Contact us at: sooddram@gmail.com

 

புளொட் தலைவரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரு​மான திரு. தர்மலிங்கம் சித்தார்த்​தன் அவர்கள் அத தெரண இணையத்தின் சந்திப்பு நிகழ்ச்சியி​ல் பங்கேற்று வழங்கிய நேர்காணல்

ஊடகவியலாளர் - வணக்கம் சித்தார்த்தன் ஐயா அவர்களே!

திரு.சித்தார்த்தன் - வணக்கம்!

கேள்வி: உங்களுடைய அரசியல் பிரவேசம் தொடர்பாக தெரிந்துகொள்ள விரும்புகின்றோம். அதுபற்றி கூறமுடியுமா?

பதில்: அரசியலில் நான் நீண்டகாலமாக இருக்கிறேன். 60, 70களில் தொடங்கி சாத்வீகப் போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கின்றேன். பின்பு சாத்வீகப் போராட்டங்கள் வெற்றியளிக்காமல் அவை ஆயுதரீதியாக நசுக்கப்பட்டபோது ஆயுத ரீதியாக நசுக்கப்பட்ட எங்கள் போராட்டங்களை ஆயுத ரீதியாகத்தான் சந்திக்க வேண்டுமென்ற ஒரு நிலை வந்தபோது நாங்களும் அந்த ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொள்ளவேண்டிய தேவை அப்போது இருந்தது. ஆரம்ப காலங்களில் தமிழ்ப் புதிய புலிகள் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளாக மாறியபோது அதன் தலைவராக இருந்தவர் எமது இயக்கத்தின் தலைவர் உமாமகேஸ்வரன் அவர்கள். 80ம் ஆண்டு உமாமகேஸ்வரனுக்கும் பிரபாகரனுக்கும் ஏற்பட்ட பிரச்சினைகளால் இரண்டாக உடைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய புளொட் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே நான் நீண்டகாலம் சாத்வீகப் போராட்டங்களில் ஈடுபட்டு பின்பு ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொண்டேன். ஆயுதப் போராட்டத்தில் என்னை இணைத்துக் கொண்டிருந்தும் என்றுமே நான் ஆயுதரீதியான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை, முற்றுமுழுதாக அரசியல் ரீதியான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்திருக்கின்றேன். இவ்வாறு நீண்டகாலமாக அரசியல் இருக்கின்றேன். திம்புப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியிருக்கின்றேன். பின்பு வன்னி மாவட்டத்தை பாராளுமன்ற அங்கத்தவராக ஏறக்குறைய 10வருடங்கள் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கின்றேன். இப்படியாக எனது அரசியல் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது.

கேள்வி: புளொட் அமைப்பு தமிழ் மக்களுக்காக இதுவரை என்ன செய்துள்ளது?

பதில்: ஆயுதப் போராட்டமாக ஆரம்பித்து 80களிலே நாங்கள் வடகிழக்கில் மிகப்பெரிய ஒரு இயக்கமாக இருந்தோம். பின்பு எங்களுடைய பிழைகளுமாக ஆயுதக் கொள்வனவில் ஏற்பட்ட தடங்கல்களால் இந்திய அரசுடன் எமக்கிருந்த சில கருத்து வேறுபாடுகளால் எமது இயக்கம் ஆயுத ரீதியாக பலவீனமடைந்தாலும் மக்களை அணிதிரட்டுவதிலே, மக்களை அரசியல்மயப்படுத்துவதிலே முனைப்புடன் ஈடுபட்டிருந்தோம். வன்னி மாவட்டத்தை எடுத்துக் கொண்டீர்களேயானால் வன்னி மாவட்டத்திலே மலையகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் 70களில் குடிபெயர்ந்து வந்தபோது அந்த மக்களை அங்கு குடியமர்த்தி, அந்த மக்களைப் பாதுகாத்தது மாத்திரமல்ல அந்த மக்களுக்கு ஒரு வழியைக் காட்டுவதற்கும் நாங்கள் பல சேவைகளைச் செய்திருக்கின்றோம். பின்பு 94ம் ஆண்டு முதன்முதலாக நாங்கள் வன்னி மாவட்டத்திற்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானோம். அதற்கு முன்பு வவுனியா நகரசபைத் தேர்தலிலே நாங்களே இந்த நகரசபையினைக் கைப்பற்றினோம். அந்தக் காலகட்டத்திலே வன்னி மாவட்டத்தின் பெரும்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருந்தது. இராணுவக் கட்டுப்பாட்டினுள் இருந்த வன்னி மாவட்டத்திற்கு வேறு எந்தவொரு கட்சியோ அல்லது அரசியல் அதிகாரத்தில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களோ செய்யாத, இன்றுகூட செய்யாத அளவுக்கு அந்த பகுதியை, நகரங்களை முன்னேற்றுவதிலே நாங்கள் பல வேலைகள் செய்திருக்கின்றோம். வைத்தியசாலைகள், கல்லூரிகள், பாடசாலைகளுக்கான கட்டிடங்கள், வீதிகள், கிராமங்களுக்கு மின்சார வசதிகள் என பல வேலைகளைச் செய்திருக்கின்றோம். எங்கள் கட்சியைப் பொறுத்தமட்டில் முழுமையாக மக்களுடன் நின்று மக்களின் தேவைகளை யுத்தம் நடந்த காலத்தில்கூட, தனியே அழிவுதான் போராட்டமென இருந்துவிட முடியாது. அந்த மக்கள் வாழவேண்டும். அந்த மக்களை வாழவைப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துக் கொண்டுதான் இருந்தோம். அன்று அந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்த காரணத்தினால்தான் அந்த பகுதிகளிலே வாழுகின்ற மக்கள் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ வைத்துக் கொண்டிருக்கின்றோம். இதை இன்றும் செய்கின்றோம். அங்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் மக்களோடு மக்களாக நின்று சேவை புரிகின்றோம். இலட்சக்கணக்கான மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வவுனியா நோக்கி வந்தபோது வந்தவர்களுக்கு உடனடியாக பல உதவிகளைச் செய்தோம். அவர்கள் வந்தபோது அரசாங்கம் உடனடியாக எதையுமே செய்யமுடியாது இருந்தபோது, அதிகாரிகள் எங்களைக் கேட்டுக் கொண்டார்கள் செய்யயக் கூடியதைச் செய்யுங்கள் என்று, அவர்களுக்குத் தேவையான உணவு வசதி, தண்ணீர் வசதி இப்படியான பல வேலைகளை எங்களுடைய கட்சி செய்தது, இப்போதும் செய்து கொண்டுதான் இருக்கின்றது.

