரும்பாலும் சமூகப் பிரச்சினைகள் தாண்டிய, தனி உணர்வு சார்ந்தவையாகவே உள்ளன. இது எனக்கு உவப்பானதாக இல்லை. எழுத்தாளனுக்குச் சமூகப் பார்வை வேண்டும் என்பதே இங்கே சிலரால் கேலியாகப் பார்க்கப்படுகிறது. எனினும் சமகாலத்தில் இங்கே உருவான தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்பன படைப்பாளியின் சமூக அரசியல் கடப் பாட்டின் வெளிப்பாடுகளாக அமைந்தன என்பதைக் குறிப்பிட வேண்டும்.

  • இந்த யுத்தம் ஒரு வணிக யுத்தமா? இந்த யுத்தத்துக்குப் பிறகு சீனா இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பிருக்கிறதா?

எல்லாப் பிரச்சினைகளுக்கும் அக, புறக் காரணிகள் இருக்கின்றன. இந்தப் போர் மூன்று தசாப்தங்கள் நீண்டதற்கும் இறுதியில் அது பெரும்பான்மையினரின் வெற்றியாக அமைந்ததற்கும் அடிப்படையாக அமைந்த அகக் காரணிகளை நாம் முதலில் பார்க்க வேண்டும். அதை நான் ஏற்கனவே ஓரளவு விளக்கினேன். அகக் காரணிகள் இடமளிக்காதவரை புறக் காரணிகள் ஆதிக்கம் செலுத்த முடியாது.

இலங்கையின் புவியமைப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. இதைத் தங்களுடைய நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் விரும்புகின்றன. இலங்கையின் அகப் பிரச்சினைகளை இவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர். உறுதியான கட்டமைப்புள்ள கியூபாவில் அமெரிக்காவால் உள் நுழைய முடியவில்லை. ஆனால் இலங்கை அப்படியல்ல. இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகள் வெளிச்சக்திகளின் தலையீட்டுக்குச் சாதகமாக உள்ளன. இலங்கையின் ஆளும் வர்க்கம் தரகு முதலாளிபோல் செயல்படுகிறது. சீனாவைவிட இந்தியாவின் ஆதிக்கம்தான் இலங்கையில் அதிகம் என்று சொல்வேன். விடுதலை இயக்கங்களை உருவாக்கியதிலும் பின்னர் அவற்றை அழித்ததிலும் இந்தியாவின் பங்கே அதிகம்.

  • இது பற்றி இலங்கையில் உள்ள அறிவுஜீவிகளிடம் விழிப்புணர்வு இருக்கிறதா?

இது பற்றிச் சிலர் சிந்திக்கிறார்கள், எழுதுகிறார்கள். ஆனால் அவற்றின் செயல்பாட்டு முக்கியத்துவம் கேள்விக்குறிதான்.

  • இலங்கையின் இடதுசாரிச் செயல்பாடு என்ன?

இடதுசாரி இயக்கம் இலங்கையில் தோல்வி என்றுதான் சொல்வேன். சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் பலமான இடதுசாரி இயக்கங்கள் இலங்கையில் இருந்தன. இன்றும் நடைமுறையில் இருக்கும் சமூகநலத் திட்டங்கள் சில உருவாவதற்கு அவர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். ஆனால் சுதந்திரத்துக்குப் பிந்தைய நாடாளுமன்றச் சந்தர்ப்பவாத அரசியலும் அதன் ஊடாக முன்னணிக்கு வந்த இன முரண்பாடும் மோதலும் இடதுசாரி இயக்கங்களைப் பலிகொடுத்து விட்டன. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி என்பன சிங்களப் பேரினவாதத்துடன் சமரசம் செய்துகொண்டன. இடதுசாரிப் படிமத்துடன் தீவிர அரசியல் இயக்கமாக முன்னணிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) இனவாதக் கட்சியாகத் தன்னை இனங்காட்டிக்கொண்டது. இன்று இலங்கையில் வலிமையான இடதுசாரிக் கட்சி என எதுவும் இல்லை. எனினும் சிறிய கட்சிகள் சில இன்னும் இயங்குகின்றன. எனினும் அவர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதில்லை.

தொழிற்சங்கங்கள் இன்று அரசியல் கட்சிகள் சார்ந்தே இயங்குகின்றன. கட்சியின் நிலைப்பாடு எதுவோ அதுவே அவர்களின் நிலைப்பாடு. தனித்துவமான, வலுவான தொழிற்சங்க இயக்கம் எதுவும் இல்லை. ஒருவகையில் பார்த்தால் இது அந்நிய மூலதனத்தின் விளைவு எனலாம். நாம் அவர்களின் கைப்பாவைகளாக இருக்கிறோம்.

  • இந்தத் தோல்விக்கு சாதியமைப்பு ஒரு காரணமா?

அப்படிச் சொல்ல முடியாது. இன முரண்பாடுதான் காரணம் என்று எனக்குத் தோன்றுகின்றது. இன முரண்பாடு வர்க்க, சாதி வேறுபாடுகளை மூடிமறைத்துவிடுகிறது. வர்க்க அடிப்படையில் மூவின மக்களும் ஒன்றிணைந்து போராடுவதற்கான பாதையை அது மூடிவிட்டது. சாதியமைப்பு இலங்கையில் உறுதியாக இருக்கிறது. இது சிங்கள, தமிழ்ச் சமூகங்கள் இரண்டுக்கும் பொதுவானது. 1960களில் யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்புக்கு எதிராக இடதுசாரி இயக்கங்கள் தான் தீவிரமாகப் போராடின. 80களில் விடுதலை இயக்கங்களின் வளர்ச்சி சாதி உணர்வை ஓரளவு மட்டுப்படுத்தியது. ஆனாலும் தமிழர் மத்தியில் சாதிக் கண்ணோட்டம் குறைந்ததாகத் தெரியவில்லை.

  • திராவிட இயக்கங்களின் பாதிப்பு என்னவாக இருந்தது?

1950, 60களில் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கு இருந்தது. இப்போது அப்படி எதுவும் இல்லை. 1960, 70களில் மார்க்சியச் சிந்தனை மேலோங்கி இருந்தது. 80களில் மேலேழுந்த இன முரண்பாட்டில் இந்தச் சிந்தனைகள் எல்லாம் அள்ளுண்டுபோயின.

நன்றி:காலச்சுவடு

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com