முதலாவது ஒழுங்குப் பிரச்சினை
8ஆவது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வின் போதே முதலாவது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பப்பட்டது. பிவித்துரு ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில், உரையாற்றிக் கொண்டிருந்த போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினர்.
உதயன் கம்பன்பில தனதுரையில், ஆயுதம் தொடர்பில் ஏதோ கூறிக்கொண்டு போகும் போதே, பிரதமரால் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பப்பட்டது. இதன்போது இடைமறித்த சபாநாயகர் கருஜயசூரிய, கம்பன்பிலவின் உரையை வரையறுத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தார்.
தந்தையும் மகனும் செல்பி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவான மஹிந்த ராஜபக்ஷவும் அதே கூட்டமைப்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு தெரிவான அவரது மகனான நாமல் ராஜபக்ஷவும் நாடாளுமன்றத்துக்குள் வைத்து செல்பி (தன்னை அல்லது தங்களை தாங்களாகவே படம் எடுத்துகொள்ளல்) எடுத்து கொண்டனர்.
12 வருடங்களுக்கு பின்னர்
தம்பதிகள்
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் திகாமடுலை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவான தயா கமகேவும், அக்கட்சியிலிருந்து தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான அவரது மனைவியான அனோமா கமகேயும் எம்.பி.க்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இறுதியாக நாடாளுமன்றத்தில் தம்பதிகளாக இன்றைக்கு 12 வருடங்களுக்கு
முன்னர் மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்
போட்டியிட்டு தெரிவான ரொணி டி மெல் மற்றும் அவரது மனைவியான மெலி டி
மெல் தம்பதிகள் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நியமிக்கப்படாத மூவர்
நாடாளுமன்றம், நாளை 3ஆம் திகதி மீண்டும் கூடும் போது எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படவுள்ளார். இந்த கன்னியமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா மற்றும் எதிர்க்கட்சி முதற்கோலாசான் ஆகிய மூவரும் நியமிக்கப்படவில்லை.