கேள்வி: யுத்தம் நிறைவடைந்து இரு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. அத்துடன் சர்வதேசத்திலிருந்து கிடைக்கும் உதவிகளும் குறைவடைந்து வருகிறது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பதில்: தமிழ் மக்களுடைய போராட்டம், ஏறக்குறை சுதந்திரம் பெற்றநாள் துவக்கமே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. உங்களுக்குத் தெரியும், சுதந்திர இலங்கையின் முதலாவது சட்டமே 10லட்சம் மலையகத் தமிழர்களுக்கு வாக்குரிமை இல்லாமற் பண்ணியது. அன்று தொடக்கமே எங்களுடைய போராட்டங்கள் ஆரம்பித்து விட்டன. 60வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் போராடி வருகின்றார்கள். இந்த இரண்டு வருடங்கள் அல்ல 60வருடமாக போராடி வருகிறோம். தமிழ் மக்களுடைய நியாயபூர்வமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. பல ஒப்பந்தங்கள் எழுதப்பட்டன, கிழித்தெறியப்பட்டன, கடைசியாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தில்கூட வடகிழக்கிற்காக ஒரு மாகாணசபை உருவாக்கப்பட்டு அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. இப்போது யுத்தம் முடிவடைந்தவுடன் மக்கள் நிச்சயமாக நம்பினார்கள், ஒரு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும், ஒரு நியாயமான, அமைதியான வாழ்க்கை கிடைக்குமென்று, அது நிச்சயமாக இன்னும் கிடைக்கவில்லை. அதை விடுத்து அங்கு இன்னும் கட்டுப்பாடுகள், நில அபகரிப்புக்கள் இப்படியான பல விசயங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவைகளுக்கெதிராக நாங்கள் குரல் கொடுக்கின்றோம். எங்களைப் பொறுத்தமட்டில் இயலுமான அளவுக்கு அரசுடன் கதைக்கக்கூடிய விடயங்களைக் கதைக்கின்றோம். ஆனால் சில விசயங்களிலேயே அரசு சரியான முறையில் அந்த மக்களைக் கையாளவில்லை. அங்குள்ள மக்கள் இன்றும் பயத்துடன் வாழ்கின்றார்கள். அங்கு ஒரு சரியான அமைதி ஏற்படவில்லை. தீர்வு விசயத்தைப் பொறுத்தமட்டில் அரசு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் பல பேச்சுவார்த்தைகளைப் பார்த்திருக்கின்றோம். பண்டா செல்வா, டட்லி செல்வா, திம்பு காலம் தொடக்கம் இப்படியான பல விசயங்கள் நடந்திருக்கின்றன. எதிலுமே ஒரு நியாயமான தீர்வை தமிழ் மக்களுக்கு கடந்துவந்த எந்த அரசும்கூட முன்வைக்கவில்லை. ஆகவே இந்த அரசு மிகப்பெரிய ஒரு நியாயமான தீர்வை முன்வைத்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகக்குறைந்தது இன்று அனைத்தையும் இழந்து, தங்களுடைய உயிரை மாத்திரம் காத்துக் கொண்டிருக்கின்ற வன்னியிலே வாழக்கூடிய மக்கள், யாழ்ப்பாணத்தில் இருக்கக் கூடியவர்கள், மட்டக்களப்பில் இருக்கக்கூடிய பல மக்கள் வாழுகின்றார்கள், பட்டினியிலே வாழுகின்றார்கள். இவர்களையாவது அவர்கள் ஒரு சொந்த வாழ்க்கைகளை ஆரம்பிப்பதற்கு ஏதாவது உதவிகளைப் பெற்றுக்கொடுக்க முடியுமா என்பதுதான் எங்களுடைய முதலாவது கடமையாக இருக்கிறது. அதற்காக நான் தீர்வைப்பற்றி குறைவாகக் கூறவில்லை. இன்று நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக வடகிழக்கில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றது. கால தாமதமாகலாம். தீர்வு கிடைக்கும் என்று நான் நம்பிக் கூறவில்லை. ஆகக் குறைந்தது மேற்குறித்த அடிப்படை விசயங்களையாவது அடைந்துவிட வேண்டுமென்பதில் நாங்கள் அக்கறையாக இருக்கின்றோம்.

கேள்வி: தமிழ் அரங்கத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் இந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலில் போட்டியிட்டிருக்கலாமே, ஏன் போட்டியிடவில்லை?

பதில்: நல்ல கேள்வி, தமிழ் அரங்கம் என்று கூறுவது அது ஆரம்பித்தபோதே நாங்கள் மிகத் தெளிவாக எங்களுக்குள் விவாதித்திருந்தோம். தமிழ் அரங்கு என்பது ஒரு அரசியல் கூட்டு அல்ல. தமிழ் அரங்கம் என்று சொல்லுகின்ற விசயம் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சம்பந்தமாக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்ட ஒரு கருத்தை முன்வைப்பதற்காக, ஒன்றுபட்ட ஒரு பிரேரணையை முன்வைப்பதற்காக கூட்டப்படுகின்ற ஒரு அரங்கு. அந்த அரங்கிலே இருக்கின்ற கட்சிகள் விரும்பினால் அரங்கின் முழுக் கட்சிகளும் கூட்டாகவோ, அல்லது தனித்தனியாகவோ அல்லது வேறு கட்சிகளுடன் கூடியோ தேர்தல் என்று ஒன்று வந்தால் அதில் போட்டியிடலாமென்பதை ஆரம்பம் துவக்கமே நாம் கூறிவந்திருக்கின்றோம். ஏனென்றால் அதில் இருக்கின்ற கட்சிகள் மத்தியிலே எங்களுக்குள்ளே கருத்து வித்தியாசங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஈ.பி.டி.பியை எடுத்துக் கொண்டால், டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசாங்கத்திலே அமைச்சராக இருக்கின்றார். அவருக்கு மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து கேட்பதற்கு கஸ்ரமிருக்கிறது. எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் சுயாதீனமாக, சுதந்திரமாக ஒரு கட்சியாக இருப்பதையே விரும்புகின்றோம். அரசாங்கம் எந்தவிதமான ஒரு தீர்வுக்குமான சரியான ஒரு பிரேரணையை முன்வைக்காதபோது அவர்களுடன் சேர்ந்து கேட்பதால் தமிழ் மக்கள் மத்தியிலே ஒரு பிழையான அபிப்பிராயம் வந்துவிடும், அது மாத்திரமல்ல கட்டாயத்தில் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து கேட்கமுடியாது, தமிழ் மக்களுக்கு ஒரு சரியான தீர்வைக் கொடுக்காத வரையும் அவர்களுடன் கேட்கமுடியாது. அவர்களுடன் மாத்திரமல்ல எந்தவொரு பேரினவாதக் கட்சிகளுடனும் அல்லது தேசியக் கட்சிகளுடனும் நாங்கள் கேட்பதில்லை என்பதிலே மிகத் தெளிவாக இருக்கின்றோம். அதற்காக நான் டக்ளஸ் தேவானந்த அவர்களைப் பிழையாகக் கூற வரவில்லை. ஏனென்றால் அவர் நினைக்கின்றார், அரசாங்கத்துடன் இருந்து நான் முன்பு கூறியதுபோல படிப்படியாக சிலசில விடயங்களைச் செய்து கொண்டிருக்கலாம் என்று, ஆனால் நாங்கள் நம்புகிறோம் அரசுடன் சேர்ந்து கேட்பதனால் தமிழ் மக்களுடைய சுயாதீனம் அற்றுப் போய்விடும் என்று, ஆகவே இரண்டு பேருடைய அந்த வழிமுறைகளில்தான் சில வித்தியாசங்கள் இருக்கின்றதே தவிர அவரும் நிச்சயமாக தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வை முன்வைக்க வேண்டுமென்பதில் கவனமாகவே இருக்கின்றார். அது அவருடைய பாதை, இது எங்களுடைய பாதை.

கடந்த காலங்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் நாங்கள் அவர்களுக்கு எதிராகவே இருந்தோம். ஏனென்றால் அவர்கள் ஆரம்பிக்கப்பட்டபோது புலிகள் தான் ஏகப் பிரதிநிதிகள் என்பதை முன்நிறுத்தியே 2004ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனால் புலிகள் எந்தக் காலத்திலும் ஏகப் பிரதிநிதிகளாக இருக்கமுடியாது என, அது மாத்திரமல்ல ஒரு ஜனநாயக நாட்டிலே எவருமே தான் ஏகப் பிரதிநிதியென கேட்கமுடியாது, கூறமுடியாது என்ற அந்தக் காரணத்திற்காக நாங்கள் தெளிவாக ஒரு விசயத்தைச் சொல்லியிருந்தோம். புலிகள் ஏகப் பிரதிநிதிகள் அல்ல ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. இன்று அவர்களுடைய நிலைப்பாடு மாறியிருக்கின்றது. அது மாத்திரமல்ல அவர்களும், நாங்கள் முன்பு எதைச் சொன்னோமோ செய்தோமோ அதையே இப்போது சொல்லுகிறார்கள் செய்கிறார்கள். உதாரணத்திற்கு மக்களுடைய மீள்குடியேற்றம் பற்றி கதைக்கிறார்கள். அமைச்சர்கள் வடகிழக்குக்கு செல்லுகின்றபோது இவர்களும் அவர்களுடன் சென்று விசயங்களை நேரடியாகப் பார்க்கின்றார்கள். அமைச்சர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து சில விசயங்களைச் செய்விக்கின்றார்கள். இதைத்தான் நாங்கள் அன்று செய்தோம். அதைச் செய்கின்றபோதுதான் அதைத் புலிகள் தவறு என்றார்கள்,

ஏனென்றால் யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது, எந்தப் போராடுகின்ற ஒரு இயக்கத்திலும் இருக்கக்கூடிய ஒரு இயற்கையான எண்ணம் என்னென்றால் மக்கள் கஸ்ரத்தில் துன்பத்தில் இருந்தால்தான் இந்தப் போராட்டத்தில் பங்குபற்றுவார்கள். அவர்களுக்கு வசதிகள் கிடைத்துவிட்டால் அவர்கள் போராட்டத்திலிருந்து விலகிவிடுவார்கள் என்று. இந்தப் பயத்தில் நாங்கள் செய்வதை ஒரு தமிழ் மக்களுக்கு செய்யப்படுகின்ற ஒரு துரோகமாக புலிகள் கருதினார்கள். ஆனால் இன்று அந்த நிலைமைகள் எல்லாம் மாறிவிட்டது. பழையதைக் கதைத்துக் கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை. ஆகவே நாங்கள் ஒரு செய்தியை உலகத்திற்கு சொல்லவேண்டும். தமிழ் மக்கள் ஒரு சரியான தீர்வை வேண்டி நிற்கின்றார்கள் என்று ஒரு செய்தியை சொல்ல வேண்டுமென்ற காரணத்திற்காக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாங்கள் சேர்ந்து போட்டியிடுகின்றோம். அதற்காக அரங்கு அற்றுப் போய்விட்டதென்றில்லை. ஏனென்றால் நாங்கள் முக்கியமாக இந்த மேற்குலக இராஜதந்திரிகளுடன் கதைத்தால் என்ன, இந்திய அரசுடன் கதைக்கின்ற போதுகூட அவர்கள் ஒரு விசயத்தை எங்களுக்கு தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் வித்தியாசம் வித்தியாசமான தீர்வுத் திட்டங்களை முன்வைக்கின்றீர்கள். ஆகவே எந்தத் தீர்வுத் திட்டத்திற்கு நாங்கள் அழுத்தம் கொடுப்பதென்று தெரியாமலிருக்கின்றது. நீங்கள் அனைத்துக் கட்சிகளுமாக ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வையுங்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு அரசின்மீது ஒரு அழுத்தத்தைக் கொடுக்க முடியும். இந்த ஒரு காரணத்திற்காகத்தான் நாங்கள் அனைவருமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, டக்ளஸ் தேவானந்தா உட்பட அனைவருமாக ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியுமா என்ற முயற்சிதான் இந்த அரங்கு. அது ஒரு அரசியல் கூட்டு அல்ல. ஆகவே அரங்கு தேர்தலிலே நிற்க முடியாது. நிற்கவும் கூடாது. நின்றால் என்ன நோக்கத்திற்காக அந்த அரங்கை ஆரம்பித்தோமே அந்த நோக்கமே அற்றுப் போய்விடும். அதற்காகத்தான் நாங்கள் இன்று தனித்தனியே கேட்கின்றோம். ஆனால் அரங்கு இருக்கின்றது. அரங்கின் கூட்டம் மிக விரைவிலே நடக்க இருக்கின்றது. அதேபோல அரங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய பேச்சுவார்த்தைகளும் நடக்கவிருக்கின்றது. இதுவெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கும்.

கேள்வி: தமிழ் அரங்கு மலையக கட்சிகளை இணைத்துக் கொள்வது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன?

பதில்: நிச்சயமாக மலையக கட்சிகள் மாத்திரமல்ல, முஸ்லிம் கட்சிகளும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். இப்போது மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியினர் தொடர்ந்து எங்களுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்கிறார்கள். அவர்களின் கட்சி சார்பில் செயலாளர் கலாநிதி குமரகுருபரன் அவர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் பங்குபற்றி வருகின்றார். அவர் தொடர்ந்து தங்கள் கருத்துக்களைக் கூறி வருகின்றார். இதேபோல மற்றைய கட்சிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்றைய கட்சிகளும் அந்த அரங்குக்கு வரவேண்டும். அதேபோல ஒத்த கருத்துள்ள முஸ்லிம் கட்சிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வடகிழக்கு பிரச்சினை என்று பார்க்கின்றபொழுது முஸ்லிம் மக்களுடைய பயங்களுக்கு அபிலாசைகளுக்கு ஒரு தீர்வின்றி வடகிழக்கு பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு காணமுடியாது. ஆகவே முஸ்லிம் கட்சிகளின் அபிப்பிராயங்களும் கருத்துக்களும் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு உருவாக்கப்பட வேண்டுமென்பது ஒரு முக்கியமான விடயமாகும். அதேபோல மலையக கட்சிகளுக்கும் அவர்களுக்கும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை நாங்கள் அனைவரும் எடுப்போமென்றால் ஒரு வலுவைக் கொடுக்க முடியும். அந்த ரீதியிலே அவர்களையும் சேர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளை நாங்கள் இப்போதும் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். வருங்காலங்களில் கூடுதலாக எடுப்போம். முதலிலே நாங்கள் பார்ப்பது என்னவென்றால் வடகிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய கட்சிகள் மத்தியிலே ஒரு ஒற்றுமைப்பாட்டைக் கொண்டுவர வேண்டும். ஏனென்றால் இதுவே ஒரு பெரிய வேலையாக இருக்கின்றது. வடகிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய கட்சிகளுக்கிடையே ஒரு ஒற்றுமையைக் கொண்டுவந்து அதற்கு அடுத்ததாக அடுத்த பணிகளுக்குச் செல்லவேண்டும் என்பதிலே நாங்கள் அக்கறையாகவே இருக்கிறோம்.

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசியல் கட்சிகள் அவர்களுடைய தேர்தல் காலங்களிலேதான் கூடுதலாக கதைக்கின்றார்கள். அது தொடர்பாக உங்களுடைய கருத்தென்ன?

பதில்: இந்தியா என்று பார்க்கின்றபோது, வடகிழக்கு அரசியல் கட்சிகளைப் பொறுத்தமட்டில் நீண்டகாலமாக அதாவது தந்தை செல்வநாயகம் காலம்தொடக்கமே தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்புடன் பேசி வருகின்றோம். 83ம் ஆண்டு கலவரத்தின் பிறகு மத்திய அரசு நேரடியாக இதிலே தலையிடுகின்ற நிலைமை இருந்தது. ஆனாலும் எங்களைப் பொறுத்தமட்டில் ஒரு விசயத்திலே நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும், இந்திய அரசோ அல்லது எந்த நாடுமோ தன்னுடைய நலன்களைத்தான் முன்னிலைப்படுத்தும். அதற்குள்ளே வரக்கூடிய அளவில்தான் எங்களுடைய நலன்களை அவர்கள் முன்னெடுப்பார்கள். ஆகவே அவர்கள் எங்களுடைய பிரச்சினையை பிரத்தியேகமாக தமிழ்நாட்டிலே தங்களுடைய அரசியலுக்குப் பாவிப்பார்கள், பாவிக்கிறார்கள, பாவித்தார்கள். இது எங்களுக்கு நிச்சயமாக தெரியும். ஆனால் அதேநேரத்தில் இந்தியத் தமிழர்களைப் பொறுத்தமட்டில் இலங்கையிலே வாழுகின்ற தமிழர்கள், மலையகத்தில் வாழ்ந்தாலென்ன, வடகிழக்கில் வாழ்ந்தாலென்ன, ஒரு நியாயமான தீர்வை எடுத்து வாழவேண்டுமென்பதில் பெரும்பான்மையான மக்கள் இன்றும் விரும்புகின்றார்கள். கட்சிகள் சில வேளைகளில் தங்களுடைய தேர்தல் நோக்கங்களுக்காக இவ்விடயங்களைப் பாவிக்கலாம், சில கட்சிகள் எல்லைமீறிச் சென்று இன்றும் போராட்டம், ஆயுதப் போராட்டத்தைப் பற்றியெல்லாம் கதைக்கலாம். ஆனால் அவர்கள் மத்தியிலே தமிழ் மக்கள் தொடர்பாக ஒரு உணர்வு இருக்கின்றது. 83இலே மிகக் கூடுதலாக அந்த உணர்வு இருந்தது. ரஜீவ்காந்தி அவர்களுடைய கொலைக்குப் பின்னர் அவர்களுடைய உணர்வுகள் சரியாக மழுங்கடிக்கப்பட்டு, இன்று அவர்கள் 80களிலே நேரடியாக தலையிட்டபோது நிச்சயமாக இனிமேல் தலையிட மாட்டார்கள். இதிலே எந்தவிதமான ஒரு ஐயப்பாடுமில்லை.

அவர்களைப் பொறுத்தமட்டில் டெல்லியிலே அவர்கள் எங்களுடன் கதைக்கின்றபோது மிகத் தெளிவாக ஒரு விசயத்தைக் கூறுகின்றார்கள். 13ஆவது திருத்தம் பிளஸ் என்பதிலேதான் அவர்களுடைய கவனம் இருக்கின்றது. அந்த பிளஸ் என்னென்ன அதிகாரங்கள் என்பது உள்ளிட்ட விடயங்களை எங்களை (தமிழ்த் தரப்பை) அரசுடன் கதைக்கச் சொல்லுகின்றார்கள். இதற்கு சரியான தீர்வு வந்தால் அந்தத் தீர்வை அமுல்படுத்துவதிலே தாங்கள் முழுமையான தங்களுடைய கவனத்தைச் செலுத்துவதாக கூறுகின்றார்கள். அதேநேரத்திலே வடகிழக்கிலே இன்றைய அழிவுநிலையில் அவர்கள் அந்த மக்களுக்கான புனருத்தாபன வேலைகளுக்கு மிகப்பெரிய அளவிலே உதவிகளைச் செய்து வருகின்றார்கள். இதனை என்னால் பார்க்கக் கூடியதாக இருந்தது. 50ஆயிரம் வீடு கட்டும் பணிகளை முன்னெடுக்கிறார்கள், அதிலே சில தடைகள் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த வீடுகட்டும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. நாங்கள் அது சம்பந்தமாக இந்திய அதிகாரிகளுடனும் சில அரசியல்வாதிகளுடனும் கதைத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா அவர்கள் வந்தபோது, அதற்கான அத்திவாரக் கல்லைக்கூட வைத்தார். இன்னும் வேலைகள் சரியானமுறையில் ஆரம்பிக்கப்படவில்லை. நான் நினைக்கின்றேன் இந்த விடயத்தில் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்குமிடையில் இந்தக் காசை எவ்வாறு கொடுப்பது எவ்வாறு இவ்வேலைகளைச் செய்வது என்பதிலே இருக்கின்ற சில பிரச்சினைகள் காணப்படுகின்றது என்று, ஏனென்றால் இந்தியா பார்க்கின்றது தாங்கள் கொடுக்கின்ற ஒவ்வொரு ரூபாவும் அந்த மக்களைப் போய்ச் சென்றடைய வேண்டுமென்பதிலே அவர்கள் மிக கவனமாக இருக்கின்றார்கள். இப்படியான சில பிரச்சினைகள் இருந்தாலும் இந்த வேலைகளை செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் மீண்டும் நான் கூறுகின்றேன். எதை அவர்கள் செய்தாலும் இன்று அவர்கள் தங்களுடைய நலன்களைத்தான் நிச்சயமாக முதன்மைப்படுத்துவார்கள். இன்று பாகிஸ்தான், சைனா ஆகிய நாடுகளின் தலையீடுகள் இங்கே உள்ளன. அவர்கள் இங்கு வந்து அவர்களும் சில அபிவிருத்தி வேலைகளைச் செய்வதாகக் கூறி பல கோடிக்கணக்கான பணத்தை அரசுக்குக் கொடுத்து சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். இவையெல்லாம் இந்தியாவிற்குப் பிரச்சினையாக இருக்கின்றது. ஆகவே அதையெப்படி தாங்கள் சமாளிப்பது என்ற எண்ணங்கள், அதற்கான வேலைத்திட்டங்கள், இவைகளிலே அவர்கள் கட்டாயம் கவனம் செலுத்துவார்கள். அதேநேரத்தில் எங்களுடைய பிரச்சினையிலும் அவர்கள் சரியான அழுத்தங்களைக் கொடுத்து ஒரு தீர்வைக் கொண்டுவரும் முயற்சிகளை எடுக்கின்றார்கள் என்பதிலே எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கின்றது.

கேள்வி: அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெறவிருக்கின்றது, அதற்கான அழைப்பு உங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதா?

பதில்: இல்லை, இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே சேர்ந்து நாங்கள் தேர்தலில் போட்டியிடுகின்றோம். அண்மையில் ஜனாதிபதி அவர்கள் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்துக் கதைத்தபோது கூறியிருக்கின்றார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமல்ல, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுடனும் தான் நிச்சயமாக பேசவிருப்பதாக, ஆயினும் இன்னும் இதுவரை அப்படியான ஒரு அழைப்பு வரவில்லை. பத்திரிகைகளைப் படித்தே எங்களுக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிந்து கொண்டேன், ஆனால் இதுவரை எங்களுக்கு அப்படியான ஒரு அழைப்பு வரவில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசினாலே சரி, ஏனென்றால் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் ஒன்றாக தேர்தலில் நிற்பது மாத்திரமல்ல, இந்த விசயங்கள் சம்பந்தமாக கலந்துரையாட ஆரம்பித்திருக்கிறோம். ஆகவே எங்களுடைய கருத்துக்களும் அங்கு கூறப்படும். புளொட் தான் அதில கலந்துகொண்டு பேசி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்கிற நோக்கம் எங்களுக்குக் கிடையாது. பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும். அதில் யார் பேசினாலும் தீர்வு வரவேண்டும். எங்களைப் பொறுத்தமட்டில் யார் குத்தினாலும் அரசிதான் வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருக்கின்றது.

கேள்வி: யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

பதில்: ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தபோது நிச்சயமாக நாங்கள் உட்பட அனைத்து இயக்கங்களுமே, அந்த நேரத்திலே இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி துவக்கம் தமிழீழ கோசத்தை முன்வைத்தே ஆரம்பிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தமட்டில் அவர்கள் தான் 76ம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டிலே தமிழீழம் என்ற கோசத்தை முன்வைத்து 77ம் ஆண்டு பெருந்தொகையான மக்கள் அவர்களுக்கு வாக்களித்து மிகப்பெரிய அளவிலே அந்த தமிழீழக் கோரிக்கைக்கு அங்கீகாரம் கொடுத்து, அதன் பிறகு இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 83கலவரங்களுக்குப் பின்பு, தமிழீழம் தான் ஒரு கோரிக்கையாக வைத்து யுத்தம் நடத்தப்பட்டது. 87ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்பு எங்களுடைய இயக்கத்தைப் பொறுத்தமட்டில் மிகத் தெளிவாக நாங்கள் ஒரு விசயத்தை அறிந்திருந்தோம். இந்தியா எந்தக் காலத்திலும் இந்த நாட்டிலே ஒரு தனிநாட்டை உருவாக விடமாட்டார்கள். தமிழ் மக்களுக்கென ஒரு தனிநாடு உருவாக விடமாட்டார்கள் அல்லது இந்த நாட்டை இரண்டுபட விடமாட்டார்கள், என்பதை நாங்கள் மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டோம். எங்களுக்கு நேரடியாக பல இந்திய அதிகாரிகள், அரசியல்வாதிகள் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கை இரண்டாகப் பிரிவதை நாங்கள் அனுமிக்க மாட்டோமென்று. அதனால்தான் 87ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது 13ஆவது திருத்தம் தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய மாட்டாது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். எனினும் அதை ஒரு ஆரம்பமாக நாங்கள் ஏற்றுக்கொண்டோம். புலிகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்தும் தனிநாட்டுக்கான ஒரு போரை நடத்தினார்கள். இந்த யுத்தத்தை அவர்கள் நடத்திக் கொண்டிருந்தபோது நான் நினைக்கின்றேன் அவர்கள் தந்திரோபாயங்களில் பல தவறுகளை விட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள் என்று.

புலிகள் மிகப்பலமாக இருந்தகாலத்தில் ரணில் விக்கிரமசிங்கவினுடைய அரசு சமஷ்டி அமைப்பைக் கொடுப்பதற்குக்கூட தயாராக இருந்தது. சந்திரிகா அம்மையார் ஒரு தீர்வையே வைத்திருந்தார். இந்த ஒற்றையாட்சி முறைமையை நீக்கி, புலிகள் வராதபடியால்தான் அவரால் இதைச் செய்யமுடியாமற் போய்விட்டது. ஏனென்றால் அன்று இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அதை பாராளுமன்றத்தில் எதிர்த்தது மாத்திரமல்ல, அதை சரியான முறையில் அவரால் செய்யவிடாமல் புலிகள் வரவில்லையென்ற காரணத்தைக் காட்டி தடுத்துமிருந்தது. ஆகவே ஒரு தீர்வு வந்தும் ஒரு சமாதானம் வரமுடியாது என்ற ஒரு சாட்டைச் சொல்லி அதனை எதிர்க்கக்கூடிய ஒரு நிலைமையும் அன்று உருவாகியிருந்தது.

புலிகள் தனியே இராணுவ பலத்தை மாத்திரம் நம்பி தமது செயற்பாடுகளை செய்துகொண்டு போனதுதான் எங்களுடைய இந்தப் பின்னடைவுக்கு முக்கியமானதொரு காரணமாகும். இதை நாங்கள் அன்று கூறியபோது பலர் எங்களை துரோகி என்று கூறினார்கள். இன்று இந்த நிலைமையை உணருகின்றபோது இவர்கள் அன்று சொன்னதிலே ஒரு விசயமிருக்கின்றது என்று யோசிக்கிறார்கள். அதனால்தான் நாம் அன்றைக்கே கூறினோம் ஆயுதப் போராட்டத்தினால் ஈழத்தை நிச்சயமாக அடைந்துவிட முடியாது. இதை இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு சரியான பின்புலம் இல்லாமல் ஒரு பெரிய ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டுசெல்ல முடியாது என்பதை புலிகள் உணர மறுத்துவிட்டார்கள். உண்மையிலேயே பலமாக இருந்தபோது சிங்கள மக்களைப் பொறுத்தமட்டிலும் ஏதோ கேட்கிறதைக் கொடுத்து இந்தப் பிரச்சினையைத் தீருங்கள் என்ற ஒரு மனப்பான்மையில் இருந்தார்கள். இன்று சிங்கள மக்கள் மத்தியிலே பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் மத்தியிலே ஆக்கிரமிக்கப்பட்டவர்களும், ஆக்கிரமித்தவர்களும் என்ற ஒரு மனப்பான்மை இருக்கின்றது. தாங்கள் ஆக்கிரமித்தவர்கள் என்று நினைக்கிறார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தாங்கள் ஒரு தோற்றுவிட்ட இனமாக தம்மைப் பார்க்கிறார்கள். இதன்மூலம் ஒரு மிகப் பலவீனமான நிலையிலே நாங்கள் எங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டோம். இந்த நிலையிலே இருந்து நாங்கள் வெளியிலே வரவேண்டும். ஆயுதப் போராட்டம் நடக்கின்றபோதும்கூட எங்களுக்குத் தெரியும் இந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றியளிக்க மாட்டாதென்பதை அனைவருமே உணர்ந்திருந்தார்கள். புலிகளே உணர்ந்திருந்தார்கள். அவர்கள் நினைத்தார்கள், இப்படியே பத்து, இருபது, இருபத்தைந்து, முப்பது வருசம் போய்க்கொண்டு இருக்கின்றபொழுது இவர்கள் களைத்துப்போய் விட்டுவிடுவார்கள் என்று. ஆனால் நாங்கள் தான் களைத்துவிட்டோம். தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் களைத்துவிட்டோம்.

இன்று வெளிநாடுகளில் இருப்பவர்கள் அவர்கள் ஈழத்தைப் பற்றி கதைக்கலாம். ஏனென்றால் அவர்கள் களைக்கவில்லை. அவர்களுக்கு களைக்க வேண்டிய தேவையில்லை. அவர்களுக்கு கஷ்ரம் ஒன்றுமில்லை. நல்ல வருமானமிருக்கிறது, வசதியிருக்கிறது, இதையொரு பக்க வேலைகளாக பார்த்துக் கொண்டிருக்கிறார்களேயொழிய அவர்களுக்கு இங்கிருக்கின்ற மக்களுடைய கஸ்ரங்கள் விளங்கவில்லை. வடக்குக் கிழக்கிலே குறிப்பாக வடக்கிலே பார்த்தீர்களேயானால் ஒரு கலியாண வீடு நடத்துவதென்றால் கூட அப்பகுதியிலே இருக்கின்ற இராணுவ அதிகாரிக்கு அறிவிக்க வேண்டியிருக்கிறது. நாலுபேர் இன்றைக்கு வீட்டுக்கு வருவார்கள் என்று சொல்லவேண்டிய தேவை இன்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு திவசம் வைக்கிறதென்றால் கூட அறிவிக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு தூரம் கட்டுப்பாட்டுக்குள்ளே எங்களுடைய மக்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். இது இந்தப் போராட்டத்தின் தோல்வியின் பின்னணிதான், அதை நாங்கள் மறக்கவோ மறுக்கவோ முடியாது. ஆகவே இனி தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு என்றுமே தயாராக இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு நியாயமான தீர்வை முன்வைப்போமானால் சர்வதேசமும், முக்கியமாக இந்தியா ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதன்மூலம் ஒரு நியாயமான தீர்வைக் காணமுடியுமென்று நாங்கள் நம்புகின்றோம். இதைத்தான் இன்று செய்ய முடியும்.

ஊடகவியலாளர் : சிரமம் பாராது எங்கள் கலையகத்திற்கு வந்து உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தமைக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றிகளைக் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

நன்றி.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com